Skip to main content

இளம்பெண் திடீர் தற்கொலை! - உறவினர்கள் சாலை மறியல்!

Published on 17/08/2021 | Edited on 17/08/2021

 

The girl who passes away due to dowry torture ... Relatives involved in the riot

 

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே உள்ளது நல்லாபாளையம். இப்பகுதியில் வசிப்பவர் ஜெயபால் மகன் அருள் (27). இவருக்கும் அனுமந்தபுரம் என்ற கிராமத்தைச் சேர்ந்த சண்முகம் என்பவரது மகள் அல்லி (21) என்பவருக்கும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்திற்குப் பிறகு அல்லியின் மாமனார், மாமியார் அவரது கணவர் அருள் ஆகியோர் நகை, பணம் என வரதட்சணை கேட்டு அல்லியை துன்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.

 

இது சம்பந்தமாக உறவினர்கள் தலையிட்டு அவ்வப்போது அல்லியின் குடும்பத்தினரிடம் சமாதானம் பேசி அல்லியை கணவர் வீட்டில் வாழ வைத்து வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று மாலை கணவர் வீட்டில் அல்லி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக அல்லியின் தந்தை சண்முகத்திற்குத் தகவல் அளித்துள்ளனர். அருள் குடும்பத்தினர் உடனடியாக கண்டாச்சிபுரம் காவல் நிலையத்திற்குச் சென்று தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாகப் புகார் அளித்துள்ளனர். அவரது புகாரின்பேரில் போலீசார் நல்லாபாளையம் சென்று இறந்துபோன அல்லியின் உடலை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் அல்லிக்கு திருமணமாகி ஒரு வருடம் ஆவதால் அவரது இறப்பு குறித்து மேல் விசாரணைக்காக விழுப்புரம் கோட்ட ஆட்சியருக்கு காவல்துறையினர் பரிந்துரை செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து கோட்டாட்சியர் விசாரணை செய்து சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி அல்லியின் உறவினர்கள் பிரேதப் பரிசோதனை செய்த அல்லி உடலை வாங்க மறுத்துனர். மேலும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை அருகே சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

 

தகவலறிந்த விழுப்புரம் துணைக் கண்காணிப்பாளர் பழனிச்சாமி, விக்கிரவாண்டி காவல் ஆய்வாளர் விநாயக முருகன், உதவி ஆய்வாளர்கள் பரணிதரன், கண்டாச்சிபுரம் உதவி ஆய்வாளர் அன்பழகன் மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். உடனடியாக விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாகவும் மேலும் கோட்டாட்சியர் விசாரணை அறிக்கை கிடைத்தவுடன் துரித நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீஸ் அதிகாரிகள் அளித்த உறுதிமொழியின் பேரில், அல்லியின் உறவினர்கள் சாலை மறியலை கைவிட்டு அல்லி உடலை பெற்றுச் சென்றனர். இதனால் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை எதிரில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 

 

 

சார்ந்த செய்திகள்