Skip to main content

கோவை அம்மா உணவகங்களில் ஜூன் 30 வரை இலவச உணவு நீட்டிப்பு!- அமைச்சர் வேலுமணி மீண்டும் ஏற்பாடு     

Published on 01/06/2020 | Edited on 01/06/2020
Free food extension at Coimbatore amma restaurants till June 30 - Minister Velumani

 

கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அம்மா உணவகங்களிலும் ஜுன் 30 ஆம் தேதி வரை 3 வேளையும் இலவச உணவு வழங்கப்படும் என அறிவித்துள்ளார் தமிழக உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி. கரோனா வைரஸ் பரவுதலை தடுக்க  நாடு முழுவதும் 5 - ஆம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், தமிழகத்திலும் பல்வேறு தளர்வுகள் மற்றும் நிபந்தனைகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கரோனா பாதிப்பு அதிகமுள்ள சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் தனியார் நிறுவனங்கள் திறக்கப்பட்டு பொது போக்குவரத்து தொடங்கப்பட்டிருக்கும் சூழலில், 5 ஆம் கட்ட ஊரடங்கை நடைமுறைப்படுத்தியிருக்கிறது எடப்பாடி பழனிசாமி அரசு. 


இந்த  நிலையில், கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 12 அம்மா உணவகங்களும், கோவை மாவட்டத்திற்குள் அடங்கிய வால்பாறை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில் தலா ஒரு அம்மா உணவகமும் இயங்குகிறது. இந்த 15 அம்மா உணவகங்களில் தினமும்   3 வேளைகளும் 20,000- க்கும் மேற்பட்டோர் சாப்பிடுவதாக மாவட்ட ஆட்சியர்  அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், தமிழக உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.  வேலுமணி ஏற்பாட்டில்,  ஏற்கனவே கடந்த ஏப்ரல் மாதம் முதல் கோவை மாவட்டத்தில் உள்ள 15 அம்மா உணவகங்களில் 3 வேளையும் இலவச உணவு வழங்கப்பட்டு வருகிறது. தற்போது ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருப்பதால்  கோவை மாவட்ட கலெக்டர் ராசாமணியை இன்று ( 1.6,2020 ) சந்தித்த அமைச்சர் வேலுமணி, "மாவட்டத்திலுள்ள 15 அம்மா உணவகங்களிலும் ஜூன் 30 வரை  இலவச உணவுகளை மூன்று வேளையும் வழங்கப்பட வேண்டும். 

இதில் எந்த சுணக்கமும் இருக்கக் கூடாது. அம்மா உணவகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் தகுந்த பாதுகாப்பு வசதிகளுடன் சமூக இடைவெளியை கடைபிடித்து பணிபுரிய வேண்டும்" என்று அறிவுறுத்திய வேலுமணி, கடந்த  மே 31 ஆம் தேதி வரை இலவச உணவுகள் வழங்கப்பட்டதற்கானசெலவுத் தொகை  61 லட்சத்து 19 ஆயிரம் ரூபாயும்,  ஜுன் மாதம் 30 வரை இலவச உணவு வழங்குவதற்கான முன் பணம் ரூபாய் 25 லட்சமும் என மொத்தமாக  86 லட்சத்து 19 ஆயிரம் ரூபாயை ரொக்கமாக வழங்கினார் அமைச்சர் வேலுமணி.  அவருடன் தமிழக துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் கோவை சட்டமன்ற உறுப்பினர்களும் உடனிருந்தனர்.

 

 


ஊரடங்கு முடியும் வரை கோவை மாவட்ட அம்மா உணவகங்கள் மூலம் பொதுமக்களுக்கு இலவச உணவு வழங்குவதற்கான செலவை மாவட்ட அதிமுக ஏற்கும் என்கிற உறுதியையும் கலெக்டர் ராசாமணியிடம் தெரிவித்திருக்கிறார் அமைச்சர் வேலுமணி. அம்மா உணவகங்கள் மூலம் தொடர்ந்து இலவச உணவு வழங்குவதை நிறைவேற்றி வரும் அமைச்சர் வேலுமணியை தொடர்ந்து, ஒவ்வொரு மாவட்ட அமைச்சருக்கும், அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்குவதை உறுதி செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

 

 


 

சார்ந்த செய்திகள்