கடலூர் மாவட்டம் விருத்தாசலம் திரு. கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரியில், 1994 முதல் 1997 வரை பயின்ற விலங்கியல் துறை மாணவர்கள், தாங்கள் படித்த கல்லூரியில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு பசுமை நிறைந்த நினைவுகளுடன் சங்கமித்த நிகழ்வு அனைவரையும் நெகிழ்ச்சியடையச் செய்தது.
40க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் தங்களது குடும்பத்துடன் ஒன்றிணைந்து, கல்வி பயிற்றுவித்த பேராசிரியர்களை கௌரவிக்கும் வகையில் பொன்னாடை அணிவித்தும், நினைவுப் பரிசு வழங்கியும் மரியாதை செலுத்தினார்கள். கல்லூரி முதல்வர் ராஜவேல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் விலங்கியல் துறையின் முன்னாள் துறைத் தலைவர் பேராசிரியர் வெங்கடேசன், முன்னாள் பேராசிரியர்கள் கதிர்வேல் தற்போதைய விலங்கியல் துறைத் தலைவர் செந்தில்குமார், பேராசிரியர்கள் சண்முகம், முத்தழகி, பவானி, கல்லூரி முதல்வர் பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் மாணவர்கள் சங்க தலைவர் சுந்தரபாண்டியன், நிர்வாகிகள் ரெங்கப்பிள்ளை, செல்லத்துரை, புலேந்திரன், வெங்கடகிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
இந்த நிகழ்ச்சியில் அனைத்து முன்னாள் மாணவர்களும் தாம் பயின்ற காலங்களில் நடந்தவை பற்றியும், பேராசிரியர்கள் பற்றியும், கல்லூரி கால நிகழ்வுகள் பற்றியும் ஒருவரோடு ஒருவர் பகிர்ந்து, மகிழ்ச்சியை வெளிப்படுத்தியும், தற்போதைய பணிகள், குடும்ப வாழ்வு குறித்தும் கலந்துரையாடினர். பின்னர் பேராசிரியர்களுடன் தன் படம், குழு படம் எடுத்துக் கொண்டனர். மேலும் துணைவர், துணைவி, பிள்ளைகள் என குடும்பம் குடும்பம் என குழு குழுவாக பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தி மகிழ்ந்தனர்.
இந்நிகழ்வுகளை விலங்கியல் துறை முன்னாள் மாணவர்கள் வேப்பூர் ரவிக்குமார், விருத்தாசலம் வேல்முருகன், சுலைமான், முதுகுளம் சுரேஷ், பாண்டியன், சிங்கப்பூர் சித்ரா ஆகியோர் ஒருங்கிணைத்தனர். தெய்வாணை, கீதா, அனிதா, மங்கையர்க்கரசி, இளையராஜா, செந்தில் உள்ளிட்ட பலர் தங்களது குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர். இறுதியில் அடுத்த சந்திப்பு எப்போதோ...? என ஆனந்த கண்ணீருடன் பிரியா விடை பெற்ற காட்சி நெகிழ்ச்சியாக இருந்தது.