Skip to main content

இறப்பை ஏற்றுக்கொண்ட திமுக முன்னாள் எம்.பி; கண்ணீர் விட்டு அழும் மக்கள்

Published on 15/02/2024 | Edited on 16/02/2024
Former DMK MP Venugopal accepts his passed away

திருவண்ணாமலை மாவட்டம், திருவண்ணாமலை ஒன்றியம் காட்டாம்பூண்டி கிராமத்தில் விவசாய குடும்பத்தைச் சேர்ந்த தனபால் – தனபாக்கியம்மாள் தம்பதியரின் ஒரே மகனாக 5.11.1936ல் பிறந்தவர் த. வேணுகோபால். பட்டபடிப்பு எல்லாம் படிக்காதவர். 1960 ஆம் ஆண்டு காட்டாம்பூண்டி ஊராட்சியின் ஊராட்சி மன்றத் தலைவராக அவரது 24வது வயதில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்தார். 1970ல் திருவண்ணாமலை ஒன்றியத்தில் ஒன்றிய பெருந்தலைவர் தேர்தல் நடைபெற்றது. அதில் கவுன்சிலராக வெற்றி பெற்றிருந்தார். அப்போது உள்ளாட்சி மற்றும் உணவுத்துறை அமைச்சராக இருந்த ப.உ. சண்முகம் காங்கிரஸ் கட்சியிலிருந்த த. வேணுகோபாலை தி.மு.கவில் சேர்த்து அவரை திருவண்ணாமலை ஒன்றிய பெருந்தலைவராகத் தேர்ந்தெடுக்க செய்தார். இவர் ஒன்றிய பெருந்தலைவராக இருந்த காலத்தில் ஊராட்சி ஒன்றியத்தில் தான் தி.மு.க பெரிதாக வளர்ந்தது.

வேணுகோபால் ஒன்றிய பெருந்தலைவராய் பதவி வகித்த காலத்தில், திருவண்ணாமலை ஒன்றியத்தில் கிராமங்களுக்கு தார்ச்சாலை அமைத்தார். கிராமங்களுக்கு இடையிலான இணைப்பு சாலைகள், மாநில நெடுஞ்சாலைகளோடு கிராம சாலைகள் இணைப்பு, கிராமங்களில் பள்ளிக் கட்டடங்கள் எனப் பலவற்றைக் கொண்டுவந்தார். இதனால் 1977 ஆம் ஆண்டு அதிமுகவின் எம்.ஜி.ஆர் அலை வீசிய நிலையில் தண்டராம்பட்டு தொகுதியில் திமுக வேட்பாளராக நிறுத்தப்பட்டார். அதிமுக வேட்பாளர் ஆவூர் ராமலிங்கத்தை தோற்கடித்து முதல்முறை எம்.எல்.ஏவானார். 1980 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் வேணுகோபால் நிறுத்தப்பட்டார். இவரை எதிர்த்து அதிமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் காசிநாதனுக்கு சீட் தரப்பட்டது. காசிநாதனை தோற்கடித்து இரண்டாவது முறையாக எம்.எல்.ஏவானார்.

1984 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட எ.வ.வேலுவிடம் தோல்வியடைந்தார். அதன்பின் நாடாளுமன்ற வேட்பாளராக களமிறக்கப்பட்டார். 1991ல் வந்தவாசி நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். 1996, 1998, 1999, 2004 ஆண்டுகளில் திருப்பத்தூர் நாடாளுமன்ற உறுப்பினராகவும், 2009ல் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றார். 2009 ஆம் ஆண்டு இவரை எதிர்த்து அதிமுக கூட்டணியில் பாமக சார்பில் போட்டியிட்ட வன்னியர் சங்க காடுவெட்டி குருவை தமிழ்நாட்டிலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றார். தொடர்ச்சியாக ஐந்து முறை ஒரே தொகுதியில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சட்டமன்ற உறுப்பினராக இருந்தவரை சொந்தமாக கார் கூட வாங்கவில்லை. பேருந்தில் தான் பயணம் செய்து வந்தார். தனது சொந்த ஊரான காட்டாம்பூண்டியில் இருந்து தினமும் பேருந்தில் திருவண்ணாமலைக்கு வருவார். காமராஜர் சிலை அருகே இறங்கி திருவூடல் தெருவில் உள்ள தனது வீட்டுக்கு நடந்தே வருவார். கார் வாங்கிய பிறகும் இவரது மனைவி தனது உடல்நிலைக்கு மருந்து, மாத்திரை வாங்க வீட்டிலிருந்து 1.கி.மீ தூரமிருந்த அரசு மருத்துவமனைக்கு நடந்தே சென்று சிகிச்சை பெற்றுக்கொண்டு வருவார்.

ஊராட்சி மன்றத் தலைவராக, ஒன்றிய பெருந்தலைவராக, கூட்டுறவு சங்க தலைவராக, சட்டமன்ற உறுப்பினராக, நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த வேணுகோபால். திமுகவில் கடந்த 33 ஆண்டுகளாக தெற்கு மாவட்ட கழக அவைத் தலைவராக இருந்து வந்தார். திமுகவில் அமைச்சராக, வலிமைமிக்கவராக இருந்த ப.உ.ச, பதவிக்காக எம்.ஜி.ஆர் தலைமையிலான அதிமுகவுக்கு சென்றார். அப்போது தன்னுடன் அதிமுகவுக்கு வருமாறு வேணுகோபாலை அழைத்தபோது, திமுகவை விட்டு வரமாட்டேன் என மறுத்துவிட்டார். அதேபோல் 1993களில் வை.கோ திமுகவில் இருந்து விலகி தனிக்கட்சி உருவாக்கியபோது, இவரை வை.கோவுடன் செல்லுங்கள் என சில உட்கட்சி பிரபலங்கள் வலியுறுத்தினர். அப்போது தென்னாற்காடு மாவட்டத்தில் வலிமையாக இருந்த செஞ்சி. ராமச்சந்திரன்  வேணுகோபாலை அழைத்தபோது, பதவிக்காக நான் கட்சி மாறுபவனல்ல என மறுத்துவிட்டார்.

நாடாளுமன்றம் இல்லாத சமயங்களில் தினமும் காட்டாம்பூண்டியில் உள்ள தேநீர் கடையில் சாதாரணமாக காலை, மாலை உட்கார்ந்து தேநீர் அருந்துவார். கட்சியினர், பொதுமக்கள் எனப் பலரையும் அங்கே சந்திப்பார். திருவண்ணாமலையில் உள்ள வீட்டுக்கு வந்தபின் மாவட்டம் முழுவதும் தனது தொகுதியிலிருந்து வரும் கட்சியினரை சந்திப்பார்.

யார் அழைப்பிதழ் தந்தாலும் தவறாமல் கலந்துகொள்வார். கட்சிக்காரன், கட்சி விசுவாசி என்றால் எந்த பிரதிபலனும் பாராமல் அவர்கள் கேட்பதை செய்து தருவார். அமைதியானவர் எனப் பெயரெடுத்தவர் நாடாளுமன்றத்தில் கட்சிக்கு விரோதமாக செயல்படுபவர்கள் குறித்து கலைஞருக்கு உடனுக்குடன் தகவல் தெரிவிப்பார். பலருக்கும் தெரியாதது அவர் உருது ஓரளவு பேசுவார். இவருக்கு கழகத்தின் உயரிய விருதுகளில் ஒன்றான தந்தை பெரியார் விருது வழங்கியது திமுக தலைமை.

திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, நாட்றாம்பள்ளி, வாணியம்பாடி, திருவண்ணாமலை, செங்கம், கீழ்பென்னாத்தூர் தொகுதிகளில் 80 சதவித கிராமங்களில் தனது எம்.எல்.ஏ நிதி, எம்.பி நிதியில் இருந்து பள்ளிக்கூடம், குடிநீர் மேல்நிலைத்தொட்டி, சாலை வசதிக்கு முக்கியத்துவம் தந்து நிதி ஒதுக்கி பணிகள் நடைபெற்றதை அக்கிராமங்களில் உள்ள கல்வெட்டுகள் மூலமாக காண முடியும்.

மாவட்டத்தில் மெஜாரிட்டியான வன்னியர் சமுதாயத்தை சேர்ந்தவராக இருந்தபோதிலும் மாவட்ட கழகத்தில் தனக்கென கோஷ்டி உருவாக்கிக் கொள்ளாதவர். கட்சி என்ன சொல்கிறதோ அதை அப்படியே ஏற்றுக்கொண்டு செயலாற்றி வந்தார். அரசியலுக்காக சாதி, மத மோதல்களை, கோஷ்டிகளை உருவாக்காமல் செயலாற்றி வந்தார். இதனாலயே ஒரே தொகுதியில் 5 முறை அவரால் வெற்றி பெற்று எம்.பியாக முடிந்தது.

கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சிலர் அவரை அவமானப்படுத்துவதாக நெருங்கிய வட்டாரங்களில் புலம்பிக்கொண்டு இருந்தார். கடந்த சில ஆண்டுகளாக வன்னியகுல சத்திரிய மடாலயத்தின் தலைவராகப் பதவி தந்து வைத்திருந்தனர். அரசியலில் சாதி, மதம் கடந்து செயலாற்றியவரை சாதி அமைப்புக்கு தலைவராக்கிட்டாங்களே என பலரும் விமர்சித்து வந்தனர். கடந்த சில மாதங்களாக வயது மூப்பின் காரணமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாலும் கட்சி நிகழ்ச்சிகளில் அவர் தொடர்ச்சியாக கலந்துகொண்டார்.

இந்நிலையில் பிப்ரவரி 14 ஆம் தேதி திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடல் பரிசோதனையில் இதயத்தில் பிளாக் இருப்பது தெரியவந்தது. 85 வயது கடந்தவருக்கு ஆபரேஷன் செய்வது ரிஸ்க் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். நான் ஆபரேஷன் செய்துக்கிட்டு வீட்டில் படுத்துக்கிட்டா என்னை பார்த்துக்க யார் இருக்கா? (அவரது மனைவி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்) விடுங்க நடப்பது நடக்கட்டும் எனத் தனது இறப்பை அறிந்துகொண்டு ஆபரேஷனுக்கு மறுத்துவிட்டார். பிப்ரவரி 14 ஆம் தேதி மாலை முதல் அவருக்கு பல்ஸ் ரேட் குறையத் தொடங்கியது. பிப்ரவரி 15 ஆம் தேதி மதியம் அவரது உயிர் மருத்துவமனையில் பிரிந்தது.

மாவட்டத்தின் மூத்த நிர்வாகியான முன்னாள் எம்.பி. திமுகவின் விசுவாசி மறைந்ததை தொடர்ந்து ஆயிரக்கணக்கான திமுக தொண்டர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்த குவியத் தொடங்கியுள்ளனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

'குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்கப்படும்' - அமைச்சர் முத்துசாமி

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் தண்ணீர் வேகமாகக் குறைந்து வருகிறது. இருப்பினும் மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று வீட்டு வசதி துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி கூறியுள்ளார்.

அவர் ஈரோடு காந்திஜி சாலையில் திமுக சார்பில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 'பவானி சாகர் அணையில் மட்டுமல்லாமல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மின் உற்பத்தி அணைகளிலும் தண்ணீர் மிக குறைவாக உள்ளது. எங்களுக்கு கீழ் பவானி பாசனப்பகுதியில் உள்ள புஞ்சை பயிர்களுக்கு ஐந்தாவது நினைப்பிற்கு தண்ணீர் விட வேண்டும் என்பது ஆசைதான். ஆனால் நீர் இருப்பு அணையில் இல்லை. தமிழக முதலமைச்சர் 22 மாவட்டங்களுக்கு குடி தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க ரூபாய் 150 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். ஈரோடு மாவட்டத்திலும் எந்தக் குடிதண்ணீர் பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார். ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டு அதிக உஷ்ணம் நிலவுகிறது. சாலை விரிவாக்கத்திற்காக பல இடங்களில் மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. அவ்விடங்களில் மரக்கன்றுகள் நட நடவடிக்கை எடுக்கப்படும். நீலகிரி மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் 26 நிமிடங்கள் பழுது அடைந்தது குறித்து திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது'' என்றார்.

ஈரோடு மாநகர மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியம் பகுதிச் செயலாளர் அக்னி சந்துரு மூன்றாம் மண்டல தலைவர் சசிகுமார் உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.