Skip to main content

மலர் மலர்ந்தும் கொள்வாரில்லை, சாமந்திப்பூ விவசாயிகள் கண்ணீர்! 

Published on 21/04/2020 | Edited on 21/04/2020

கரோனா ஊரடங்கு உத்தரவால் விளை பொருள்களை ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்திற்கு கொண்டு செல்வதில் நடைமுறைச் சிக்கல் நீடித்து வருகிறது. காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களுக்கு தேவை இருப்பதால் அவ்வகை பயிர்களை நடவு செய்த விவசாயிகள் ஓரளவு நட்டத்தில் இருந்து தப்பித்துக் கொள்கின்றனர்.


அதேவேளையில், மலர் சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகள் கடும் நட்டத்திற்கு ஆளாகி உள்ளனர். சேலம் மாவட்டம் ஓமலூர், காடையாம்பட்டி சுற்றுவட்டார கிராமங்களில் பல நூறு ஏக்கர் நிலத்தில் சாமந்தி பயிரிடப்பட்டு வருகிறது. தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், அனைத்து இடங்களிலும் மலர் சந்தைகள் மூடப்பட்டுள்ளன. சென்ட் தயாரிக்கும் தொழிற்சாலைகளும் மூடப்பட்டுள்ள நிலையில், சாமந்திப் பூக்கள் பூத்துக்குலுங்கியும், கொள்வாரில்லாத நிலையில் விவசாயிகள் கண்ணீர் சிந்தி வருகின்றனர்.  flowers and farmers tamilnadu lockdown

சாமந்திப் பூக்களை பறித்தாலும் அதற்கான ஆள் கூலிக்குகூட வருவாய் இல்லாததால், வேறு வழியின்றி அவற்றை தோட்டத்திலேயே அழிக்கும் வேலைகளில் விவசாயிகள் இறங்கியுள்ளனர். ஓமலூர் வட்டாரத்தில் சர்க்கரை செட்டிப்பட்டி, தும்பிப்பாடி, கெண்டபெரியன்வலசு, பூசாரிப்பட்டி, தாராபுரம், கஞ்சநாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 100- க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள சாமந்திப் பூச்செடிகளை விவசாயிகள் வயலோடு டிராக்டர்கள் மூலமாக உழவு ஓட்டி அழித்து வருகின்றனர். மலர் விவசாயிகளுக்கு அரசு உரிய இழப்பீடுகளை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர், விவசாயிகள்.


 

சார்ந்த செய்திகள்