Published on 24/07/2018 | Edited on 24/07/2018
சென்னை கடற்கரையில் இருந்து திருமால்பூர் நோக்கி மின்சார விரைவு ரெயில் இன்று காலை 8.10 மணிக்கு புறப்பட்டுச் சென்றது. இந்த ரயிலில் கூட்டம் அதிகமாக இருந்ததால் பயணிகள் படிக்கட்டில் தொங்கிகொண்டு பயணித்தனர். பரங்கிமலை ரயில்நிலையத்தில் பக்கவாட்டு சுவரில் மோதி பயணிகள் சிலர் கீழே விழுந்தனர். இதில் 5 பேர் பலியானார்கள். மேலும் சிலர் படுகாயங்களுடன் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தகவல் அறிந்த பலியானவர்களின் உறவினர்களும், படுகாயம் அடைந்தவர்களின் உறவினர்களும் ராயப்பேட்டை மருத்துவமனைக்கு பதறி அடித்துக்கொண்டு ஓடி வந்தனர். அங்கு அவர்கள் கதறி அழுத காட்சி அனைவரையும் கண்கலங்க வைத்தது. ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு வந்த அமைச்சர் ஜெயக்குமார் படுகாயம் அடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். சிகிச்சை அளிக்கப்படும் விவரங்களை கேட்டறிந்தார்.
பின்னர் பலியானர்களின் உறவினர்களை சந்தித்தார். அப்போது அவர்கள் கதறி அழுதனர். அவர்களுக்கு ஆறுதல் சொல்ல முடியாமல் தவித்த அமைச்சர் ஜெயக்குமாரும் கலங்கினார்.