Skip to main content

'ஆன் தி வே...'- இந்த ஆண்டின் முதல் புயல் 'மோக்கா'

Published on 09/05/2023 | Edited on 11/05/2023

 

First Cyclone of the Year 'Mocha'

 

தமிழகத்தில் ஐந்து நாட்களுக்கு மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இதுதொடர்பான அறிவிப்பில் வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி இன்று மாலை காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மேலும் வலுப்பெறும் எனவும், இது வலுப்பெற்று புயலாக மாறி வங்கதேசம்-மியான்மரை நோக்கிச் செல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

வங்கக் கடலில் கடந்த ஆறாம் தேதி உருவாகிய மேலடுக்கு சுழற்சியானது தொடர்ந்து வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வலுவடைந்து காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறியது. அந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மேலும் வலுவடைந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறும் எனக் கூறப்பட்டுள்ளது. இது மேலும் வடக்கு-வட மேற்கு திசையில் நகர்ந்து புயலாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வரும் பத்தாம் தேதி புயலாக மாறுவதற்கு வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனுடைய பாதை வடமேற்கு திசையிலிருந்து வடக்கு -வடகிழக்கு திசையில் கொஞ்சம் கொஞ்சமாக நகரத் தொடங்கி வங்கதேசம் - மியான்மர் கடற்கரையை நோக்கி புயல் நகரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் வெப்பநிலை படிப்படியாக அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வருடத்தில் உருவாக இருக்கும் இந்த முதல் புயலுக்கு 'மோக்கா' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த பெயர் ஏமன் நாட்டால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

 

புயல் எச்சரிக்கை காரணமாக பழவேற்காட்டில் மூன்றாவது நாளாக 5000க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. அதேபோல் கன்னியாகுமரியிலும் புயல் சின்னம் காரணமாக குளச்சல், முட்டம் பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை, சுமார் 10,000 பைபர் படகு மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் படகுகளை துறைமுகங்களில் நிறுத்தி வைத்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்