Skip to main content

மோசடி... கொலை மிரட்டல்... மாஜி அமைச்சர் மீது பெண் தொழிலதிபர் புகார்!

Published on 05/11/2021 | Edited on 05/11/2021

 

Female businessman complains about former minister

 

அ.திமு.க.வின் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரான சி.விஜயபாஸ்கர் தன்னிடம் நகைகளை வாங்கி ஏமாற்றி மோசடி செய்துவிட்டு கொலை மிரட்டல் விடுப்பதாகவும் பாதுகாப்பு கேட்டு நெல்லை சரக டி.ஐ.ஜி.யான பிரவீன்குமார் அபிநபுவிடம் புகார் செய்திருக்கிறார் கேரள பெண் தொழிலதிபர்.

 

கேரளாவின் ஆலப்புழை மாவட்டத்திலிருக்கும் ஹரிப்பாடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜீவ். இவரது மனைவி ஷர்மிளா. தன் கணவர் ராஜீவுடன் நேற்று நெல்லை வந்த ஷர்மிளா நெல்லை சரக டி.ஜ.ஜி.யிடம் புகார் மனு அளித்துள்ளார். அந்த மனுவில், அவர் குறிப்பிட்டிருப்பது இது தான்.

 

'நானும் எனது கணவரும் கேரளாவின் திருவல்லாவில் பிரபல ரெடிமேட் நிறுவனத்தின் எக்ஸ்க்ளுசிவ் ஷோ ரூமை ஃப்ரான்சைஸ் அடிப்படையில் நடத்தி வருகிறோம். 2013ம் ஆண்டு தஞ்சையில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் எனது கணவரும் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரான சி.விஜயபாஸ்கரும் அறிமுகமானார்கள். பிறகு விஜயபாஸ்கர் பெங்களுர் வந்து செல்கிற போதெல்லாம்  பெங்களுர் ஓரியன் மாலில் உள்ள எங்களது கடைக்கும், பன்னாருகட்டாவிலுள்ள எங்களது வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்வார். அது சமயம் அவர் எங்களுடன் இணைந்து தொழிலில் முதலீடு செய்ய வேண்டும் என்று தெரிவித்தார். இந்நிலையில் பிரபல நகைக்கடை உரிமையாளர்கள் எனக்கு அறிமுகமானவர்கள் என்பதால் அவர்களை அறிமுகப்படுத்தும்படி  அவரும் அவரது மனைவியும் கேட்டுக் கொண்டதால், நான் அறிமுகம் செய்து வைத்தேன்.

 

Female businessman complains about former minister

 

2016ம் ஆண்டு அந்த நகைக்கடை உரிமையாளர் மீது மனக்கசப்பு ஏற்பட்டிருக்கிறது. அதன்பின் 2016 நவ்.6 அன்று எங்கள் மீது எர்ணாகுளம் கோட்டயம் காவல் நிலையத்தில் போலி வழக்குப்பதிவு செய்தனர். பிறகு போலீஸ் செல்வாக்கைப் பயன்படுத்தி நான் முறைப்படி 14 கோடிக்கு வரி செலுத்தி ரசீது பெற்று வங்கிக் கணக்கு மூலம் டிரான்சாக்சன் செய்து வாங்கிய நகைகளைச் சோதனை என்ற வகையில் என்னிடமிருந்து பறிமுதல் செய்து அதனை அபகரிக்கத் திட்டமிட்டனர். அது சமயம் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், அந்த நகைகளைத் தன்னிடம் ஒப்படைக்குமாறும் அதனைப் பணமாக மாற்றி தொழிலில் முதலீடு செய்து விடுவதாகவும், பின்னர் நகைகளைத் திருப்பிக் கேட்கும் பட்சத்தில் அதற்கு ஈடான பணம் தருவதாகவும், நம்பிக்கையுடன் சொன்னபோது அந்த நகைகளை மூன்று பகுதிகளாகப் பிரித்து சென்னை மற்றும் புதுக்கோட்டையிலுள்ள விஜயபாஸ்கர் இல்லத்திலும்,கோவையிலுள்ள அவரது மாமனார் வீட்டிலுமாக நானும் எனது கணவரும் 2017 ஜனவரியில் வந்து ஒப்படைத்தோம்.

 

2018ல் நாங்கள் தொழில் நிறுவனம் ஆரம்பிப்பதற்காக விஜயபாஸ்கரிடம் நகைகள் அல்லது அதற்கு ஈடான பணத்தைக் கேட்ட போது, வருமான வரித்துறை சோதனை குட்கா வழக்கு சோதனை சிபி.ஐ.யும் சோதனை மேற்கொண்டதால் தனக்குச் சிக்கல் ஏற்பட்டதால் இப்போது தரமுடியாது என்று சொன்னார். தொடர்ந்து வற்புறுத்திக் கேட்டதால் 2019 சென்னையில் ஒரு ஹோட்டலில் வைத்து 3 கோடி எங்களிடம் விஜயபாஸ்கர் கொடுத்தபோது உடன் அவரது நண்பர்கள் மூன்று பேர் இருந்தனர். இனிமேல் பணம் எதுவும் கேட்டால் உன்னையும் உனது மனைவியையும் கொன்று கல்குவாரியில் புதைத்து விடுவேன் என்று மிரட்டினார். அவர் அப்போது ஆளும் கட்சியில் அமைச்சராக இருந்தால் புகார் மனு கொடுக்க முடியவில்லை. தமிழ்நாட்டிற்கு வந்தால் எனக்கும் எனது கணவருக்கும் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் நாங்கள் கேரளாவில் தங்கியிருந்தோம் தற்போது தமிழக டி.ஜி.பி.யிடம் புகார் அளிக்க வேண்டியிருப்பதால், எனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளதால் நெல்லையிலுள்ள எனது வழக்கறிஞரை சந்திப்பதற்கும் சென்னை டி.ஜி.பியிடம் புகார் அளிப்பதற்கும், நீதிமன்றம் செல்லவும் கேரளாவிலிருந்து காரில் வரவேண்டியிருப்பதால் எனக்கும் எனது கணவருக்கு உரியப் பாதுகாப்பு அளிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்' என்று குறிப்பிட்ட மனுவை நெல்லை டி.ஐ.ஜி.யிடம் கொடுத்திருக்கின்றனர் ஷர்மிளா தம்பதியர்.

 

புகார் கொடுத்துவிட்டு வந்த ஷர்மிளா, முன்னாள் அமைச்சருக்கும் எனக்கும் கொடுக்கல் வாங்கல் இருக்கிறது. என்னிடமிருந்து வாங்கிய நகையை அவர் திருப்பித் தரவில்லை ஆதாரம் இருக்கிறது நான் நெல்லை வந்து செல்லவும் டி.ஜி.பியிடம் புகார் அளிக்கவும் தமிழகம் வரவேண்டியுள்ளதால் அவரது மிரட்டல் காரணமாகப் பாதுகாப்பு கேட்டுள்ளேன் என்றார். அது சமயம் அவரது வழக்கறிஞரான ராமசுப்புவும் உடனிருந்தார்.

 

அவர் இங்கே வந்து செல்ல வேண்டியிருப்பதால் பாதுகாப்பு கேட்டுள்ளார். அந்தப் புகார் மனு பரிசீலனையில் உள்ளது என்றார் நெல்லை சரக டி.ஜ.ஜி.யான பிரவீன்குமார் அபிநபு. முன்னாள் அமைச்சர் மீது கேரள பெண் தொழிலதிபர் கொடுத்துள்ள புகார் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

 


 

சார்ந்த செய்திகள்