
கரும்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் ஞானமூர்த்தி, தமிழக அரசின் மும்முனை மின்சார மின்தட பாதை உயர் அழுத்த மின்பாதை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், “விவசாயத்திற்கு வழங்கும் மும்முனை மின்சாரத்திற்கு தனி மின்தடை பாதை அமைக்கிறது தமிழக அரசு. இது எதிர்காலத்தில் விவசாயிகளுக்கு பேரிடியாக அமையும். மத்திய அரசின் கட்டளைக்கு பணிந்து விவசாயத்திற்கு வழங்கும் மும்முனை மின்சாரத்தை தனி உயர் அழுத்த மின்பாதை அமைத்து துரோகம் இழைக்க முயர்ச்சிக்கும் தமிழக அரசு.
விவசாயத்திற்கு தனி உயரழுத்த மின்பாதை அமைத்து மும்முனை மின்சாரம் வழங்கவேண்டும் என மத்திய அரசு தமிழ்நாடு அரசுக்கு கட்டளையிட்டதின் பேரில், தமிழக அரசு செயல்படுத்திகொண்டு வருகிறது.’ என்று தெரிவித்திருந்தார்.
மேலும் இதன் மூலம் ஏற்படும் பாதிப்புகள் என, ‘தமிழ்நாட்டில் விவசாயத்திற்கு வழங்கும் இலவச மின்சாரத்தை மாற்றி கட்டணம் வசூலிக்கவும், ஒருநாளைக்கு 8 மணி நேரம் மட்டுமே மின்சாரம் வழங்கவும், இருமுனை மின்சாரத்தை முழுவதுமாக நிறுத்தவும், விவசாயத்திற்கு வழங்கும் இலவச மின்சாரத்தை அளவீடு செய்து கூடுதல் கட்டணம் வசூல்செய்யவும் மதிய மாநில அரசுகள் இந்த திட்டத்தை மறைமுகமாக செயல்படுத்துகிறது.
இதன் முனோட்டமாக கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம், பெண்ணாடம் 110 KV, SSல் இருந்து மருதத்தூர் வழியாக தனி உயரழுத்த மின்பாதையில் மின்சாரம் வழங்குகின்றனர். இதில் ஒருநாளைக்கு 8 நேரம் மட்டுமே மின்சாரம் வழங்கப்படுகிறது. மற்ற நேரங்களில் மின்இணைப்பு வழங்குவதில்லை. இதனால் கொத்தட்டை, அருகேரி, நந்திமங்கலம், கோனூர், வடகரை, மேலூர், மருதத்தூர், டி. அகரம், கொல்லதங்குறிச்சி, வடகரை போன்ற 10க்கு மேற்பட்ட கிராமங்களில் மின்தடை ஏற்பட்டு நெல், கரும்பு போன்ற விவசாய பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதைப்போன்று நாடு முழுதும் உயரழுத்த மின்சாரத்திற்கு தனி மின் பாதை அமைக்கும் பணி கடந்த ஒரு ஆண்டாக நடைபெற்று வருகிறது. இந்த திட்டம் முழுமையாக நிறைவடையும்போது மத்திய அரசு அறிவித்த விவசாயத்திற்கு இலவச மின்சாரம் ரத்து என்கிற அதிர்ச்சியை விவசாயிகளுக்கு கொடுப்பார்கள். அதை தமிழக அரசு கைகட்டி வாய்பொத்தி ஏற்றுக்கொள்ளும்” என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.