Skip to main content

நிர்வாகிகள் தேர்தல்: தி.மு.க. மேலிடம் புதிய வியூகம்!

Published on 26/04/2022 | Edited on 26/04/2022

 

Executives Election: DMK Top New Strategy!

 

சேலம் உள்பட தமிழ்நாட்டில் கட்சி அமைப்பு மாவட்டங்களை முற்றிலும் மறுசீரமைக்க தி.மு.க. மேலிடம் திட்டமிட்டுள்ளது. 

 

தி.மு.க.வில் தற்போது 15- வது அமைப்புத் தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது பேரூர், நகர, மாநகர நிர்வாகிகளுக்கான தேர்தலையொட்டி வேட்புமனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. அமைப்புத் தேர்தலை நடத்தி முடித்து, புதிய நிர்வாகிகள் பட்டியலை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். 

 

அமைப்புத் தேர்தலை, எவ்வித சலசலப்புகளுமின்றி சுமூகமாக நடத்தி முடிக்க மூத்த அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்ட சீனியர்களுக்கு முக்கிய அஸைன்மெண்ட் தரப்பட்டுள்ளது. தி.மு.க.வில் அமைப்பு நிர்வாகிகள் தேர்தல் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட வேண்டும். ஆனால் கோஷ்டி பூசல், கட்சித் தலைவர் கலைஞரின் மறைவு உள்ளிட்ட காரணங்களால் கடந்த ஏழாண்டுகளுக்கு மேலாக அமைப்புத் தேர்தல் நடத்தப்படவில்லை.

 

எனினும், மாவட்டம், ஒன்றியம், நகரம் உள்ளிட்ட அனைத்து பதவிகளுக்கும் செயலாளர்களை நியமிக்காமல், பொறுப்பாளர்களை மட்டும் நியமித்து, கட்சிப் பணிகளை சூரியக்கட்சி மேலிடம் தொடர்ந்து செய்து வந்தது. பத்து ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியில் அமர்ந்த தி.மு.க., அமைப்புத் தேர்தலை முழுமையாக நடத்தி முடிக்கும் வேலையில் இறங்கியுள்ளது. 

 

தற்போது கட்சியின் அமைப்பு ரீதியான மாவட்டங்களை முற்றிலும் மாற்றி அமைக்க அறிவாலயம் தரப்பு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தொடர்பாக சூரிய கட்சியின் மூத்த நிர்வாகிகள் சிலர் நம்மிடம் பேசினர். 

 

''கட்சிக்குள் இருந்து கொண்டே தொடர்ந்து கோஷ்டி அரசியல் செய்து வரும் நிர்வாகிகள், தொடர் புகார்களில் சிக்கிய நிர்வாகிகள், செயல்பட முடியாத நிலையில் உள்ள வயதான நிர்வாகிகளுக்கு இனி கட்சி பொறுப்புகளில் இடமில்லை என்பதில் தளபதி உறுதியாக இருக்கிறார். 

 

கலைஞர் காலத்தில் இருந்ததுபோல் மாவட்டச் செயலாளர் பதவிகளில் குறிப்பிட்ட சிலரே நிரந்தரமாக ஒட்டிக்கொண்டு இருந்ததுபோல் எல்லாம் இனி இருக்க முடியாது. புகாரில் சிக்கும் மாவட்டச் செயலாளர்கள் யாராக இருந்தாலும், ஆதாரங்கள் அடிப்படையில்  உடனடியாக பதவியில் இருந்து நீக்கப்படுவார்கள். இதெல்லாமே ஜெ., ஸ்டைல் அரசியல்தான். 

 

இப்போது தமிழகத்தில் கட்சிக்கு அமைப்பு ரீதியாக 72 மாவட்டங்கள் உள்ளன. இந்த அமைப்பு முறையை கலைத்துவிட்டு, பழைய நடைமுறையை கொண்டு வரவும் கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளது. 

 

அதாவது, ஐந்து அல்லது ஆறு சட்டமன்ற தொகுதிகளுக்கு மேல் உள்ள மாவட்டத்தை இரண்டாக பிரித்து நிர்வாகிகள் நியமிக்கப்படுவர். இதற்கும் குறைவாக உள்ள மாவட்டங்கள் ஒரே செயலாளரின் கீழ் செயல்படும். 

 

சேலம் மாவட்டத்தைப் பொருத்தவரை தற்போது சேலம் மத்திய, சேலம் கிழக்கு, சேலம் மேற்கு என மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளன. இதை இனி சேலம் வடக்கு - தெற்கு அல்லது சேலம் கிழக்கு - மேற்கு ஆக பிரிக்கப்படும். இந்த மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளில் 6 தொகுதிகள் ஒரு மாவட்டச் செயலாளர் வசமும், 5 தொகுதிகள் மற்றொரு மாவட்டச் செயலாளர் வசமும் ஒப்படைக்கப்படும். 

 

மாவட்டச் செயலாளர் பதவிக்கு அந்தந்த பகுதிகளில் உள்ள பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு வாய்ப்பு அளிக்கப்படும். மற்ற கிளைகள், அணிகளில் அனைத்து சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்கும் உரிய பிரதிநிதித்துவம் வழங்கவும் மேலிடம் முடிவு செய்துள்ளது. 

 

கடந்த 1996- ல் சேலம் மாவட்டம் கிழக்கு, மேற்கு என அமைப்பு ரீதியாக இரண்டாகத்தான் பிரிக்கப்பட்டு இருந்தது. அப்போது கிழக்கில் எஸ்.ஆர்.சிவலிங்கமும், மேற்கு மாவட்டத்திற்கு மறைந்த வீரபாண்டி செழியனும் செயலாளர்களாக நியமிக்கப்பட்டு இருந்தனர். சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை உள்ளடக்கிய சேலம் மண்டல பொறுப்பாளராக அப்போது வீரபாண்டி ஆறுமுகம் நியமிக்கப்பட்டு இருந்தார். 

 

அதனால் இப்போது கொண்டு வரப்பட உள்ள சிஸ்டம் கூட, ஏற்கனவே நடைமுறையில் இருந்ததுதான். அதேநேரம், கட்சிப் பதவிகளில் இளைஞர்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்படும். கோஷ்டி கானம் பாடும் நிர்வாகிகள் யாராக இருந்தாலும் உடனுக்குடன் கட்டம் கட்டப்படுவார்கள்,'' என்கிறார்கள் கட்சியின் மூத்த நிர்வாகிகள். 

 

தற்போதைய அமைப்பு தேர்தலில், கடந்த 2017 வரையில் கட்சியில் உறுப்பினர் உரிமைச் சீட்டு பெற்றவர்கள் மட்டுமே போட்டியிட முடியும் என்றும் சொல்கிறார்கள் உடன்பிறப்புகள்.

 

காலத்திற்கு ஏற்ற மாற்றம் என்பதும் தவிர்க்க இயலாத ஒன்றுதானே. 

 

சார்ந்த செய்திகள்