Skip to main content

குப்பைக்கு வரி விதிப்பு; நூதன முறையில் ஆட்சியரை சந்திக்க வந்த மக்கள்

Published on 03/01/2023 | Edited on 03/01/2023

 

erode district collector office garbage tax  issue

 

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று  (திங்கட்கிழமை) மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. அதையொட்டி சொத்துவரி, வீட்டு வரி உயர்வைக் கண்டித்து ஈரோடு வரி செலுத்துவோர் மக்கள் நலச் சங்கத்தினர் நூதன முறையில் போராட்டம் நடத்தினர்.

 

ஈரோடு வரி செலுத்துவோர் மக்கள் நலச் சங்கத்தின் செயலாளர் பாரதி தலைமையில் நிர்வாகிகள் திரண்டு வந்து சொத்து வரி, வீட்டு வரி உயர்வைக் கண்டித்தும் குப்பைக்கு வரி விதிக்கப்பட்டதைக் கண்டித்தும் மனுக்களுடன் கையில் தட்டுடன் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. நிர்வாகிகள் கையில் ஏந்தி வந்த பதாகைகளில், “குப்பைக்கு வரி விதிக்காதே” “சொத்து வரி, வீட்டு வரி உயர்த்தாதே” போன்ற வாசகங்கள் இடம்பெற்று இருந்தன. கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க சென்றபோது போலீசார் தடுத்து நிறுத்தி, "தட்டுடன் மனு கொடுக்க அனுமதி இல்லை எனவே மனு மட்டும் கொண்டு செல்லுங்கள்" என்று கூறினர். இதனையடுத்து நிர்வாகிகள் மாவட்ட வருவாய் அலுவலரைச் சந்தித்து மனு கொடுத்தனர்.

 

பின்னர், இது குறித்து அவர்கள் பேசும்போது, "வீட்டு வரி, சொத்து வரி உயர்வை பாதியாகக் குறைத்திட வேண்டும். 10 ஆண்டுகளுக்குள் கட்டப்பட்டுள்ள வீடுகளுக்கு வரி உயர்வில் இருந்து முழு விலக்கு அளிக்க வேண்டும். குப்பை வரியை அறவே நீக்க வேண்டும். பாதாள சாக்கடை வைப்புத்தொகை, சேவை மாதாந்திரக் கட்டணங்களை உயர்த்தியதைக் கைவிட வேண்டும். சொத்து வரி சீராய்வு சிறப்பு நோட்டீஸை அனைவருக்கும் முழுமையாக வழங்காமலேயே கெடுபிடியுடன் மிரட்டல் விடுக்கும் ஈரோடு மாநகராட்சி நிர்வாகம் அதனை நிறுத்த வேண்டும்." என்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்