Skip to main content

கரோனாவின் பிடியில் இருந்து தன்னை பாதுகாத்து கொண்ட ஈரோடு!

Published on 08/04/2020 | Edited on 08/04/2020

தமிழக மக்கள் ஒவ்வொரு நாளும் கரோனா வைரஸ் பாதிப்பு கணக்குகளை பய உணர்வுடன் எதிர்பார்த்து வருகிறார்கள். இந்த நிலையில் இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமாக தொடங்கி விட்டது என மத்திய அரசு முதலில் அறிவிப்பு செய்தபோது, 72 மாவட்டங்கள் தனிமைப்படுத்தப்பட்ட மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டன. அதில் தமிழகத்தில் இரண்டு மாவட்டங்கள்... ஒன்று சென்னை, மற்றொன்று ஈரோடு. இங்குதான் அதிகமான வைரஸ் தொற்று பாதிப்பு உள்ளவர்கள் இருக்கிறார்கள் என புள்ளிவிவரங்கள் கூறின.

 

Erode - corona virus impact



இந்த நிலையில், ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள தற்போதைய சூழலில், அரசு நிர்வாகம் இந்த வைரஸ் தொற்று எப்படி பரவியது என ஆராய்ந்து கணக்கிட்டதில், தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்ட நிர்வாகமும் தீவிரமாகச் செயல்பட்டது. அதன்படி இந்த வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு, அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் கண்டுபிடிக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்படும் வேலை நடந்தது. தற்போது தமிழகத்தில் சுமார் 14 லட்சம் மக்கள் தனிமைப்படுத்தப்பட்டு வீட்டு கண்காணிப்பில் உள்ளார்கள்.
 

nakkheeran app



இதில் ஈரோட்டில் மட்டும் ஒரு லட்சத்து 10 ஆயிரம் பேர் வீட்டு கண்காணிப்பில் உள்ளார்கள். இந்த வைரஸ் தொற்று இந்தியாவில் வீரியமாக பரவி வருகிறது என அறிவிக்கப்பட்டபோது, இந்திய அரசு அறிவித்த 72 மாவட்டங்களில் ஈரோடு முக்கியமானதாக பார்க்கப்பட்டது. காரணம் அப்போது ஈரோட்டில் 22 பேர் வைரஸ் தொற்று உள்ளவர்களாக அறிவிக்கப்பட்டிருந்தனர். அதன் பிறகு ஒவ்வொரு நாளும் இந்த வைரஸ் தொற்று அறிகுறி உள்ளவர்கள் பரிசோதனை செய்யப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டு வந்தது. 

கடந்த ஏப்ரல் நான்காம் தேதி வரை ஈரோடு மாவட்டத்தில் 32 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பதாக மாநில நிர்வாகம் கூறியது. இந்த 32 பேரில் 4 பேர் கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். கோவையில் உள்ள ஒரு மருத்துவர் ஈரோடு ரயில்வே காலனி மருத்துவமனையில் பணியாற்றியபோது, அவரிடம் சிகிச்சை பெற வந்த ஒரு தாய்லாந்து  நபர் மூலம் இந்த நோய் தொற்று ஏற்பட்டது. அந்த மருத்துவர், அவரது கணவர், அவரது வீட்டில் வேலை செய்யும் ஒரு பெண்மணி, அவரது குழந்தை என நான்கு பேருக்கும் அந்த கரோனா வைரஸ் உறுதியானது. 

இந்த நான்கு பேரையும் சேர்த்துதான் ஈரோட்டில்  32 பேர் என அறிவிக்கப்பட்டது. தற்போது இந்த 4 பேரும் குணமடைந்து வீட்டுக்கு திரும்பியுள்ளனர்.  அப்படி பார்த்தால் ஈரோட்டில் 28 பேர் தான் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள். இதைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் இந்த வைரஸ் தொற்று பல்வேறு மாவட்டங்களில் வீரியமாக பரவி வந்தது. இதில் இரண்டாவது இடமாக இருந்த ஈரோடு இன்று தமிழகத்தில் எட்டாவது மாவட்டமாக உள்ளது. முதலிடத்தில் சென்னையை அடுத்து கோவை, திண்டுக்கல், நெல்லை, தேனி, நாமக்கல் போன்ற மாவட்டங்களில் இந்த தொற்று அதிகம் உள்ளது. 

ஈரோடு மாவட்டத்தில் தற்போது பரிசோதனையில் உள்ள நபர்களின் எண்ணிக்கை 15 பேர் மட்டுமே. இவர்களின் ரத்த மாதிரிகளின் முடிவு மட்டும் வர வேண்டியுள்ளது. ஆக இந்திய அரசு முதலில் அறிவித்த மிகவும் முக்கியமான நகரங்களில் ஒன்றான ஈரோடு தற்போது பாதுகாப்பான நகரமாக மாறி வருவது பொதுமக்கள் மத்தியில் சற்றே ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது. 

 

சார்ந்த செய்திகள்