Skip to main content

'ஆடாமல் ஆடுகிறேன்!' - அசுர அரசியல் பின்னணியில் நிர்மலாதேவி!

Published on 01/08/2019 | Edited on 01/08/2019

மனநல மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அளவுக்கு நிர்மலாதேவியின் நிலைமை ஆகிவிட்டதே! கல்லூரி மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்த அந்த வழக்கின் நிலை இனி என்ன ஆகப்போகிறதோ? என்று பல தரப்பிலும் விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. 

‘நிர்மலாதேவி நார்மல் ஆகிவிட்டாரா?’ திருநெல்வேலியில் அவர் சிகிச்சை பெற்ற மருத்துவமனை வட்டாரத்தில் விசாரித்தோம். 

 

nirmaldevi case update!


“குடும்பத்தோட சேர முடியல. ஜெயில்ல இருந்தது.. அப்புறம் வெளிய வந்ததும் தனிமையில் இருந்தது.. வழக்கினால் எதெதுலயோ போயி மாட்டிக்கிட்ட மாதிரி இருந்ததுன்னு எல்லாம் மொத்தமா சேர்ந்ததுனால அவங்களுக்கு இத்தனை மன அழுத்தம். 21-ஆம் தேதி அவங்களா வந்து அட்மிட் ஆனாங்க. ஆரம்பத்துல சிவன் வந்தாரு.. சக்தி வந்தாங்கன்னு சொல்லிட்டிருந்தாங்க. பிறகு, இன்ஜெக்‌ஷன் போட்டு தூங்க வச்சி, தூக்கத்துலயே கவுன்சிலிங் கொடுத்தோம். ஒருவழியா நார்மலுக்கு கொண்டு வந்துட்டோம். பேப்பர், மேகசின்னு படிக்க ஆரம்பிச்சிட்டாங்க. ஏடிஎம்ல கார்ட் போட்டு பணம் எடுக்கிற அளவுக்கு தேறிட்டாங்க. 25-ஆம் தேதி டிஸ்சார்ஜ் ஆகி போயிட்டாங்க. அவங்களுக்கு ஹாஸ்பிடல்ல வச்சு ட்ரீட்மெண்ட் தரல. இங்கே ஹோம் ஒண்ணு இருக்கு. அங்கே வச்சித்தான் ட்ரீட்மெண்ட் கொடுத்தோம். அவர் ஒரு சீனியர் சைக்கியாட்ரிஸ்ட். அதனாலதான்.. கரெக்டா அனலைஸ் பண்ணி குணப்படுத்திட்டாரு.” என்றனர். 

நிர்மலாதேவியின் செல்போன் அழைப்பினாலும், இந்த வழக்கினாலும் பெரிதும் மனஉளைச்சலுக்கு ஆளானது மாணவிகள்தானே? அருப்புக்கோட்டையில் மாணவிகள் மற்றும் பெற்றோர் தரப்பிடம்,   நிர்மலாதேவி மனநல சிகிச்சை எடுத்துக்கொண்டது குறித்து கேட்டோம். 

வீடுகளில் மாணவிகள் தென்படவே இல்லை. வெளியூரில் படிப்பதாகச் சொன்ன பெற்றோரிடம் மட்டுமே பேச முடிந்தது. “நிர்மலாதேவி நடிப்பு சூப்பரோ சூப்பர்.. தன்னுடைய வழக்கை சிபிஐக்கு மாற்ற தேவையில்லை என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதுமே நிர்மலாதேவிக்கு  சாமியாட்டம் வந்துவிட்டது.” என்று வியந்தார் மாணவி ஒருவரின் உறவினர். இன்னொரு மாணவியின் அம்மா  “கேவலமான இந்தக் கேஸுல மாட்டிக்கிட்டு நாங்களே வயிறெரிஞ்சுபோய் இருக்கோம். இதுல நீங்க வேற.   எதுன்னாலும் கோர்ட்ல சொல்லிக்கிறோம். பத்திரிக்கைக்காரங்க யார்கிட்டயும்  வாயே திறக்கக்கூடாதுன்னு எங்க பிள்ளைங்கள விசாரிச்ச போலீஸ்காரம்மா கண்டிஷனா சொல்லிட்டாங்க. நீங்க என்ன கேட்டாலும் எங்ககிட்ட இருந்து பதில் வராது.” என்றார் அழுத்தமாக.   

‘அத்தனையும் நடிப்பா?’ பொதுவான இந்தக் கேள்வியை நிர்மலாதேவி தரப்பிடமே கேட்க முடிந்தது. “ஆன்மிக ரீதியாக நடந்ததெல்லாம் உண்மை. சாமி விஷயத்தில் ஒருபோதும் விளையாடக்கூடாது. அருப்புக்கோட்டை தர்காவில் ஓதும் பெரியவரிடம் எத்தனையோ முறை ஆசீர்வாதம் கிடைத்திருக்கிறது. அந்தப் பெரியவரின் மனைவியிடமும் பேசிப் பழகியதெல்லாம் நடந்திருக்கிறது. ஒரு தம்பியின் கண்களில் தெரிந்த காட்சிதான் தர்காவுக்கு இழுத்துச் சென்றது. இன்றைய சூழ்நிலையில் தெய்வம்தான் கலங்கரை விளக்கம்.” என்ற விளக்கம் கிடைத்தது.   

‘திசை தெரியாமல் பயணிக்கிறதா நிர்மலாதேவி வழக்கு?’ முன்பு பரபரப்பாகப் பேசப்பட்ட சிவகாசி ஜெயலட்சுமி வழக்கில் ஆஜரான வழக்கறிஞர் அழகர்சாமியிடம் கேட்டோம்.   

 

nirmaldevi case update!


“நிரந்தரமாக மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்குத்தான் சில சலுகைகள் கிடைக்கும். தனக்கு எதிரான வழக்கில் நீதிமன்ற விசாரணையின்போது என்ன நடக்கிறதென்றே புரிந்துகொள்ள முடியாத நிலைமையில் குற்றம் சாட்டப்பட்டவர் இருந்தால், அவருக்குத் தண்டனை அளிக்க முடியாது. எப்படியென்றால், இந்த வழக்கு குறித்து என்ன சொல்கின்றீர்கள் என்று கேட்கும்போது, மனநிலை பாதிக்கப்பட்டவராக இருந்தால் பதில் சொல்ல முடியாது. அதனால், அவரைச் சட்டம் எதுவும் செய்யாது. அதேநேரத்தில், அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர்தான் என்பதை நிரூபித்தாக வேண்டும். அரசு மருத்துவர் அதற்கான சான்று அளிக்கவேண்டும்.   

சினிமாவில் பார்க்கும் நீதிமன்ற விசாரணை வேறு. நிஜத்தில் நீதிமன்ற நடைமுறை வேறு. உதாரணத்திற்கு.. ஒரு கொலை வழக்கென்றால், கொலையை அவர் செய்தாரா? இல்லையா? என்று மட்டும்தான் சொல்லவேண்டும். கொலை செய்தது யாரென்றெல்லாம் அவர் சொல்ல முடியாது. சரி, அவர் கொலை செய்யவில்லை என்றால், வேறு யார் கொலை செய்திருப்பார் என்றெல்லாம் கண்டுபிடிக்கப் போவதில்லை. வழக்கைப் பொறுத்தமட்டிலும், அவர் கொலை செய்யவில்லை என்பது நிரூபிக்கப்பட்டால் விட்டுவிடுவார்கள். 

 

nirmaladevi


மன அழுத்தத்திலிருந்து நிர்மலாதேவி விடுபட்டார் என்றே வைத்துக்கொள்வோம். இந்தக் குற்றச்சாட்டுக்கு உங்களின் பதில் என்ன என்று மட்டும்தான் கோர்ட் கேட்கும். அதற்கு மட்டுமே அவரால் பதிலளிக்க முடியும். என்னை இவர் கூப்பிட்டார்; அவர் கூப்பிட்டார் என்று யார் மீதும் குற்றம் சுமத்திவிட முடியாது.  ஒருவேளை, யாரோ ஒருவர்,  யாரோ ஒரு விஐபிக்காக அழைத்திருந்தால், அதற்கு இவர் தனிப்பட்ட முறையில்தான் ஒரு புகார் அளிக்க வேண்டும். அப்படி, யார் மீதும் இதுவரையிலும் நிர்மலாதேவி புகார் அளிக்கவில்லையே? 

வழக்கில் திடீரென்று இன்னொருத்தர் குறித்துச் சொல்ல முடியாது. மாணவிகளிடம் நான் பேசினேன். இல்லை.. நான் பேசவில்லை.. இது பொய்.. இது என் வாய்ஸ் இல்லை. ஏன் பேசினேன்? என்ன பேசினேன்? நான் பேசியதற்கு மாணவிகள் என்ன சொன்னார்கள்? இதுபோல்தான் நீதிமன்றத்தில் பேசமுடியுமே தவிர, அவருக்காக, இவருக்காக என்று எதுவுமே இந்த வழக்கில் வராது. அதுபோன்ற வழக்கே இது கிடையாது. 

அவரைச் சொல்லாமல் விட்டுவிட்டார். யாரோ ஒரு விஐபியைக் குறிப்பிட்டுச் சொல்லிவிட்டார்.. நிர்மலாதேவியின் தற்போதைய நடவடிக்கையால் முக்கியஸ்தர் ஒருவர் தப்பிவிட்டார் என்ற பேச்சுக்கே இந்த வழக்கில் இடமில்லை. இவர் என்னைத் தொந்தரவு செய்தார். இன்னாருக்காக இதை நான் பண்ணினேன் என்று சொல்வதென்றால், காவல்துறையிடமோ, நீதித்துறையிடமோதான் இவர் புகார் அளித்திருக்க வேண்டும். அப்படி எதுவும் நடக்கவில்லை. 

மாணவிகள் ‘நிர்மலாதேவி பேசியதை நாங்கள் தவறாகப் புரிந்துகொண்டோம்..’ என்று கூறினாலும்கூட, அவர்களைக் குறுக்கு கேள்விகள் கேட்பதற்கு வழக்கறிஞர்களுக்கு அதிகாரம் உண்டு. வழக்கறிஞர் ஒரு கோணத்தில் கேள்விகேட்டு, உரிய பதிலைப் பெற்றுவிட்டால், வழக்கு முடிவுக்கு வந்துவிடும். 

nirmaladevi


இதுபோன்ற வழக்குகளில் அரசாங்க தரப்புதான் குற்றத்தை சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்க வேண்டும். தவறினால், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு விடுதலை கிடைத்துவிடும். ஏனென்றால், சந்தேகத்தின் பலனை எதிரிக்கு அளிக்க வேண்டும் என்பதுதான் சட்டம். அப்படி சந்தேகப்படும் அளவில் வந்துவிட்டால், இந்த வழக்கே நிற்காது.” என்று விரிவாகப் பேசினார். 

நிர்மலாதேவியின் தொடர்புகளால் பெயர்  ‘டேமேஜ்’ ஆன மதுரை காமராஜர் பல்கலைக்கழக வட்டாரத்தில் “இவ்வழக்கின் அடிப்படையே தவறானது..” என்கிறார்கள். 

“இந்த வழக்கில் ஒரே ஒரு  ‘லாஜிக்’ மட்டும் புரியவில்லை. இதை ஏன் காவல்துறை வழக்காக எடுத்துக்கொண்டது? இப்படி கேட்பதற்குக் காரணம் உண்டு. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் தொடர்பியல் துறையில் மூத்த பேராசிரியர் கோவிந்தராஜ். இவர், தனது துறையில் படிக்கும் ஆராய்ச்சி மாணவியிடம் விடிய விடிய போனில் பேசினார்.   ‘படுக்கையைப் பகிர்ந்துகொண்டால்தான் கையெழுத்துப் போடுவேன்..’ என்று மிரட்டினார். இதுவும் ஆடியோ ஆதாரத்துடன் புகாரானது. காவல்துறை அவர் மீது வழக்கு பதிவு செய்ததா? நிர்மலாதேவி விவகாரத்துப் பிறகுதானே இது நடந்தது? கோவிந்தராஜையும் சிறையில் அடைத்திருக்க வேண்டியதுதானே? அப்படி நடக்கவில்லை.  பல்கலைக்கழகம்தான் பணியிடை நீக்கம் செய்தது. வி.ஆர்.எஸ். வாங்கிக்கொண்டு போய்விடுங்கள் என்று மரியாதையுடன் அனுப்பிவைத்தது. 

நிர்மலாதேவி மாணவிகளிடம் அப்படி பேசியது தவறுதான். ஆனால், எந்த ஒரு குற்றச்செயலும் நடக்கவில்லையே? பிறகு ஏன் அவசர அவசரமாக காவல்துறை வழக்கு பதிவு செய்தது இங்கேதான் இருக்கிறது அரசியல். முதலில் உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகனின்  வழிகாட்டுதலில்தான் பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர் நியமனங்கள் நடந்தன. பன்வாரிலால் புரோகித் தமிழகத்தின் கவர்னர் ஆனதும், அன்பழகனின் வழியை முற்றிலுமாக அடைத்துவிட்டு, துணைவேந்தர்களை அவரே நியமனம் செய்தார். பல மாவட்டங்களுக்குச் சென்று மாவட்ட அதிகாரிகளை அழைத்து ஆய்வெல்லாம் நடத்தினார். 

 

nirmaldevi case update!

 

அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பாவும்கூட கவர்னரின் ஆசிபெற்றவர்தான். அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், இணைவேந்தர் அன்பழகன் அமரவேண்டிய சீட்டில் கவர்னரின் செயலாளர் ராஜகோபால் அமர்ந்ததெல்லாம் நடந்தது. “சூரப்பா சர்வாதிகாரமாக எதுவும் பண்ண முடியாது.” என்று அமைச்சர் அன்பழகன் பகிரங்கமாக பேட்டியெல்லாம் அளித்தார். இந்த அளவுக்கு ஆட்சியாளர்கள் தரப்புக்கும் கவர்னர் தரப்புக்கும் முட்டல் மோதல் இருந்துவருகிறது. 

நிர்மலாதேவி மாணவிகளிடம் தனது தொடர்புகள் குறித்துப் பேசிய ஆடியோவில்,  ‘கவர்னர்.. கவர்னர் தாத்தா’ என்றெல்லாம் குறிப்பிட்டுச் சொல்லிவிட்டாரே? இந்த அரிய சந்தர்ப்பத்தை நழுவ விடுவார்களா ஆட்சியாளர்கள்? வழக்கில் வேகம் காட்டினார்கள். ஆதாரமே இல்லாமல் அவசரகதியில் கைது நடவடிக்கை எடுத்தார்கள். நிர்மலாதேவியைத் தன் கட்டுப்பாட்டிலேயே வைத்திருந்த உயர் அதிகாரியைத் தங்கள் இஷ்டத்துக்கு வழக்கிலிருந்து தப்ப வைத்தார்கள். நிர்மலாதேவி, முருகன், கருப்பசாமி ஆகிய மூவரோடு வழக்கை முடித்துவிட வேண்டும் என்று மேலிட உத்தரவுப்படி சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டனர். பல்கலைக்கழகத்தில்  கவர்னர் விசிட் ஆவணங்கள்,  ஃபுட்டேஜுகளெல்லாம் கைப்பற்றப்பட்டன; அழிக்கப்பட்டன.  கவர்னர் மாளிகை பதற்றமானது.   


இந்த விவகாரத்தைக் கையில் எடுத்து எடப்பாடி ஆட்சி கொடுத்த குடைச்சலில் ‘சைலண்ட்’ ஆனார் பன்வாரிலால். முன்புபோல் ஆக்டிவாக எந்த ஆய்வும் அவர் நடத்துவதில்லை. நிகழ்ச்சிகளில் கவர்னர் அருகில் ராஜகோபால் நிற்பதையும்கூட இப்போது காண முடிவதில்லை. பாருங்களேன்! கவர்னர் – ஆளும் கட்சியினர் ஈகோ விவகாரத்தில்,  நிர்மலாதேவி வழக்கு எந்த அளவுக்குப் பயன்பட்டிருக்கிறதென்று. அதனால்தானே,  அவருக்கு ஜாமின் கிடைத்துவிடக்கூடாது என்று இத்தனை மெனக்கெட்டார்கள்?  முழுக்க முழுக்க அரசியல்தான்.  நிர்மலாதேவி வேறு சாமியாடுகிறார். அவரை யாரோ ஆட்டிவைப்பதாகவே கருத நேரிடுகிறது. நீதிமன்றத்தில் அரசுத்தரப்பு எப்படி நடந்துகொள்ளும்?  வழக்கு என்னவாகும்? என்பது இப்போதே பட்டவர்த்தனமாகத் தெரிய ஆரம்பித்துவிட்டது.” என்றனர் ஆதங்கத்துடன்.   

ஆட்டம் காணும் நிலையிலும் ஆட்டம் போடுகிறதே எடப்பாடி ஆட்சி! 


 

சார்ந்த செய்திகள்