Skip to main content

ஈரோட்டின் எல்லைகள் மூடப்பட்டது?

Published on 22/03/2020 | Edited on 22/03/2020

 

கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களை முடக்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த மூன்று மாவட்டங்களில் அத்தியாவசிய சேவைகள் மட்டுமே வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் 75 மாவட்டங்களை தனிமைப்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டிருந்த நிலையில், தற்போது தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய மாவட்டங்களை தனிமைப்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மறு அறிவிப்பு வந்தால் தான் அடுத்த நடவடிக்கை என்ன என்பதை தெரிவிக்க முடியும் என ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவன் தற்பொழுது தெரிவித்துள்ளார். இந்த மூன்று மாவட்டங்களிலும் ரயில், பேருந்து போன்ற எந்த பொது போக்குவரத்து சேவைகளும் நடைபெறாது மார்ச் 31ம் தேதி வரை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

ஈரோடு மாவட்டத்தை தனிமைப்படுத்தும் உத்தரவு மக்களிடம் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசிடமிருந்து இந்த அறிவிப்பு வந்த உடனேயே ஈரோடு மாவட்டத்தின் எல்லைகளில் போலீசார் முகாமிட்டனர்.

இந்நிலையில் ஈரோட்டில் இருந்து கரூர் மாவட்டத்திற்கு செல்லும் நொய்யல் என்ற பகுதியும், திருப்பூர் முத்தூர் என்ற பகுதிக்கு முன்பும், அதே திருப்பூரில் சென்னிமலையை அடுத்த ஊத்துக்குளி என்ற பகுதியும், பெருந்துறை அடுத்த பகுதியிலும் போக்குவரத்தை முற்றிலும் தடுத்து பேரிக்கார்டுகள் வைக்கப்பட்டுள்ளது. அடுத்து ஈரோட்டில் இருந்து சேலம் மாவட்டத்திற்கும் மேட்டூர் சாலையில் உள்ள எல்லையான நெருஞ்சி பேட்டையிலும் தடுப்பு வைக்கப்பட்டுள்ளது.

சேலம் காவிரி ஆற்றின் மேட்டூர் அணையின் பின்புறமாக செல்லும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் சொந்த ஊரான சிலுவம்பாளையம் காவேரி பாலமும் சீல் வைக்கப்பட்டுள்ளது. பவானியில் இருந்து நாமக்கல் செல்லும் குமாரபாளையம் எல்லைப்பகுதி தடுப்புகள் மூலம்  அடைக்கப்பட்டுள்ளது. அதேபோல் பள்ளிபாளையம் ஆற்றுப்பாலம் தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஈரோடு மாவட்டத்தின் எல்லை பகுதிகள் பகுதிகளை போலீசார் தடுப்புகள் மூலம் தனிமைப்படுத்தி வருவது அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

சார்ந்த செய்திகள்