Skip to main content

சுகாதாரத்துறை அமைச்சரையும் இந்த அரசு மாற்றுமா?- ஈஸ்வரன்

Published on 12/06/2020 | Edited on 12/06/2020

 

ereswaran Condemned admk - Health Secretary Change issue

 

"சுகாதாரத்துறை செயலாளரை மாற்றியதன் மூலம் கரோனா தடுப்பு செயல்பாடுகளில் தமிழக அரசு தோல்வியுற்றதை ஒப்புக்கொள்கிறது." என தனது அறிக்கை மூலம் கூறியிருக்கிறார் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர்  ஈ.ஆர். ஈஸ்வரன்.


மேலும் அறிக்கையில் அவர், "தோல்விக்கு காரணமான சுகாதாரத்துறை அமைச்சரையும் மாற்றுவார்களா" என்றும் கேள்வி எழுப்பியதோடு, "தமிழகத்தில் கரோனா நோய் தொற்று நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டிருக்கிறது. நோய் தடுப்பு திட்டமிடலில் தமிழக அரசின் செயல்பாடுகள் போதாது என்று பலமுறை எல்லா தரப்பினரும் எச்சரித்தனர். ஆனால் இந்தியாவிலேயே தமிழக சுகாதாரத்துறைதான் சிறப்பாக செயல்படுகிறது என்று பேசியும், சுகாதாரத்துறை அமைச்சரும், செயலாளரும் இரவு, பகல் பார்க்காமல் வெகு சிறப்பாக செயல்படுகிறார்கள் என்று சொல்லியும் தட்டிக்கழித்தனர்.

உலகத்திலேயே தமிழக சுகாதாரத்துறைதான் சிறப்பாக செயல்படுகிறது என்று பிரச்சாரமும் செய்தார்கள். கடந்த 3 மாதங்களாக சிறப்பாக செயல்பட்ட சுகாதாரத்துறை செயலாளர் திடீரென்று செயல்படவில்லையா? தினசரி அவர் ஊடகத்தை சந்தித்து என்ன சொல்கிறாரோ அதைதான் தமிழக மக்கள் வேதவாக்காக கேட்டார்கள். இன்றைக்கு கரோனா நோய் தொற்று கட்டுப்படுத்த முடியாமல் அதிகமான பின்னால் சுகாதாரத்துறை செயலாளர் செயல்பாடுகள் சரி இல்லை என்று மாற்றியிருக்கிறார்கள்.

 

 


அமைச்சரோடு ஒத்துழைத்து அமைச்சர் சொல்வதை அப்படியே கேட்டு செயல்பட்டவர்தான் சுகாதாரத்துறை செயலாளர். அரசின் தோல்விதான் நோய் பரவலுக்கு காரணம் என்பதை ஒப்புக்கொண்ட பின்னால் சுகாதாரத்துறை அமைச்சருக்கும் அதில் பங்கு இருக்கிறது. அவரும் மாற்றப்படுவாரா? அரசாங்கத்தினுடைய அறிவிப்புகளில் வெளிப்படைத்தன்மை இல்லை என்பதை தமிழக மக்கள் முழுமையாக அறிந்திருக்கிறார்கள். இப்போதாவது ஒரு அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி எல்லோருடைய கருத்துகளையும் கேட்டு திட்டமிடலோடு செயல்படுங்கள். தவறவிட்டால் நோய் தொற்றினால் தடுமாறிக் கொண்டிருக்கின்ற தமிழகத்தை யாராலும் காப்பாற்ற முடியாது." என கூறியிருக்கிறார். 

 

சார்ந்த செய்திகள்