ஊடகங்களில் வெளியானது தேர்தல் கருத்துக்கணிப்பு அல்ல; அது கருத்துத்திணிப்பு என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் கூறினார்.
தமிழகத்தில் நடந்த நான்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் தீவிர பரப்புரையில் ஈடுபட்டிருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஓய்வு எடுப்பதற்காக சொந்த ஊரான சேலத்திற்கு, விமானம் மூலம் திங்கள்கிழமை (மே 20, 2019) காலையில், வந்தார். காமலாபுரம் விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களின் வினாக்களுக்கு பதில் அளித்தார். அவர் கூறியது:
கடந்த 2016ல் நடந்த சட்டப்பேரவை தேர்தலின்போது, சேலம் மாவட்டத்தில் 3 தொகுதிளில்தான் அதிமுக ஜெயிக்கும் என்றும், நானும் தோல்வி அடைவேன் என்றும் ஊடகங்கள் கருத்துக்கணிப்பை வெளியிட்டன. ஆனால், அந்த தேர்தலில், சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளில் நாங்கள் பத்து இடங்களில் வெற்றி பெற்றோம். நானும் 42000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றேன். இதுதான் கருத்துக்கணிப்புகளின் நிலவரம். இதெல்லாம் கருத்துக்கணிப்பு அல்ல. கருத்துத் திணிப்பு.
மற்ற மாநிலங்களின் தேர்தல் நிலவரம் பற்றி எனக்குத் தெரியாது. நாங்கள் மாநிலக்கட்சிதான். தேசியக்கட்சி அல்ல. மக்களை தேர்தலைப் பொருத்தவரை தமிழகத்தில் தேர்தல் நடந்த 38 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி உள்பட 39 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறும். இடைத்தேர்தல் நடந்த 22 சட்டப்பேரவை தொகுதிகளிலும் அதிமுகதான் வெற்றி பெறும். நாங்கள் சொன்னது சரியா? அல்லது ஊடகங்களின் கருத்துக்கணிப்புகள் சரியா? என்பது வரும் 23ம் தேதி தெரிந்து விடும்.
அதிமுகவைப் பொருத்தவரை, என்றைக்கும் ஒரே நிலைப்பாடுதான். திமுகவினர் அடிக்கடி நிறம் மாறக்கூடியவர்கள். தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளிவரட்டும். அதன்பிறகு மத்திய அமைச்சரவையில் இடம்பெறுவது குறித்து சிந்திக்கலாம்.
ராஜிவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள ஏழு பேர் விடுதலை ஆக வேண்டும் என்பதற்குதான் அமைச்சரவை கூடி தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், அவர்களை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக ஆளுநருக்கு கோப்பு அனுப்பப்பட்டு உள்ளது. இனி அவர்தான் முடிவு செய்வார். எழுவர் விடுதலை தொடர்பாக திமுக ஆட்சிக்காலத்தில் என்ன செய்தார்கள் என்பதை உங்கள் (ஊடகங்கள்) வாயிலாக சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். கருணாநிதி முதல்வராக இருந்தபோது நளினியை மட்டும் விடுதலை செய்யலாம் என்றும், மற்றவர்களுக்கு தண்டனை தொடரலாம் என்றும் அமைச்சரவை கூடி தீர்மானம் கொண்டு வந்தது. ஆனால் அதிமுக அமைச்சரவை, மக்களின் எண்ணங்களுக்கு ஏற்ப, ஏழு பேரையும் விடுதலை செய்ய தீர்மானம் கொண்டு வந்தது.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.