கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட 4-வது வார்டில் வில்வ நகர் பகவதி அம்மன் கோவில் தெருவில் கழிவு நீர் வடிகால் வாய்க்காலில் சாக்கடை கழிவுகள் அடைத்துக் கொண்டு சிறு மழை பெய்தாலும் சாக்கடை கழிவுகள் அப்பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் தெருக்களில் தேங்கி நிற்கும் அவல நிலை இருந்து வந்தது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்து வந்தனர்.
இது குறித்த செய்தி நக்கீரன் இணையத்தில் ஞாயிற்றுக்கிழமை(13.10.2024) பதிவு செய்யப்பட்டது. மேலும் இதுகுறித்து கடலூர் மாநகராட்சி ஆணையர் அணு ஐ.ஏ.எஸ்-யிடம் விளக்கம் கேட்டு அதனையும் பதிவு செய்யப்பட்டது. இந்த செய்தி பொதுமக்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பரவலாக பேசுபொருளாக மாறியது.
இந்த நிலையில் திங்கட்கிழமை(14.10.2024) அதிகாலை கடலூர் மாநகராட்சி ஆணையர் உத்தரவின் பேரில் மாநகராட்சி ஊழியர்கள் சம்பந்தப்பட்ட வில்வ நகரில் தேங்கியுள்ள சாக்கடை கழிவுகளை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இதற்கு அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.