Skip to main content

‘இதனை தூண்டிவிட்டு அரசியல் செய்ய வேண்டாம்’ - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

Published on 15/11/2022 | Edited on 15/11/2022

 

'Don't politicize this by inciting it' - Minister Subramanian interviewed

 

சென்னையைச் சேர்ந்த கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா. இவருக்கு ஏற்கனவே பெரியார் நகர் புறநகர் அரசு மருத்துவமனையில் வலது கால் முட்டி சவ்வு சீரமைப்பு அறுவை சிகிச்சை நடந்தது. அதன் பிறகு உணர்விழப்பு காரணமாக கடந்த எட்டாம் தேதி சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஏற்கனவே செய்யப்பட்ட அறுவை சிகிச்சையில் முன்னேற்றம் ஏற்படாததால் அங்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவருடைய வலது காலில் ரத்தம் உறைந்து தொற்று ஏற்பட்டிருந்தது தெரியவந்தது. அதனையடுத்து பிரியாவின் வலது கால் அகற்றப்பட்டது. கால் அகற்றப்பட்ட நிலையில் தொடர்ந்து சிகிச்சை எடுத்து வந்த பிரியா உடல்நிலையில் ஏற்பட்ட பின்னடைவு காரணமாக இன்று (15.11.2022) காலை சரியாக 7.15 மணிக்கு உயிரிழந்தார்.

 

உயிரிழந்த பிரியாவின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் இயற்கைக்கு மாறான மரணம் என பெரவள்ளூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  உடற்கூராய்வு முடிந்த நிலையில் அவரது உடலை வாங்க மறுத்து பிரியாவின் குடும்பத்தார், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் காவல்துறையினர் மற்றும் மருத்துவமனை நிர்வாகம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி உடலை ஒப்படைத்தனர்.

 

'Don't politicize this by inciting it' - Minister Subramanian interviewed

 

இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், ''இது மிக மிகத் துயரமான சம்பவம். இதனை அரசியலாக யாரும் பார்க்கக்கூடாது. ரத்தநாளங்களில் ஏற்பட்ட ரத்த ஓட்ட பாதிப்பால் இருதயம், சிறுநீரகம் உள்ளிட்ட பல்வேறு உறுப்புகளும் செயலிழக்கத் தொடங்கி, இன்றைக்கு நம்மை விட்டுப் பிரிந்துவிட்டார். அவருக்கு மூன்று அண்ணன், தம்பிகள் இருக்கிறார்கள். அவர்களில் யாரேனும் ஒருவருக்கு அரசுப் பணி வழங்கப்படும் என்றும், உடனடியாக நிவாரணத் தொகையாக 10 லட்ச ரூபாய் வழங்கப்படும் என்றும் முதல்வர் அறிவிக்கச் சொன்னார். அந்த வகையில் அதனை அறிவித்திருக்கிறோம். இதை அன்புகூர்ந்து யாரும் அரசியலாகப் பார்க்கக்கூடாது. தூண்டிவிட்டுப் பார்ப்பதற்கான விஷயம் இது அல்ல. இதனை வேறுவகையில் கிளறிவிட்டு அரசியல் செய்வது ஒரு சரியான செயலாக அரசியல் தலைவர்களுக்கு இருக்காது என்று நான் கருதுகிறேன்'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்