Skip to main content

உங்களுக்குத் தேவை தீர்வா பிரச்சனையா? - என்.எல்.சிக்கு நீதிபதி கேள்வி

Published on 08/08/2023 | Edited on 08/08/2023

 

Do you want a solution or a problem?-Judge questions to NLC

 

ஊதிய உயர்வு உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்திக் கடந்த 26 ஆம் தேதி முதல் என்.எல்.சி ஒப்பந்தத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நெய்வேலியில் உள்ள என்.எல்.சி தலைமை அலுவலகம் முன்பு ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் இரவு பகலாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், என்.எல்.சி நிர்வாகம் கடலூர் மாவட்ட காவல்துறைக்கு அண்மையில் கடிதம் ஒன்றைக் கொடுத்தது. அதில் போராட்டக்காரர்களை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை என்.எல்.சி நிர்வாகம் வைத்திருந்தது.

 

இந்நிலையில், என்.எல்.சி முன்பு போராட்டம் நடத்த அனுமதிக்கக் கூடாது எனவும், பணிக்கு வரும் ஊழியர்களுக்கு மற்றும் என்.எல்.சி நிறுவனத்திற்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என என்.எல்.சி தரப்பில் அவசர வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு மூன்றாம் தேதி நீதிபதி தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது. தொழிற்சங்கம் சார்பில் முதலில் வாதங்கள் வைக்கப்பட்டது. கடந்த எட்டு நாட்களாக அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வருகிறோம் எனத் தெரிவித்தனர். என்எல்சி தரப்பில், 'குறிப்பிட்ட இடங்கள் மட்டுமல்லாமல் கார்ப்பரேட் அலுவலகம் எனும் தலைமை அலுவலகத்தின் முன்பே முற்றுகை போராட்டம் நடைபெறுகிறது' என்ற வாதத்தை வைத்தது.

 

Do you want a solution or a problem?-Judge questions to NLC

 

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, 'சட்டத்தை உங்கள் கையில் எடுத்துக் கொண்டு அனுமதிக்கப்படாத இடத்தில், அதுவும் என்.எல்.சி கார்ப்பரேட் அலுவலகம் முன்பாகப் போராட்டம் நடத்துவதை அனுமதிக்க முடியாது. போராட்டம் நடத்துவதற்கான இடங்களைக் கடலூர் காவல்துறை எஸ்.பி நிர்ணயிக்க வேண்டும். நீதிமன்றத்தின் உத்தரவை மீறிச் செயல்பட்டு சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படுத்துவோர் மீது சட்டத்திற்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்கலாம்' என்று காவல்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 8 ஆம் தேதி (இன்று) ஒத்தி வைத்திருந்தார்.

 

இந்நிலையில், இன்று மீண்டும் நடைபெற்ற இந்த வழக்கின் விசாரணையில், என்.எல்.சி ஒப்பந்தத் தொழிலாளர் விவகாரத்தில் தீர்வு காண விரும்புகிறீர்களா? அல்லது பிரச்சனையை விரும்புகிறீர்களா? என என்.எல்.சி நிர்வாகத்திற்குக் கேள்வி எழுப்பிய நீதிபதி, ஊழியர் போராட்டம் நடத்த வரையறுக்கப்பட்ட இடங்களை அறிக்கையாகத் தாக்கல் செய்ய கடலூரில் எஸ்.பிக்கு உத்தரவு பிறப்பித்தார். அறிக்கை தாக்கல் செய்யத் தவறினால் கடலூர் எஸ்பி நேரில் ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிட்டார். 'குறிப்பிட்ட இடங்களில் தான் தற்பொழுது போராட்டம் நடைபெற்று வருகிறது' என என்.எல்சி நிர்வாகம் தெரிவித்தது. தொடர்ந்து இருதரப்பும் கலந்து ஆலோசித்து ஆகஸ்ட் 11 ஆம் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, என்.எல்.சி நிர்வாகம் ஒப்பந்தத் தொழிலாளர்கள் இடையே பிரச்சனையைத் தீர்க்க உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ராமசுப்பிரமணியத்தை நியமிக்க உத்தரவிட்டார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முன்னாள் பிரதமரின் பேரன் மீது பாலியல் புகார்!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
complaint against the grandson of the former prime minister

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்தத் தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், தேவகவுடாவின் ஜனதா தளம் (எஸ்) கட்சி போட்டியிடுகிறது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. இந்நிலையில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. தன்னிடம் உதவி கேட்டு வந்த ஏராளமான பெண்களை பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிரஜ்வல் ரேவண்ணா மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் மாநில மகளிர் ஆணையம் கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.

இதனையடுத்து இந்தப் புகார் குறித்து சிறப்பு புலானாய்வுக் குழு அமைத்து விசாரணை தொடங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதே சமயம் புகார் குறித்த நெருக்கடி அதிகரிப்பால் பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடகாவில் இருந்து ஜெர்மனிக்கு தப்பியோடியதாவும் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து கர்நாடக முதல்வர் சித்தராமைய தனது எக்ஸ் சமூக வலைத்தளப்பக்கத்தில், “பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோ வழக்கு தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. ஹாசன் மாவட்டத்தில் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியிருப்பது போன்ற ஆபாச வீடியோ காட்சிகள் பரவி வருகின்றன. இந்நிலையில், எஸ்ஐடி விசாரணை நடத்துமாறு அரசுக்கு மகளிர் ஆணையத் தலைவர் கடிதம் எழுதியிருந்தார். எனவே இந்தக் கோரிக்கையை ஏற்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த மக்களவைத் தேர்தலில் ஹாசன் தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளராக பிரஸ்வால் ரேவண்ணா மீண்டும் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மதுரையில் இளைஞர்கள் அட்டூழியம்; வெளியான சிசிடிவி காட்சிகள்!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
madurai incident Released CCTV footage

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை பகுதியில் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) சித்திரை திருவிழாவின் போது மது போதையில் இருந்த 5க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒத்தக்கடை பகுதிகளில் இரு சக்கர வாகனத்தில் சென்றவர்களை தாக்குவது, பெண்கள் மீது தாக்குதல் நடத்துவது, அப்பகுதியில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்குவது, வீட்டிற்கு வெளியே உள்ள இருசக்கர வாகனங்களைத் தள்ளிவிட்டு உடைப்பது, கடைகளை சேதப்படுத்துவது எனத் தொடர்ந்து அராஜகங்களில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இத்தகைய சூழலில் தான் ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த கான் முகமது கான், கடந்த 22 ஆம் தேதி இரவு தனது பணியை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் சுந்தரம் நகர் பகுதியில் வந்துள்ளார். அப்போது இந்த இளைஞர்கள் அவரை கடுமையாக தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதலில் கான் முகமது கான் பலத்த காயம் அடைந்தார். அதன் பின்னர் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட்டு சிகிச்சை பெற்றார். இது குறித்து ஒத்தக்கடை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதற்கிடையே இந்த இளைஞர்கள் ஐயப்பன் நகர் பகுகுதியில் சென்று அங்குள்ள இரண்டு கடைகளை அடித்து நொறுக்கினர். மேலும் கடையில் இருந்த பெண்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்நிலையில் இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி மக்கள் மத்தியில் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் சிலரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இருவரை கைது செய்ய போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.