Skip to main content

தி.மு.க. எம்.பி. மீதான கொலை வழக்கு- வெளியானது எஃப்.ஐ.ஆர். விவரங்கள்!

Published on 13/10/2021 | Edited on 13/10/2021

 

DMK MP Murder case against: FIR filed details!

 

கடலூர் முந்திரி ஆலை தொழிலாளி கொலை வழக்கில் முதல் தகவல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள விவரங்கள் வெளியானது. அதில், கொல்லப்பட்ட கோவிந்தராசு ஏழு ஆண்டுகளாக கடலூர் எம்.பி. ரமேஷுக்கு சொந்தமான முந்திரி ஆலையில் பணியாற்றினார். கோவிந்தராசுவின் உடல் முழுவதும் காயங்களும் ரத்தக் கரையும் இருந்ததால் அவரது மகன் புகார் அளித்தார். கடந்த செப்டம்பர் 20- ஆம் தேதி அன்று அதிகாலை எம்.பி.ரமேஷின் உதவியாளர், கோவிந்தராசுவின் மகனுக்கு தொலைபேசியில் அழைத்துள்ளார்.  

 

அதன் அடிப்படையில், கடலூர் எம்.பி. டி.ஆர்.வி. ரமேஷ் மற்றும் அவரது தனி உதவியாளர் நடராஜன் கந்தவேல், அல்லா பிச்சை மற்றும் வினோத், முந்திரி ஆலையில் பணிபுரியும் ஆட்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தொழிலாளர் கோவிந்தராசுவை ஐந்துக்கும் மேற்பட்டவர்கள் ஒன்றுக்கூடி அடித்துக் கொன்றுள்ளனர். அவர்கள் மீது சட்டப்பிரிவுகள் 302 (கொலைக்குற்றம்), 120 பி (சதி செய்தல்), 147, 149, 341, 201 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

 

கோவிந்தராசுவின் உடலில் இடது கண்ணில் காயமும், மூக்கில் ரத்தம் வடிந்த சுவடும் இருந்தது. ஒருவாரமாக முந்திரி ஆலையில் தனக்கு பிரச்சனை என தெரிந்தவர்களிடம் கோவிந்தராசு கூறி வந்துள்ளார். அவரது உடலில் பூச்சி மருந்து கலந்ததற்கான தடயமும் இருந்தது. கோவிந்தராசுவின் ரத்தத்தில் எத்தில் ஆல்கஹால் அளவு 161 மி.கி. இருந்ததாக பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. மேலும், அவரது சட்டை, வாய்ப்பகுதியில் பச்சை நிறத்தில் திரவம் காய்ந்த நிலையில் காணப்பட்டது. இவ்வாறு முதல் தகவல் அறிக்கை எனப்படும் எஃப்.ஐ.ஆரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரூ. 4.8 கோடி பறிமுதல்; பாஜக வேட்பாளர் மீது வழக்குப்பதிவு!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Rs. 4.8 crore forfeited Case filed against BJP candidate

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 87 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கேரளாவில் 20, கர்நாடகாவில் 14, ராஜஸ்தானில் 13, மத்தியப் பிரதேசத்தில் 6, மகாராஷ்டிராவில் 8, உத்தரப் பிரதேசத்தில் 8, அசாமில் 5, பீகாரில் 5, சத்தீஸ்கரில் 3, மேற்கு வங்கத்தில் 3, ஜம்மு காஷ்மீர் மற்றும் திரிபுராவில் தலா 1 தொகுதிகள் என மொத்தம் 87 தொகுதிகள் தேர்தல் நடைபெறுகிறது. மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஒரு தொகுதியில் வேட்பாளர் மரணமடைந்ததால் அந்த தொகுதியில் மட்டும் மே 7ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

மேலும் பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தீவிர கண்காணிப்பு பணியில் போலீசார் மற்றும் துணை ராணுவப் படையினர் ஈடுபட்டுள்ளனர். கேரள மாநிலம் வயநாட்டில் மாவோயிஸ்டுகள் அச்சுறுத்தல் உள்ள வாக்குச்சாவடிகளில் தீவிர கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள பெங்களூரு தெற்கு, ஹாசன், தட்சிண கன்னடா, மைசூரு, மாண்டியா உள்ளிட்ட 14 தொகுதிகளில் இன்று மாலை வரை 144 தடை அமல்படுத்தப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. 2ஆம் கட்ட தேர்தலில் சுமார் 15.88 கோடி பொதுமக்கள் வாக்களிக்க உள்ளனர். இதற்காக பொதுமக்கள், அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் எனப் பலரும் காலை முதல் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். 

Rs. 4.8 crore forfeited Case filed against BJP candidate

முன்னதாக கர்நாடகாவின் சிக்கபல்லாபூர் தொகுதி பாஜக வேட்பாளர் கே. சுதாகருக்கு நெருக்கமானவர் வீட்டில், தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்த ரூ. 4.8 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. வாக்காளர்களுக்கு கொடுக்க ரூ. 4.8 கோடியை பாஜக வேட்பாளர் சுதாகர் பயன்படுத்த இருந்ததாக பறக்கும்படை அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் இது குறித்து சுதாகர் மீது வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக குற்றவியல் சட்டம் மற்றும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் மாதநாயகனள்ளி காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு தொடங்குவதற்கு சில மணி நேரத்திற்கு முன்னதாக பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களிக்க, வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக வைத்திருந்த பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

ராஜேஷ் தாஸ் குற்றவாளி! சரணா? கைதா? - இறுதிக்கட்டத்தில் பாலியல் வழக்கு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Police are serious to arrest the accused Rajesh Das

கடந்த அதிமுக ஆட்சியில் சிறப்பு டிஜிபியாக இருந்தவர் ராஜேஷ் தாஸ். அவர், அப்போது தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமியின் டெல்டா மாவட்ட சுற்றுப்பயணத்தை கவனித்துக் கொண்டார். அப்போதைய முதல்வருடன் டெல்டா மாவட்டத்துக்கு பாதுகாப்பு பணியை மேற்கொள்ள ராஜேஷ் தாஸ் உடன் சென்றிருந்தார். அப்போது, மரியாதை நிமித்தமாக டெல்டா மாவட்டத்தில் பணியாற்றிய பெண் எஸ்.பி ஒருவர் ராஜேஷ் தாஸை சந்தித்துள்ளார். ஆனால், அதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட ராஜேஷ் தாஸ் காரில் வைத்து பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதைச் சற்றும் எதிர்பாராத அந்த பெண் எஸ்பி புகார் அளிக்க சென்னை சென்றார். அப்போது, வழியில் மறித்த அப்போதைய செங்கல்பட்டு மாவட்ட எஸ்பி கண்ணன் ராஜேஷ் தாஸுக்கு ஆதரவாக சமாதானம் பேசி பெண் எஸ்பியிடம் கட்டப் பஞ்சாயத்து செய்துள்ளார். இப்படி, பல மிரட்டலையும் மீறி பாலியல் தொல்லைக்கு ஆட்பட்ட பெண் எஸ்பி, அப்போதைய டிஜிபி திரிபாதியைச் சந்தித்து தனக்கு நடந்த பாலியல் தொல்லை குறித்து துணிச்சலுடன் புகார் அளித்தார். இதையடுத்து, ராஜேஷ் தாஸ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதோடு அவர் சஸ்பெண்டும் செய்யப்பட்டார். இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கில் ராஜேஷ் தாஸுக்கு மூன்றாண்டுகள் சிறைத் தண்டனையும் 10,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இதில், பாதிக்கப்பட்ட பெண் எஸ்பியை தடுத்து புகார் அளிக்க இடையூறு செய்த அப்போதைய செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் எஸ்.பி கண்ணனுக்கு 500 ரூபாய் மட்டும் அபராதம் விதிக்கப்பட்டது.

இதையடுத்து, விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றமும் ராஜேஷ் தாஸுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை உறுதி செய்தது. ஆனால், ராஜேஷ் தாஸ் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்திவைக்க வேண்டும், சரணடைவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், காவல்துறையினர் குடிமக்களுக்கு உதாரணமாக இருக்க வேண்டும். ஆனால், ராஜேஷ் தாஸ் காவல்துறையின் கண்ணியத்தைக் குலைக்கும் வகையில் செயல்பட்டிருக்கிறார். இதன் காரணமாக, அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்தது. இதனால், ராஜேஷ் தாஸ் சிறை செல்வது உறுதியானது. இதையடுத்து, வழக்கை விசாரணை செய்து வந்த சிபிசிஐடி போலீஸார் பாலியல் குற்றவாளி ராஜேஷ் தாஸை கைது செய்ய தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, தண்டனை தீர்ப்பு உறுதியான பிறகு ராஜேஷ் தாஸ் வடமாநிலங்களில் தலைமறைவாக இருந்ததாக சொல்லப்பட்டது. அவரை பிடிக்க போலீசார் அங்கு விரைந்தனர். ஆனால், அதற்குள் ராஜேஷ் தாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால் அவரைப் பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. தற்போது தண்டனை உறுதியானதால் ராஜேஷ் தாஸ் எங்கு இருக்கிறார் என்று தனிப்படை போலீஸார் விசாரணை செய்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், ராஜேஷ் தாஸ் நீதிமன்றத்தில் சரண் அடையலாம் என்றும், அப்படி இல்லை என்றால் உச்ச நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்ய வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையடுத்து, ராஜேஷ் தாஸ் வழக்கு குறித்து சட்ட நிபுணர்களுடனும், காவல்துறை உயரதிகாரிகளுடனும் தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து, போலீசாரின் தேடுதல் வேட்டை தீவிரமடைந்திருப்பதால் ராஜேஷ் தாஸ் தலைமறைவாக இருந்தாலும், கைது செய்யப்படுவார் என சிபிசிஐடி காவல் துறையினர் தகவல் தெரிவிக்கின்றனர்.