நடிகரும் தேமுதிக நிறுவனத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான, விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக மீண்டும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விஜயகாந்தின் மருத்துவ பரிசோதனையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் வெண்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், விஜயகாந்த் இன்று (28-12-23) காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது மறைக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
அந்த வகையில் இயக்குநர் பேரரசு விஜயகாந்த்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நாம் அவரிடம் தொடர்புகொண்டபோது, “கேப்டன் விஜயகாந்த்தை ஒரு நடிகராக, அரசியல் கட்சி தலைவராக பார்த்ததை விட அவரை ஒரு மிகசிறந்த மனிதராக பார்க்க வேண்டும். அப்படிப்பட்ட ஒரு நல்ல மனிதரை நாம் இன்று இழந்திருக்கிறோம். இது திரைத்துறைக்கு மட்டும் அல்ல தமிழ்நாட்டிற்கே மிகபெரிய இழப்பு. சினிமாவில் நடித்து பேர் புகழ் பெற்றுவிட்டோம் என்று ஒதுங்காமல், அவரால் என்னவெல்லாம் தமிழ் திரையுலகிற்கு செய்ய முடியுமோ அதை எல்லாம் செய்தார். நடிகர் சங்க தலைவராக அவர் இருக்கும் போது, நடிகர் சங்க கடனில் முழ்கும் நிலையில் இருந்தது. அப்போது ரஜினி, கமல் உள்ளிட்ட நடிகர்கள் நடிகைகளை ஒன்றாக சேர்த்து நிக்ழ்ச்சி நடத்தி அதில் வந்த வருமானத்தை வைத்து நடிகர் சங்கத்தின் கடனை அடைத்து மீட்டார். தற்போது நடிகர்கள் சங்கத்திற்கான கட்டடம் உருவாவதற்கும் கூட அவரின் அந்த முயற்சிதான் காரணம். அப்போது அவரின் ஆளுமை வெளிப்பட்டது.
விஜயகாந்த், 50க்கும் மேற்பட்ட உதவி இயக்குநர்களை இயக்குநராக அறிமுகப்படுத்தியுள்ளார். புது புது இயக்குநர்கள், புது புது தயாரிப்பாளர்கள் என சினிமா துறையில் பலபேருக்கு வழிகாட்டியுள்ளார். குறிப்பாக சென்னை திரைப்பட கல்லூரி மாணவர்களுக்கு வாய்ப்பளித்து, அவர்களை சினிமாவிற்குள் அறிமுகப்படுத்திய முக்கியமானவர் விஜயகாந்த். அவருக்கு முன்னால் யாரும் திரைப்பட கல்லூரி மாண்வர்களுக்கு வாய்ப்பளிக்கவில்லை. சொல்லப்போனால் அவர்களுக்கு விஜயகாந்த் வாய்ப்பளித்த பிறகுதான், திரைப்பட கல்லூரி பிரமலமானது என்று கூட கூறலாம். அப்படி விஜயகாந்த் கொடுத்த வாய்ப்பின் மூலம் வந்தவர்கள்தான் ஆர்.கே.செல்வமணி, அரவிந்த் உள்ளிட்ட பலர். இப்போது பெரிய தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் என பலரையும் விஜயகாந்த் தான் வாய்ப்பு கொடுத்து உருவாக்கினார். இயக்குநர்களை மிகவும் மதிக்க கூடையவர்.
நான் அவரை வைத்து தர்மபுரி என்ற படதை இயக்கினேன்; அப்போது எந்தவிதமான தலையீடும் இருக்காது. ஒரு கதை அவருக்கு பிடித்துவிட்டது என்றால், அதற்கு ஏற்றார்போல் தன்னை மாற்றிக் கொள்வார். படப்பிடிப்பின் போது தாமதமாக வரவேமாட்டார். தர்மபுரி படத்தின் போது ஒரு நாள் படப்பிடிப்பு நீண்டுகொண்டே போனது; அதிகாலை 3 மணிக்குத்தான் படப்பிடிப்பு முடிந்தது. விஜயகாந்த சாரை அனுப்பி வைத்தேன். அப்போது அவரிடம், நாளை காலை 9 மணிக்கு ஷூட்டிங் வந்துருங்க சார்ன்னு சொன்ன சரின்னு சொல்லிட்டு, நீங்க காலையில் எத்தனை மணிக்கு படப்பிடிப்பு தொடங்குவிங்க என்று கேட்டார். 7 மணிக்கு தொடங்குவேன் என்றதும், நீங்க மட்டும் 7 மணிக்கே வரீங்க என்ன மட்டும் 9 மணிக்கு வர சொல்றீங்க என்று கேட்டுவிட்டு நானும் 7 மணிக்கே வந்துவிடுகிறேன் என்று கூறி 6.30 மணிக்கே வந்துவிட்டார். அப்படி படப்பிடிப்புக்கு ஒருநாள் கூட தமதமாக வந்ததேயில்லை. அவருடன் பணியாற்றிய இயக்குநர்கள் எல்லாம் கொடுத்துவைத்தவர்கள். எல்லாரிடமும் கேட்டு பாருங்கள் யாரும் எந்த குறையும் சொல்லமாட்டர்கள்.
திரையுலகம் போன்று மக்களுக்கும் நன்மைகளை செய்துள்ளார். எம்.ஜி.ஆர் போன்று விஜயகாந்த்தும் மக்களை நேசித்தார். அதனால் தான் அவரை மக்களும் அரசியலில் வெற்றிபெற வைத்தனர். எம்.ஜி.ஆருக்கு பிறகு திரைத்துறையில் இருந்து வந்து அரசியலில் சாதித்தவர் விஜயகாந்த் மட்டுமே. அவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்படாமல் இருந்தால் நிச்சயம் அரசியலில் இன்னும் நல்ல நிலைமைக்கு வந்திருப்பார். ஆனால், தற்போது அவரின் இழப்பு அதிர்ச்சியை தருகிறது. அவரை பிரிந்து வாடும் குடும்பத்தினர், தொண்டர்கள், ரசிகர்களுக்கு ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.