தூத்துக்குடி சம்பவம் குறித்து சட்டசபையில் நடந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தில் சென்னை ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ. டி.டி.வி. தினகரன் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர், தூத்துக்குடி மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்போதுதான் அங்கு சகஜ நிலை திரும்புகிறது. இங்கு முதல்-அமைச்சர் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் சிலவற்றை குறை சொல்லி மக்கள் மத்தியில் உள்ள உணர்வுகளை வெளிப்படுத்துகிறேன். எதிர் காலத்தில் எந்த ஆட்சியிலும் இது போன்ற கொடிய சம்பவம் நடக்கக்கூடாது என்று கூறிக்கொள்கிறேன்.
முதல்- அமைச்சரின் அறிக்கையில், கலெக்டர் அலுவலகர் முற்றுகை போராட்டத்தை மக்கள் கைவிட்டு தூத்துக்குடி பழைய பஸ்நிலையம் அருகில் உள்ள விளையாட்டு மைதானத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை இல்லாமல் அமைதியாக போராட்டம் நடத்த ஒப்புக் கொண்டதாகவும் என்றாலும் முன் எச்சரிக்கையாக 2 ஆயிரம் போலீசார் பணி அமர்த்தப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
அப்படி இருக்கையில் 144 தடை உத்தரவு எதனால் போடப்பட்டது? அங்கு எல்லா கட்சிக்காரர்களும் போராட்டத்தில் கலந்து கொண்டனர். ஆனால் முதல்வரின் அறிக்கையில் அவர்களை கொச்சைப்படுத்துவது போல உள்ளது. இது அவர் வகிக்கும் பதவிக்கு அழகா? பேரணியில் சமூக விரோதிகள் ஊடுருவியதாக முதல்வர் கூறியுள்ளார். போலீஸ் உளவுத்துறை என்ன செய்தது?
நாங்கள் எல்லாம் சென்று அங்கு ஆறுதல் கூறுகிறோம். ஆனால் நீங்கள் அங்கு செல்ல துணிச்சல் இல்லை. நான்கு, ஐந்து நாட்களாக உங்கள் எம்.எல்.ஏ.க்களை தூத்துக்குடியில் பார்க்க முடியவில்லை என்றார்.
உடனே அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஒட்டு மொத்தமாக குரல் எழுப்பி டி.டி.வி. தினகரனுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
அதற்கு தினகரன், “உண்மையை சொன்னால் உங்களுக்கு கோபம் வருகிறது. அமைதியாக இருங்கள்” என்றார்.
ஆனாலும் டி.டி.வி. தினகரனுக்கும் அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்களுக்கும் வாக்குவாதம் நீடித்தது.
சபாநாயகர் தலையிட்டு இரு தரப்பையும் அமைதிப்படுத்தினார்.