Skip to main content

தொடரும் காவலர் தற்கொலை! கண்டுக்கொள்ளாத தமிழக அரசு!

Published on 15/05/2018 | Edited on 15/05/2018

அதிக பணிச்சுமையினால் ஏற்படும் மனஅழுத்தத்தின் காரணமாக காவலர்கள் தற்கொலையில் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது என்ற குற்றச்சாட்டு அண்மையில் பரவலாக எழுந்தது. இதன் பின் காவலர்களுக்கு யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். இதையடுத்து யோகா பயிற்சிகளை முதல் மூன்று வாரம் கொடுத்த வந்த நிலையில் மீண்டும் அதை கிடப்பிலேயே போட்டுவிட்டது இந்த காவல்துறை.

அதேபோல் ஆடர்லியாக இருக்கும் காவலர்களை இன்னும் எந்த மாற்றமும் செய்யாமல் அதே நிலையில் தான் வைத்துள்ளனர். காவலர்களின் தேவையை பூர்த்தி செய்யாத நிலையில் இவை அனைத்தும் கிடப்பில் போடப்பட்ட காரணத்தால் மீண்டும் ஒரு காவலர் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.

சென்னை ஈஞ்சாம்பாக்கத்தை சேர்ந்த பாலமுருகன் 2013ஆம் ஆண்டு தமிழக காவல்துறையில் தேர்ச்சி பெற்று காவலராக பணியில் சேர்ந்தார். பின்னர் ஆவடி 5வது பட்டாலியனில் பயிற்சி பெற்ற பாலமுருகன் அசோக் நகரில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தார். இந்தநிலையில் தினமும் அளவுக்கு அதிகமான பணிச்சுமையை தனக்கு கொடுத்து சிரமம் படுத்துவதால் இந்த வேலையை விட்டு நி்ன்றுவிடுவதாக தன் தாய், தந்தையிடமும் கூறி வந்துள்ளார்.

தொடர்ந்து உயர் அதிகாரிகள் தன்னை கடுமையாக வேலை வாங்குவதாகவும், பாலமுருகன் தனது தந்தை விஜயராகவனிடம் கூறி வந்துள்ளார். மேலும், தனக்கு இந்த வேலை பிடிக்கவில்லை என்றும் கூறியுள்ளார். இதற்கிடையே, கடந்த நான்கு நாட்களாக முன் அறிவிப்பின்றி பாலமுருகன் விடுமுறை எடுத்துள்ளார்.

அதற்கான எந்த தகவலையும் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு பாலமுருகன் தெரிவிக்கவில்லை. இதையடுத்து கடந்த சனிக்கிழமை இரவு பாலமுருகனுக்கு உயர் அதிகாரிகள் செல்போனில் தொடர்பு கொண்டு பணிக்கு வராதது குறித்து கடுமையாக திட்டியதாக கூறப்படுகிறது. அதன்பிறகு பாலமுருகன் மனமுடைந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.
 

police
                               பாலமுருகன்


பின்னர் நேற்று முன்தினம் காலை வழக்கம் போல் பணிக்கு சென்று விட்டு இரவு 8 மணிக்கு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, தந்தையிடம் தனக்கு வேலை பணிச்சுமை அதிகமாக இருப்பதாக கூறிவிட்டு இரவு தூங்க சென்று விட்டார். வழக்கமாக தூங்கி எழும் நேரத்தை விட அரை மணி நேரத்திற்கு முன்பாக நேற்று அதிகாலை 4 மணிக்கு எழுந்துள்ளார். பிறகு கழிவறைக்கு சென்ற பாலமுருகன் வெகு நேரமாக வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த தாய் காளியம்மாள் கழிவறையின் கதவை தட்டியுள்ளார். உள்ளே இருந்து எந்த சத்தமும் வரவில்லை. இதனை உடனடியாக தனது கணவர் விஜயராகவனிடம் காளியம்மாள் தெரிவித்தார்.

இதையடுத்து அவர்கள் கழிவறையின் கதவை உடைத்து பார்த்தபோது, பாலமுருகன் சேலையில் தூக்குப்போட்டு சடலமாக தொங்குவதை கண்டு இருவரும் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து சம்பவம் குறித்து நீலாங்கரை காவல் நிலையத்திற்கு விஜயராகவன் தகவல் அளித்ததின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பாலமுருகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

காவலர் பணிக்கு வரும் பெரும்பாலான ஆண்களும், பெண்களும் பணியை விரும்பி வருபவர்கள் இல்லை, தங்களுடைய குடும்ப சூழ்நிலை காரணமாக வேறு வழியின்றி பணிக்கு வருகின்றனர். அதுமட்டும் இல்லாமல் அதில் பெரும்பாலானவர்கள் இரண்டு டிகிரி முடித்தவர்கள் தான்.

இப்படி பணிக்கு வந்த பிறகு தான் ஒரு சில காவலர்கள் அந்த பணியின் சுமையை தாக்குபிடிக்க முடியாமல் இந்த தவறான முடிவை எடுக்கின்றனர். இந்த நிலைக்கு அரசுதான் முக்கிய காரணமாக உள்ளது. காவல்துறையில் நிரப்ப வேண்டிய காலி இடங்களை உடனடியாக நிரப்பாமல் இருப்பதும், பணியில் இருக்கும் காவலர்களையும் உயரதிகாரிகளுக்கு ஆடர்லீயாக பயன்படுத்தி வருவதுமே இந்த சூழ்நிலைக்கு முக்கிய காரணமாக உள்ளது. இந்த சூழ்நிலை மாறாமல் இருக்கும் வரை இந்த தற்கொலை சம்பவத்தை ஒரு போதும் தடுக்கமுடியாது என்பது நிதர்சனமான உண்மையாக உள்ளது.

சார்ந்த செய்திகள்