Skip to main content

“அப்பா குடிக்கக் கூட தண்ணீர் கிடைக்கல.. பயமா இருக்கு..” -  உக்ரைனில் தவிக்கும் தமிழ்நாடு மாணவர்கள்

Published on 26/02/2022 | Edited on 26/02/2022

 

"Dad even got water to drink .. be afraid .." - Tamil Nadu students suffering in Ukraine

 

உக்ரைனை கைப்பற்றும் நோக்கில் ரஷ்ய ராணுவ வீரர்கள் போர் தொடுத்து வருகின்றனர். பதற்றமான சூழலுக்கு நடுவே தமிழகத்தைச் சேர்ந்த 5 ஆயிரம் மாணவர்கள் அங்கு சிக்கியுள்ளனர். 

 

இதில் தேனி மாவட்டத்தில் உள்ள சீலையம்பட்டியைச் சேர்ந்த வீரமணியின் மகன் கோபிநாத், உத்தமபாளையத்தைச் சேர்ந்த மருது பாண்டியன் மகன் ராஜேஷ் பாண்டியன், மற்றும் அயூப்கானின் மகன் சேக் முகமது ஆகிய மூன்று பேர் உக்ரைன் நாட்டில் மருத்துவம் படித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது உக்ரைனில் போர் நடந்து வருவதால் உயிர் பயத்தில் உள்ள தங்கள் பிள்ளைகளை உடனடியாக மீட்டுத் தரக்கோரி மாணவர்களின் பெற்றோர்கள் தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரனிடம் மனு கொடுத்தனர்.

 

இது சம்பந்தமாக உக்ரைனில் சிக்கியுள்ள கோபிநாத்தின் தந்தை வீரமணியிடம் கேட்டபோது, “எம்.ஏ., பி.எட் படித்திருந்த போதிலும் விவசாயமே செய்து வருகிறேன். மகனின் டாக்டர் கனவை நிறைவேற்ற வேண்டும் என நீட் தேர்வும் எழுதினோம். அதில் வாய்ப்பு கிடைக்கவில்லை. காலத்தை விரையம் செய்யக்கூடாது என்பதற்காக மகனை உக்ரைனுக்கு அனுப்பினோம். கடந்த மாதம் அமெரிக்க உளவுத்துறை உக்ரைனில் போர் ஏற்பட வாய்ப்புள்ளது எனத் தெரிவித்திருந்தது. இது குறித்து என் மகனிடம் விசாரித்தபோது, எங்கள் பல்கலைக்கழக நிர்வாகத்தில் போர் ஏற்படும் சூழல் இல்லையெனக் கூறியுள்ளனர். மேலும் அவரவர் நாட்டிற்கு செல்ல விரும்புவோர் செல்லலாம் எனவும் கூறியுள்ளனர். இதனால் அங்குள்ள மாணவர்கள் உறுதியான முடிவெடுக்க முடியாமல் இருந்தனர். இருப்பினும் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பெற்றோர்கள், 28 ஆயிரத்துக்கு எடுக்க வேண்டிய விமான டிக்கெட்டை 86 ஆயிரத்துக்கு எடுத்து பிள்ளைகளை நாடு திரும்ப முயற்சித்தோம். அதற்குள் போர் ஏற்பட்டுவிட்டதால் அந்த விமான டிக்கெட்டும் வீணாகிவிட்டது. 

 

"Dad even got water to drink .. be afraid .." - Tamil Nadu students suffering in Ukraine
போருக்கு முன் மாணவர்கள் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம்

 

கீவ் பகுதியில் உள்ள எனது மகன் அருகே உள்ள ஏர்போர்ட்டை ரஷ்ய வீரர்கள் தகர்த்துவதைப் பார்த்துள்ளார். இதேபோல ஏராளமான மாணவர்கள் குண்டு வெடிப்பு சத்தம், போர் காட்சிகளை பார்த்து மிகுந்த அச்சத்துடன் இருக்கின்றனர். இன்று காலை எனக்கு போன் செய்த மகன், ‘அப்பா குடிக்கக் கூட தண்ணீர் கிடைக்கல. ரொம்ப பயமா இருக்கு’ என்றதைக் கேட்டு உள்ளம் பதறுகிறது. நேற்று இரவு வரை குண்டு வெடிப்பு சத்தங்கள் தொடர்ந்து கேட்டிருக்கிறது. இன்று காலை 8 மணிக்கு பிறகு குண்டு சத்தங்கள் கேட்கவில்லை என்று கூறினார்.

 

கீவ் நகரில் 65 சதவீதத்தை கைப்பற்றியுள்ள ரஷ்ய ராணுவம், அங்கு தங்களின் கொடியையும் நாட்டியுள்ளனர். எனவே இந்திய அரசு தலையீட்டு அங்குள்ள மாணவர்களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறினார்.

 

"Dad even got water to drink .. be afraid .." - Tamil Nadu students suffering in Ukraine

 

இந்த நிலையில், உக்ரைனில் இருந்து நாடு திரும்பியுள்ள தேனி மாவட்டம் போடியைச் சேர்ந்த வெங்கடேஸ்வரன் மகன் தனுஷ்குமாரிடம் கேட்ட போது, “உக்ரைன் கீவ் நகரில் உள்ள பல்கலைக் கழகத்தில் எம்.பி.பி.எஸ். 3ஆம் ஆண்டு படித்து வந்தேன். என்னுடன் தேனி மாவட்டம், கோம்பையைச் சேர்ந்த கோகுல், ஜெய் ஆகாஷ், ஷாரு அஸ்வின், கோபிகிருஷ்ணா, ரெனிடா, கரூரை சேர்ந்த லோகேஸ்வரன், ராமநாத புரத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, சேலத்தைச் சேர்ந்த தேவ் ஆகிய 9 பேர் உக்ரைனில் இருந்து திரும்பினோம். உக்ரைனில் போர் தொடங்குவதற்கு முன்பு, பல்கலைக்கழகத்தில் இருந்து போர் தொடங்க வாய்ப்புகள் குறைவு என்றும், தேவைப்பட்டால் சொந்த நாட்டுக்கு செல்லலாம் அல்லது இங்கேயே இருந்து படிப்பை தொடரலாம் என்றும் தெரிவித்தனர். இதனால், பல மாணவ-மாணவிகள் படிப்பு முக்கியம் என்பதால் சொந்த ஊருக்கு திரும்பாமல் கல்லூரிக்கு சென்றனர். 

 

போர் தொடங்கிய நாள் வரை வகுப்புகள் நடந்தன. நாங்கள் கடந்த 22ஆம் தேதியே உக்ரைனில் உள்ள கார்கிவ் பகுதியில் இருந்து ரயில் மூலம் லிவிவ் பகுதிக்கு புறப்பட்டோம். அங்கிருந்து துருக்கியில் உள்ள இஸ்தான் புல் விமான நிலையத்துக்கு 23ஆம் தேதி சென்றோம். பின்னர் அங்கிருந்து கத்தாரில் உள்ள தோகா விமான நிலையம் வந்து, அங்கிருந்து கோழிக்கோடு விமான நிலையத்துக்கு வந்தோம். 3 விமானங்கள் மாறி கோழிக்கோடு வந்து சேர்ந்தோம். அங்கிருந்து பஸ்சில் சொந்த ஊருக்கு திரும்பி வந்தோம். நாங்கள் வந்தது தான் கடைசி விமானம் என்று நினைக்கிறேன். விமானத்தில் வந்து கொண்டு இருக்கும் போது தான் போர் தொடங்கி குண்டு வீசத் தொடங்கிய தகவல் கிடைத்தது. என்னோடு படிக்கும் சக மாணவர்களை தொடர்பு கொண்டேன். அவர்கள் பல்கலைக்கழகங்களில் உள்ள பாதாள அறைகள் மற்றும் மெட்ரோ ரயிலுக்கான சுரங்க பகுதிகளில் தங்கி இருப்பதாக தெரிவித்தனர். 

 

"Dad even got water to drink .. be afraid .." - Tamil Nadu students suffering in Ukraine

 

அவர்கள் உணவு, குடிநீர் கிடைக்காமல் தவிக்கின்றனர். உக்ரைனில் தண்ணீரை ஏ.டி.எம். போன்ற மிஷின்களின் மூலம் தான் பெற முடியும். அந்த மிஷின் அனைத்தும் செயல்படாமல் உள்ளன. போர் காரணமாக தண்ணீர், உணவு இன்றி தவிப்பவர்களுக்கு அரசு உடனடியாக உதவிகள் செய்ய வேண்டும். போன்களுக்கு  சார்ஜ் போடக்கூட வழியின்றி பல மாணவர்கள் தங்களின் பெற்றோர்களிடம் பேச முடியாத நிலையில் உள்ளனர். மெட்ரோ சுரங்கப்பாதையில் பதுங்கி இருக்கும் மாணவிகள் கழிப்பறைக் கூட செல்ல முடியாமல் தவிப்பதாக கூறுகிறார்கள்.


எங்களோடு உக்ரைனில் இருந்து புறப்பட்டு இஸ்தான் புல் விமான நிலையத்துக்கு வந்தவர்களில் 2 பேர் அங்கேயே தடுத்து நிறுத்தப்பட்டனர். அங்கு தடுப்பூசி செலுத்திக்கொண்டு தொடர்பான படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்தால் தான் விமானத்தில் பயணம் செய்ய முடியும். அதற்கு தடுப்பூசி சான்றிதழ் எண் போன்ற விவரங்கள் தேவை. அது போன்ற விவரங்களை முழுமையாக கொடுக்க இயலாமல் 2 பேர் அங்கு நிறுத்தப்பட்டனர். அவர்கள் நிலை என்ன ஆனது என தெரியவில்லை” என்று கூறினார்.


தேனி பங்களாமேடு திட்டச்சாலையைச் சேர்ந்த சரவணன் மகன் ரோகித் குமார். இவர், உக்ரைன் நாட்டின் கார்கிவ் நகரில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் விண்வெளி பொறியியல் பட்டப்படிப்பு 3ஆம் ஆண்டு படித்து வருகிறார். உக்ரைன் மீது ரஷ்ய போர் தொடுத்துள்ள நிலையில், கார்கிவ் நகரை ரஷ்யா கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் மாணவன் ரோகித்குமார், உக்ரைனில் தான் வசிக்கும் இடத்தில் உள்ள நிலவரம் குறித்து ஒரு வீடியோ பதிவு செய்து. தனது பெற்றோருக்கு அனுப்பி உள்ளார்.

 

அதில், “நாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம். ஆனாலும் பயமாக இருக்கிறது. நேற்று இங்கு தொடர்ந்து குண்டுவெடிப்பு நடந்தது. நாங்கள் பாதுகாப்பான இடத்தில் தான் இருந்தோம். எங்களுக்கு உணவு கொடுத்தார்கள். காலையில் தான் பாதாள அறையில் இருந்து வெளியே வந்தோம். இருந்தாலும் மீண்டும் குண்டு வீச்சு நடந்தால் பாதுகாப்பாக இருக்க ஏற்பாடுகள் செய்து இருக்கிறார்கள். எங்களை எல்லைக்கு கூட்டிச்சென்று எப்போது இந்தியாவுக்கு அழைத்து செல்வார்கள் என்ற விவரம் தெரியவில்லை. நான் படிக்கும் பல்கலைக்கழகத்தில் மட்டும் 200 தமிழ் மாணவர்கள் இருக்கிறோம். இன்னும் அரசிடம் இருந்து முறையான உத்தரவு வரவில்லை. உத்தரவு வந்தால் எங்களை எப்படி இங்கிருந்து அழைத்துச் செல்வது என்ற விவரத்தை சொல்வதாக கூறி இருக்கிறார்கள். அது மட்டும் எங்களுக்கு வேகமாக கிடைத்தால் நன்றாக இருக்கும்” என்று கூறியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்