Skip to main content

“ஆரம்பம் முதல் கடைசிவரை கட்சியின் கொள்கை பிடிப்புடன் வாழ்ந்து மறைந்தவர் டி. ராஜாராமன்” - கே. பாலகிருஷ்ணன் புகழஞ்சலி!

Published on 21/07/2021 | Edited on 21/07/2021

 

"D. Rajaraman who lived and died with the party's policy from beginning to end" - K. Balakrishnan Praise

 

சிதம்பரம் அருகே கிள்ளை சிங்காரகுப்பம் கிராமத்தில், கடலூர் மாவட்ட செங்கொடி இயக்கப் போராளியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவருமான ராஜாராமன் படத்திறப்பு  நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பரங்கிப்பேட்டை ஒன்றியச் செயலர் ரமேஷ்பாபு தலைமை தாங்கினார். மாவட்டக் குழு உறுப்பினர் கற்பனை செல்வம் அனைவரையும் வரவேற்றார். இதில் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கலந்துகொண்டு படத்தைத் திறந்துவைத்தார்.

 

பின்னர் அவர் பேசுகையில், “கட்சியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு கடைசிவரை கொள்கை பிடிப்புடன் வாழ்ந்து மறைந்தவர் டி. ராஜாராமன். அவரது வாழ்வை இப்பகுதியில் உள்ள பட்டியலின மற்றும் ஏழை மக்களுக்காக அர்ப்பணித்தவர். அவர் கூட்டுறவு சங்கத் தலைவராக இருந்தபோது நேர்மையுடன் செயல்பட்டு, ஊழலற்ற ஆட்சியை நடத்தினார். இப்பகுதியில் இறால் பண்ணை வேண்டாம் என்ற போராட்டத்தில் தொடர்ந்து போராடி வெற்றி கண்டவர். குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்டது என்றால், டி.ஆர். போன்றவர்களின் இடைவிடாத போராட்டங்களே காரணமாகும். அதேபோல் கூலித் தொழிலாளர்களுக்கான உரிமையைப் பெற்றுதரும் போராட்டத்தில் உறுதியாக நின்று போராடி உரிமையைப் பெற்றுத் தந்தவர்.

 

இப்பகுதி மக்களுக்கு டிஆரின் இழப்பு பேரிழப்பாகும், அவர் விட்டுச் சென்ற பணிகளை அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுத்த உறுதியேற்போம்” என்றார். அதேபோல் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி கலந்துகொண்டு அவரது படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி பேசுகையில், “ராஜாராமன் எப்போதுமே சரி, தவறு என்பதை நேருக்கு நேராகப் பேசக் கூடியவர். நல்ல நற்பண்புகளைக் கொண்டவர். இப்பகுதி மக்களுக்காக தொடர்ந்து போராடி பல்வேறு வெற்றிகளைக் கண்டவர். நல்ல நண்பரின் நினைவுகளை நினைவுகூரும் வகையில் இது அமைந்துள்ளது. அவரது இறப்பிற்கு காங்கிரஸ் கட்சியின் சார்பில் இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று பேசினார்.

 

நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூர் மாவட்டச் செயலாளர் டி. ஆறுமுகம், மாநிலக் குழு உறுப்பினர்கள் ஜான்சிராணி, மாதவன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் அறவாழி, காங். கட்சியின் மாநிலச் செயலாளர் சித்தார்த்தன், பொதுச்செயலாளர் சேரன், அதிமுக ஒன்றியச் செயலாளர் அசோகன், சிபிஎம் மூத்த தலைவர் மகாலிங்கம், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ராமச்சந்திரன், ரவிச்சந்திரன், கிள்ளை காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி, சிபிஎம் புவனகிரி ஒன்றியச் செயலாளர் சதானந்தம், கீரப்பாளையம் ஒன்றியச் செயலாளர் வாஞ்சிநாதன், குமராட்சி மூர்த்தி, சிதம்பரம் நகரச் செயலாளர் ராஜா, பரங்கிப்பேட்டை ஒன்றிய குழு உறுப்பினர்கள் என அனைத்து கட்சியினரும் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள், உறவினர்கள் உள்ளிட்ட அனைவரும் கலந்துகொண்டு அவரது படத்திற்கு மலர் தூவி புகழஞ்சலி செலுத்தினார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்