Skip to main content

தூய்மைப் பணியாளர் உயிரிழப்பு; சக ஊழியர்கள் மறியல்

Published on 26/05/2023 | Edited on 26/05/2023

 

cuddalore pennadam town panchayat  worker related incident 

 

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் பேரூராட்சியில் தூய்மைப் பணியாளராக வேலை செய்து வருகிறார் சோழன் நகர் பகுதியைச் சேர்ந்த பாபு (வயது 40). இவர் கடந்த 19 ஆம் தேதி பேரூராட்சி பகுதியில் உள்ள சிலுப்பனூர் சாலையில் கழிவுநீர் கால்வாய் அடைப்பை சரி செய்து கொண்டிருந்தபோது மயங்கி கீழே விழுந்துள்ளார். அவரை மீட்ட சக தொழிலாளர்கள் திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்க்கப்பட்டார். அங்கு பாபுவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

 

இந்நிலையில் பாபு இறந்தது குறித்த தகவல் அறிந்த தூய்மைப் பணியாளர்கள், பெண்ணாடம் பேரூராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பிறகு மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், இறந்த பாபுவின் குடும்பத்திற்கு பேரூராட்சி நிர்வாகம் நிவாரணம் வழங்க வேண்டும். அவரது குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும் என்று கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

இதுகுறித்து தகவல் அறிந்த பெண்ணாடம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் குமார், சப்-இன்ஸ்பெக்டர் பிரகஸ்பதி, வட்டாட்சியர் ரவிச்சந்திரன் ஆகியோர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையின் முடிவில் இறந்து போன பாபுவின் மனைவி தீபாவுக்கு பேரூராட்சியில் வேலை வழங்குவது குறித்து அதிகாரிகளிடம் பேசி முடிவு செய்யப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். அதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். தூய்மைப் பணியாளர் திடீர் மரணம் அவரது குடும்பத்தினர் மற்றும் சக ஊழியர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்