Skip to main content

தம்பியை கொலை செய்த அண்ணனுக்கு ஆயுள் தண்டனை வழங்கிய நீதிமன்றம்!

Published on 08/10/2021 | Edited on 08/10/2021

 

Court sentences brother to life imprisonment

 

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே உள்ளது கெங்கவரம் கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் அசோகன் (50). இவருக்கும், இவருடைய அண்ணன் ஆனந்தன் (55) என்பவருக்கும் அதே பகுதியில் சில ஏக்கர் நிலம் உள்ளது. இருவருக்கும் தங்கள் குடும்பச் சொத்தை பங்கு பிரித்துக்கொள்வதில் பிரச்சனை இருந்துவந்துள்ளது. இதில் அண்ணன் ஆனந்தனிடம் தம்பி அசோகன் அடிக்கடி குடும்பச் சொத்தைப் பாகம் பிரித்துக் கொடுக்குமாறு கேட்டுவந்துள்ளார். ஆனால் ஆனந்தன் சொத்தைப் பிரித்து தராமல் காலம் தாழ்த்திவந்துள்ளார்.

 

இதனால் சகோதரர்கள் இருவருக்கும் இடையே அவ்வப்போது பிரச்சனை இருந்துவந்துள்ளது. இந்த நிலையில் கடந்த 7-9-2019 அன்று சகோதரர்களுக்குள் மீண்டும் சொத்து தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த அண்ணன் ஆனந்தன், தம்பி அசோகனை பலமாக தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அசோகன் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து அசோகன் குடும்பத்தினர் கண்டாச்சிபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்தப் புகாரின் பேரில் ஆனந்தன் மீது கொலை வழக்குப் பதிவுசெய்து கைது செய்தனர்.

 

அது சம்பந்தமான வழக்கு விழுப்புரம் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இளவழகன், தம்பியைக் கொலை செய்த அண்ணன் ஆனந்தனுக்கு ஆயுள் தண்டனையும் 15 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து சிறை தண்டனை விதிக்கப்பட்ட ஆனந்தன், கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

 

 

சார்ந்த செய்திகள்