Skip to main content

ஒன்றியம் என சொல்வதற்கு தடைவிதிக்க முடியாது - நீதிமன்றம் அதிரடி!

Published on 01/07/2021 | Edited on 01/07/2021

 

The Union cannot be barred from saying so- Court Action

 

தமிழ்நாடு அரசின் அலுவல்ரீதியான அறிவிப்புகள், நிகழ்த்தப்படும் முறைகள் போன்றவற்றில் பயன்படுத்தப்படும் ஒன்றியம் என்ற வார்த்தைக்கு இடைக்காலத் தடை கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

 

திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த ராமசாமி என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “தமிழ்நாட்டில் தற்போது ஆட்சி அமைத்திருக்கும் திமுக அரசு, இந்திய அரசை ஒன்றிய அரசு என்ற அழைத்துவருகிறது. திமுக கட்சியின்கீழ் கிட்டத்தட்ட ஒன்றரை கோடி உறுப்பினர்கள் இருக்கும் நிலையில், அவர்கள் ஒவ்வொருவரிடத்திலும் பிரிவினைவாதத்தை ஏற்படுத்தும் வகையில் இந்தச் செயல் இருக்கிறது. எனவே இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு எடுக்கப்படவில்லை எனில் இது தவறான முன்னுதாரணமாக அமைவதோடு, ஜம்மு காஷ்மீர் போன்ற பிரிவினைக்கு வாய்ப்பாக இருக்கும்” என கூறியிருந்தார். அதேபோல் “தமிழ்நாடு தலைமைச் செயலர் அலுவல் ரீதியாக நிகழ்த்தப்படும் முறைகள் போன்றவற்றில் ஒன்றியம் என்ற வார்த்தையைப் பயன்படுத்த இடைக்கால தடை விதிக்க வேண்டும். தமிழ்நாடு அரசின் அறிவிப்பு முறைகள் போன்றவற்றில் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டைப் பாதுகாக்கும் வகையில் அறிவுறுத்துமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.

 

இந்த வழக்கு இன்று (01.07.2021) நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் 'இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இந்திய அல்லது பாரதம் என்று வார்த்தைகள் மட்டுமே பயன்பாட்டில் உள்ளன. அவ்வாறு இருக்கையில் அவை அல்லாத ஒன்றியம் என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது தவறானது’ என தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதிகள், 'தடுப்பூசி எடுத்துக்கொள்ள கட்டாயப்படுத்தக் கூடாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அவ்வாறு இருக்கையில் இப்படித்தான் பேச வேண்டும் என எவ்வாறு உத்தரவிட முடியும்’ என்றனர். அதற்கு மனுதாரர் தரப்பில், சட்டமன்றத்தில் இது தொடர்பாக கேள்வி எழுப்பியபோது முதலமைச்சர் ஒன்றிய அரசு என அழைப்பதில் தவறில்லை. அவ்வாறுதான் அழைக்கப்படும் என  குறிப்பிட்டார். அதைக் கேட்டுக்கொண்ட நீதிபதிகள், ‘மனுதாரர் கோரும் வகையில் முதல்வரும் அமைச்சர்களும் இவ்வாறுதான் பேச வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட இயலாது. மனுதாரர் தமிழ்நாட்டு மக்களுக்கு எதனை கற்றுக்கொடுக்க விரும்புகிறார் எனத் தெரியவில்லை. மனுதாரர் கூறும் வகையில் உத்தரவிட முடியாது’ என குறிப்பிட்டு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“சர்.பிட்டி தியாகராயர் காலை உணவுத் திட்டத்தின் முன்னோடி” - தமிழக முதல்வர் புகழாரம்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Chief Minister of Tamil Nadu felicitated for Pioneer of Sir Pitti Thiagarayar Breakfast Scheme

திராவிடக் கட்சியின் தாய் அமைப்பான நீதிக்கட்சியின் தலைவராக பொறுப்பு வகித்து வந்தவர் சர்.பிட்டி தியாகராயர். இந்திய சுதந்திரத்துக்கு பிறகு, முன்னாள் முதல்வர் காமராஜர் மதிய உணவுத் திட்டத்தை தொடங்குவதற்கு முன்பே, அந்த திட்டத்தை சென்னை மாநகராட்சி பள்ளிகளில், சர்.பிட்டி தியாகராயர் தொடங்கி வைத்து முன்மாதிரியாக திகழ்ந்துள்ளார். இவரது நினைவாக தான் சென்னை தியாகராயர் நகர் (தி.நகர்) பகுதிக்கு இவரது பெயர் வைக்கப்பட்டுள்ளது. இன்று (27-04-24) சர்.பிட்டி தியாகராயரின் 173ஆவது பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. 

சர்.பிட்டி தியாகராயரின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ‘பார்ப்பனரல்லதார் கொள்கைப் பிரகடனம் வெளியிட்டு திராவிட இனத்தின் உரிமைக்குரலை ஓங்கி ஒலித்த தீரர்! அப்பழுக்கற்ற அரசியல் வாழ்வினால் சென்னையின் கல்வி, மருத்துவ வளர்ச்சிக்குத் தூணாக விளங்கிய மக்கள் தொண்டர்!

காலை உணவுத் திட்டத்தின் முன்னோடி!. தேடி வந்த பதவியை மறுத்த மாண்பாளர், நம் வெள்ளுடை வேந்தர் தியாகராயரின் பிறந்தநாளில் அவரது வாழ்வையும் பணியையும் போற்றி வணங்குகிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

தெருநாய்களுக்குக் கருத்தடை கோரி வழக்கு; நீதிமன்றம் சரமாரி கேள்வி!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
The court barrage of questions for Lawsuit for sterilization of stray dogs

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாலாஜி. வழக்கறிஞராக இருக்கும் பாலாஜி, மதுரை கிளை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார். அவர் அளித்த அந்த மனுவில், ‘மதுரை மாநகராட்சி பகுதிகளில் தெருநாய்களின் தொல்லை அதிகமாக உள்ளது. இந்தத் தெருநாய்கள் சாலையோரத்திலும், பொது மக்கள் கூடும் இடத்திலும் சுற்றி வருகின்றன. சாலையில் செல்லும் போது தெருநாய்கள் குறுக்கே வருவதாலும், வாகனங்களில் குறுக்கே பாய்வதாலும் வாகன ஓட்டிகள் விபத்துக்களில் சிக்கும் அபாயம் உள்ளன. 

மேலும், தெருநாய்கள் கடித்து பலருக்கும் ரேபிஸ் நோய் பரவி வருகிறது. எனவே, நாய்களைக் கட்டுப்படுத்த வேண்டும். அவற்றின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்தவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பான வழக்கு விசாரணை மதுரை கிளை உயர்நீதிமன்ற நீதிபதிகள் முன்பு வந்தது. 

அப்போது அரசு தரப்பில் கூறியதாவது, ‘மதுரை மாநகராட்சியில் தெருநாய்களைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை 39,000க்கும் மேற்பட்ட நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்தப் பணிகளை மேற்கொள்ள மதுரை மாநகராட்சியில் 2 கால்நடை மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்’ எனத் தெரிவிக்கப்பட்டது. அதனைப் பதிவு செய்த நீதிபதிகள், ‘மதுரை மாநகராட்சியில் தெருநாய்கள் இவ்வளவு அதிகமாக இருக்கிறது. இந்தச் சூழலில், கருத்தடை பணிகளை மேற்கொள்ள இரண்டு கால்நடை மருத்துவ பணியிடம் எப்படி போதுமானதாக இருக்கும்?. எனவே, மதுரையில் கருத்தடை பணிகளுக்கு கூடுதலாக கால்நடை மருத்துவர்களை நியமிக்கலாம்’ எனக் கூறி இது தொடர்பான வழக்கை ஜூன் 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.