சேத்தியாத்தோப்பு அருகே பாழ்வாய்க்கால் பகுதியில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக வேணு (85) ராமானுஜம் (80) என்ற தம்பதிகள் டீ கடை வைத்து நடத்தி வருகிறார்கள். இந்தக் கடையில் மதிய நேரத்தில் தயிர் சாதம், தக்காளி சாதமும் விற்பனை செய்யப்படுகின்றன. இவர்கள் வயது முதிர்வில் தள்ளாடும் நிலையிலும் மன உறுதியுடன் தொடர்ந்து கடையை நடத்திக் குடும்பத்தை கவனித்து வருகிறார்கள்.
பாழ்வாய்கால் பகுதியாக செல்லும் வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரும் இவரது கடையில் டீ மற்றும் உணவு அருந்தாமல் செல்ல மாட்டார்கள் என அப்பகுதியில் உள்ளவர்கள் கூறுகிறார்கள். சமீபத்தில் புவனகிரி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அருண்மொழிதேவன் தேர்தல் பிரச்சாரத்திற்கு அந்த பகுதிக்கு சென்றபோது கடையை பார்த்து உள்ளே உட்கார்ந்து எளிமையான முறையில் உணவு அருந்தி சென்றுள்ளதை முதியவர்கள் கூறுகிறார்கள்.
மேலும், மிகவும் குறைந்த கட்டணத்தில் அவர்கள் அப்பகுதி மக்களுக்கு உணவு பொருட்கள் விற்பனை செய்வது அப்பகுதியில் உள்ளவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த தம்பதிக்கு ஒரு ஆண் பிள்ளை, 6 பெண் பிள்ளைகள் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் நடைபெற்றுவிட்டது. இந்த முடியாத தள்ளாடும் வயதிலும் மன தைரியத்துடன் இவர்கள் உழைத்து வாழ வேண்டும் என நினைத்து தினந்தோறும் காலை 4 மணி முதல் மாலை 6 மணி வரை கடையில் வியாபாரம் செய்து வருகிறார்கள். இவர்கள் வியாபாரம் செய்வதற்கு உதவியாக இவர்களது மகன் மற்றும் மகளின் பேரபிள்ளைகள் கடைக்கு வேண்டிய பொருட்களை வாங்கி உணவுகளை வீட்டில் தயார் செய்து கொடுத்துவிடுகிறார்கள். இதனைக் கொண்டு பகல் நேரம் முழுவதும் கடையில் அமர்ந்து வியாபாரம் செய்து, அதில் கிடைக்கும் தொகையை கொண்டு குடும்பத்தை பார்த்துக்கொள்கிறார்கள். தள்ளாத வயதிலும் தளராமல் உழைக்கும் இந்த வயதான தம்பதியின் கடையில் டீ குடிக்க, காலை நேரத்தில் ஒரு கூட்டமே உள்ளது என்பதை அறிய முடிகிறது.