திருச்சி மாநகராட்சி மாமன்ற அவசர மற்றும் சாதாரணக் கூட்டம் மேயர் மு.அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. ஆணையர் சரவணன், துணை மேயர் திவ்யா முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாநகராட்சி துணை ஆணையர் நாராயணன் நகரப்பொறியாளர் சிவபாதம், மண்டலத் தலைவர்கள் ஆண்டாள் ராம்குமார், மதிவாணன், துர்கா தேவி, ஜெய நிர்மலா, விஜயலட்சுமி கண்ணன் மற்றும் அனைத்து மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி உதவி ஆணையர்கள், செயற்பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளார்கள், சுகாதார அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.
இந்த கூட்டத்தில் பேசிய 60ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் காஜாமலை விஜய், கடந்த 2 வருடங்களாக என்னுடைய வார்டில் எந்த விதமான வளர்ச்சி பணிகளும் நடைபெறவில்லை. இது தொடர்பாக பல முறை தொடர்பு கொண்டு அதிகாரிகளிடம் பேசியும் அதனைக் கண்டுகொள்ளவில்லை. இதனால் எனது வார்டு மக்களுக்கு என்னால் பதில் கூற முடியவில்லை. 25 வருடமாக மாமன்ற உறுப்பினராக வேண்டும் என்ற எனது கனவை நிறைவேற்றிக் கொடுத்த மக்களுக்கும் அமைச்சர் நேருவுக்கும் நன்றியை தெரிவித்துகொண்டு எனது பதவியை ராஜினாமா செய்கிறேன் என்று கண்ணீருடன் பேசிய காஜமலை விஜய் மேயர் மற்றும் ஆணையரிடம் தனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்தார்.
இதனைத் தொடர்ந்த் காஜாமலையை மற்ற மாமன்ற உறுப்பினர்கள் சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் காஜாமலை விஜய் என்னை யாரும் தடுத்தீர்கள் என்றால் காரில் இருக்கும் மண்ணெண்ணையை எடுத்து வந்து தற்கொலை செய்துகொள்வேன் எனத் தெரிவித்தார். இந்த நிலையில் கூட்டத்தில் இருந்து வெளியேறிய காஜாமலை விஜய் மீண்டும் வந்து தீடீரென பெட்ரோலை தனது தலையில் ஊற்றி தீவைத்துக்கொள்ள முயன்றார். இதனைப் பார்த்து அதிர்ச்சிடைந்த காவலர்கள் காஜாமலையை தடுத்து நிறுத்தி சமாதானம் செய்தனர்.
இந்த நிலையில், தற்கொலைக்கு முயன்ற போது அதனை ஒளிப்பதிவு செய்த தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளரை காஜாமலை விஜயின் கார் ஓட்டுநர் மற்றும் மாமன்ற உறுப்பினர் 45 வது வார்டு கவுன்சிலர் ராமதாஸ் தாக்கியதால் அந்த பகுதி பெரிதும் பரபரப்புடன் காணப்பட்டது. திமுக உறுப்பினர்கள் பெரும்பான்மையாக உள்ள திருச்சி மாநகராட்சியில் வளர்ச்சி பணிகள் தனது வார்டில் நடைபெறவில்லை என்று மாமன்ற உறுப்பினர் ஒருவர் ராஜினாமா செய்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.