Skip to main content

டாஸ்மாக் கடைகள் திறப்பு!

Published on 07/07/2021 | Edited on 07/07/2021

 

 

CORONAVIRUS TASMAC SHOPS OPENING IN COIMBATORE


தமிழகத்தில் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு காரணமாக அரசு டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்தன. இதில் பாதிப்பு அதிகம் இருந்த கோவை, திருப்பூர் மற்றும்  நீலகிரி உட்பட 11 மாவட்டங்களில் மட்டும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாமல் இருந்தது. 

 

இந்த சூழலில், அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே மாதிரியான தளர்வுகள் அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து கோவை உட்பட 11 மாவட்டங்களிலும் நேற்று முன்தினம் (05/07/2021) முதல் டாஸ்மாக் கடைகள் செயல்படத் தொடங்கியுள்ளன.

 

மதுபான கூடங்கள் இயங்காது என்று ஏற்கனவே தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில், அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி கோவையில் உள்ள 293 டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை நடைபெற்று வருகிறது.

 

அதன்படி டாஸ்மாக் கடைகளில் விற்பனையாளர்கள் முகக்கவசம் அணிந்து மது விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் தனிநபர் இடைவெளியைப் பின்பற்றி முகக்கவசம் அணிந்திருந்தால் மட்டுமே மதுபானம் வழங்க வேண்டும் என விற்பனையாளர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

 

வாடிக்கையாளர்கள் நோய் தொற்று பாதுகாப்பு விதிகளைப் பின்பற்ற ஏதுவாக கடைகள் முன்பு மரக்கட்டைகள் கொண்டு தடுப்புகள் அமைக்கப்பட்டு, வெள்ளை நிறபூச்சு கொண்டு கட்டங்கள் வரையப்பட்டுள்ளன. இருப்பினும் கடைத் திறந்ததும் பெரும்பாலான இடங்களில் குறைந்த அளவிலான வாடிக்கையாளர்கள் மட்டுமே வரிசையில் நின்று மது வகைகளை வாங்கிச் செல்கின்றனர்.

 

மாவட்டம் முழுவதும் உள்ள கடைகளில் அரசின் நிலையான வழிகாட்டு நெறிகளைக் கண்காணிக்க 6 கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

 

காலை 10.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை 10 மணி நேரம் கடை திறந்திருக்கும் என்ற காரணத்தால் டோக்கன் வழங்கப்பட மாட்டாது எனவும், வாடிக்கையாளர்கள் வரிசையில் நின்று வழக்கம் போல் மதுபானங்களை வாங்கிக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அதே நேரத்தில் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்தால் தனிநபர் இடைவெளியை உறுதி செய்யும் வகையில் டோக்கன் முறை அமல்படுத்தப்படும் எனவும் டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 

கோவை மற்றும் அதன் அண்டை மாவட்டங்கள் அனைத்திலும் டாஸ்மாக் கடைகள் நீண்டகாலமாக அடைக்கப்பட்டிருந்ததால் பலர் திண்டுக்கல் திருச்சி உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்தும், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் மதுபாட்டில்களை வாங்கி வந்து அதிக விலைக்கு விற்பனை செய்து வந்தனர்.

 

இந்த நிலையில், கோவையில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் கூட்டம் இல்லாமல் டாஸ்மாக் கடைகள் வெறிச்சோடிப் போயிருக்கின்றன.

 

 

சார்ந்த செய்திகள்