Skip to main content

"சென்னையில் ஒரு லட்சம் வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன" -மாநகராட்சி ஆணையர் பேட்டி 

Published on 19/06/2020 | Edited on 19/06/2020
chennai corporation commissioner

 

சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஐ.ஏ.எஸ். ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில், மாநகராட்சி சார்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ரிப்பன் மாளிகை வளாகத்தில் உள்ள அம்மா மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்தார்.  

அப்போது பேசிய அவர், "மூன்று மாத காலமாக ஒருநாள் தடுப்பு நடவடிக்கையில் சென்னை மாநகராட்சி சிறப்பான நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுவரை சென்னை மாநகராட்சியில் 2 லட்சத்து 10 ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 37 ஆயிரத்து 70 பேருக்கு கரோனா தொற்று உறுதியாக இருந்தது. இதில் இருந்து தற்போது வரை 55% என்ற அளவில் 19 ஆயிரத்து 686 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

தினமும் 11,000 மாநகராட்சி ஊழியர்கள் மூலம் கடந்த 70 நாட்களாக வீடு, வீடாக சென்று இருமல் காய்ச்சல், சளி அறிகுறி இருக்கிறதா என்று கேட்டு அறிந்தனர். தற்பொழுது ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது இதனால் 90% மக்கள் வீட்டிலேயே இருக்கின்றனர். எனவே தற்போது மக்கள் அனைவருக்கும் பரிசோதனை செய்வது என்பது எளிமையாக இருக்கும்.

சென்னை மாநகராட்சி முழுவதும் 450 முதல் 500 மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு மருத்துவர்கள் பரிசோதனை செய்து வருகிறார்கள். இந்த பனிரெண்டு ஊரடங்கு நாட்களை மக்கள் அனைவரும் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். தங்களுக்கு காய்ச்சல், இருமல், சளி போன்ற ஏதேனும் அறிகுறி தென்பட்டால் உடனடியாக மருத்துவ பணியாளரிடம் தெரிவிக்க வேண்டும்.

தற்பொழுது அனைத்து பணியாளர்களுக்கும் முதல்வர் அவர்களின் ஆணைக்கு இணங்க தெர்மல் பரிசோதனை கருவி வழங்கப்பட்டிருக்கிறது. இவர்கள் அனைவரும் ஒவ்வொருவரின் வீடுகளுக்குச் சென்று அனைவரையும் பரிசோதனை செய்வார்கள். 

ஏதேனும் அறிகுறிகள் இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு தகுந்த சிகிச்சைகள் மாநகராட்சியின் மூலம் அளிக்கப்படும். கரோனா தொற்று உறுதியாகும் பட்சத்தில் அவர்கள் தனிமைப்படுத்தப்படும் முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் தொற்று இல்லாத பட்சத்திலும் 14 நாட்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்தபடுவார்கள். 

அறிகுறி இருந்தபோதிலும் மக்கள் தாமாக முன்வந்து மருத்துவ பணியாளர்களிடம் கூறுவதில்லை. இதன் காரணமாகவும் இறப்பு அதிகரிக்கிறது. முன்கூட்டியே அவர்கள் கூறும்போது அவர்களுக்கான சிகிச்சையை துரிதமாக மேற்கொள்ள முடியும். அவர்கள் மூலம் மற்றவர்களுக்கு பரவுவதும் கட்டுப்படுத்தப்படும்.

மக்கள் அனைவரும் தங்கள் பகுதியில் இருக்கக்கூடிய மருத்துவ முகாமை மாநகராட்சியில் உள்ள ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒவ்வொரு கட்டுப்பாட்டு அறைகள் அதற்கான எங்கள் வழங்கப்பட்டிருக்கிறது. இதனை ஏழை எளிய மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் அவர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதற்கு முடியவில்லை மருத்துவ பரிசோதனை செய்ய முடியவில்லை என்கிறபோது இந்த கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ளலாம். 

இதுவரை மாநகராட்சியில் ஒரு லட்சம் வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. முதல்வரின் ஆணைக்கிணங்க நான்காயிரம் இளைஞர்களை கொண்டு ஒரு மிகப்பெரிய குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இவர்கள் மாநகராட்சிகள் ஐந்து நாட்கள் முதல் 12 நாட்கள் வரை தனிமைப்படுத்தப்பட்டுள்ள வீடுகளை கண்காணிப்பார்கள். 

இதுவரை சென்னை மாநகராட்சியில் 299 பேர் கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையிலிருந்து வெளியே சென்றுள்ளனர். இவர்களை காவல்துறையின் மூலம் கண்டறிந்து தற்பொழுதுவரை 150 பேர் வரை மீட்கப்பட்டுள்ளனர். மற்றவர்களை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகிறார்கள். இது ஒரு தொடர் நடவடிக்கையாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அண்ணா பல்கலைக்கழகங்கள் போன்ற கல்லூரிகள் தனிமைப்படுத்தப்படும் வார்டுகளாக மாற்றும்போது அங்குள்ள மாணவர்களின் உடமைகளை உரிய மாணவர்களிடம் ஒப்படைக்கும் பணியை மாநகராட்சி அதிகாரிகள் செய்து வருகிறார்கள். தற்பொழுது மருத்துவ அவசரம் காரணமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது இதுபோன்ற நடவடிக்கை மிக அத்தியாவசியமாக இருக்கிறது. 

தனியார் கட்டிடங்கள் ஆக இருந்தாலும், அரசு கட்டிடமாக இருந்தாலும் மாநகராட்சி, கட்டிடத்தை கரோனா தொற்று தனிமைபடுத்துவதற்கு தேவையான கட்டிடம் என அறிவிக்கும்போது அதனை மாநகராட்சியிடம் ஒப்படைத்தே ஆக வேண்டும்" என்றார் அதிரடியாக.

 

சார்ந்த செய்திகள்