Skip to main content

'முதல்வரின் மருத்துவக் காப்பீடு, தேசிய சுகாதார பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் கரோனா சிகிச்சை'- தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தகவல்!

Published on 18/06/2020 | Edited on 18/06/2020

 

corona treatment hospital tamilnadu government chennai high court


தனியார் மருத்துவமனைகளில், முதல்வரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழும், தேசிய சுகாதார பாதுகாப்புத் திட்டத்தின் கீழும், கரோனாவுக்கு சிகிச்சை பெறலாம் என, தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

 

கரோனா பாதித்தவர்களுக்கு இலவசமாக மருத்துவச் சிகிச்சை வழங்க வேண்டும். கரோனாவைக் கட்டுப்படுத்த அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு உதவியாக மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் குழுக்கள் அமைக்க வேண்டும். கரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோருக்கு முழு உடல் கவசம் வழங்க வேண்டும் எனக் கோரி வழக்கறிஞர் ஜிம்ராஜ் மில்டன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

 

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், தனியார் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்கான செலவை அரசே ஏற்குமா? அதிக கட்டணம் வசூலிப்பது தொடர்பாக புகார் அளிக்க ஏதேனும் வசதிகள் செய்யப்பட்டுள்ளனவா? அதிக கட்டண வசூல் குறித்த புகார்கள் மீது எடுத்த நடவடிக்கைகள் என்னவென்று, அறிக்கை தாக்கல் செய்ய, தமிழக அரசுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. அதேபோல, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உள்ள படுக்கை வசதிகள் குறித்துத் தெரிவிக்கவும் அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.
 

corona treatment hospital tamilnadu government chennai high court


அதன்படி, தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த அறிக்கையில், தமிழகத்தில் 44 அரசு ஆய்வகங்களிலும், 33 தனியார் ஆய்வகங்களிலும் என, 77 ஆய்வகங்களில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. ஜூன் 11- ஆம் தேதி நிலவரப்படி, 6 லட்சத்து 55 ஆயிரத்து 257 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், 38 ஆயிரத்து 716 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

 

தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் முதல் 7 ஆயிரத்து 500  ரூபாய் வரை கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தீவிரமாகத் தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு, 15,000 ரூபாய் கட்டணம் நிர்ணயித்துள்ளோம். மேலும், கரோனா சிகிச்சைக்கு 25 சதவீத படுக்கைகளை ஒதுக்கி வைக்க தனியார் மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழும், தேசிய சுகாதார பாதுகாப்புத் திட்டத்தின் கீழும், கரோனாவுக்கு சிகிச்சை பெறலாம்.  

 

http://onelink.to/nknapp


மத்திய சுகாதாரத் துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், தனியார் மருத்துவமனைகள், மாநில அரசின் கட்டுப்பாட்டில் வருவதால், கரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகளுக்குக் கட்டணம் நிர்ணயிப்பது தொடர்பாக தமிழகஅரசு தான் பதிலளிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அமர்வு, விசாரணையை, ஜூன் 19- ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாகிஸ்தானுக்கு இதயம் கொடுத்த இந்தியா; தமிழ்நாட்டில் கிடைத்த மறுவாழ்வு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Indian gave heart to Pakistan girl for treatment

பாகிஸ்தான் நாட்டின் கராச்சி நகரைச் சேர்ந்தவர் ஆயிஷா (19). இவர் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் இதய நோயால் பாதிக்கப்பட்டு வந்துள்ளார். அப்போது, ஆயிஷாவுக்கு ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக, இந்தியா வந்த ஆயிஷா சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

அந்த சிகிச்சையின் போது, ஆயிஷாவின் இதயம் செயலிழந்ததை உறுதிப்படுத்திய மருத்துவர்கள், அவருக்கு அறுவை சிகிச்சை செய்து உயிரை காப்பாற்றினார்கள். சிகிச்சை முடிந்த பிறகு, தனது சொந்த நாட்டிற்கு திரும்பிய ஆயிஷா, அங்கு தனது பள்ளிப்படிப்பை தொடர்ந்து படித்து வந்துள்ளார். 

இந்த நிலையில், பாகிஸ்தான் பெண்ணான ஆயிஷாவுக்கு கடந்த ஆண்டு மீண்டும் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அவரின் உடல்நிலை மோசமானதையடுத்து அங்குள்ள மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு போதிய உபகரணங்கள் இல்லாததால் அவர் மீண்டும் சென்னை வந்து அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஆயிஷாவுக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டால் தான் ஆயிஷாவை காப்பாற்ற முடியும் என்ற முடிவுக்கு வந்துள்ளார்கள். 

அதன்படி, இதய தானத்துக்காக ஆயிஷா விண்ணப்பித்துள்ளார். ஆனால், அவருக்கு அந்த நேரத்தில் மாற்று இதயம் கிடைக்கவில்லை. இதயம் கிடைக்கும் வரை ஆயிஷா, கடந்த 18 மாதங்களாக இந்தியாவிலேயே தங்கி வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் டெல்லியில் மூளைச்சாவு அடைந்த 69 வயதானவரின் இதயம், விமானம் மூலம் சென்னை கொண்டுவரப்பட்டு ஆயிஷாவுக்கு மாற்று இதய சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஆயிஷாவுக்கு மேற்கொள்ளப்பட்ட சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளது. 

பாகிஸ்தானுக்கும், இந்தியாவுக்கும் பல காலமாக பிரச்சனைகள் இருக்கும் நிலையில், பாகிஸ்தானைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் இந்தியாவில் தங்கி இருந்து வெற்றிகரமாக இதய மாற்று அறுவை சிகிச்சை முடிந்து உயிர் காப்பாற்றப்பட்டிருப்பது மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. 

Next Story

பள்ளிகளில் வழங்கப்படும் தண்டனை தொடர்பான வழக்கு; பள்ளிக்கல்வித்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
The court ordered the school education department for Case related to punishment in schools

சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ‘தமிழ்நாடு முழுவதும் பள்ளிக் கல்வித்துறை கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில் குழந்தைகளை அடிப்பது போன்ற கடுமையான தண்டனை விதிப்பதை தடை செய்ய வேண்டும் என்ற தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய விதிகளை அமல்படுத்த உத்தரவிட வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டது. 

இது தொடர்பான மனு இன்று (25-04-24) சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ‘பள்ளி குழந்தைகளை அடிப்பது போன்ற கடுமையான தண்டனையைத் தடுக்கும் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய விதிகளை பள்ளிக்கல்வித்துறை அமல்படுத்த வேண்டும். ஆணைய விதிகளை அனைத்து பள்ளிகளுக்கும், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்க வேண்டும். 

விதிகளை மீறி குழந்தைகளுக்குத் தண்டனை வழங்கப்பட்டது தொடர்பாக ஏதேனும் புகார்கள் வந்தால், அதன்பேரில் அதிகாரிகள் மீது பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக விதிகளை அமல்படுத்துவதை கண்காணிக்க அனைத்து பள்ளிகளிலும், தலைமை ஆசிரியர், பெற்றோர், ஆசிரியர், மூத்த மாணவர்கள் அடங்கிய கண்காணிப்புக் குழுவை அமைக்க வேண்டும்” என்று கூறி பள்ளிக்கல்வித்துறைக்கு உத்தரவிட்டது.