
தமிழகத்தில் இன்று ஒருநாள் கரோனா பாதிப்பு என்பது 1,538 லிருந்து குறைந்து 1,523ஆக பதிவாகியுள்ளது. இது நேற்றைய எண்ணிக்கையை விட சற்று குறைவாகும். இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 1,50,948 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. சென்னையில் மட்டும் இன்று 183 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. நேற்று சென்னையில் கரோனா ஒருநாள் பாதிப்பு என்பது 189 என்று இருந்த நிலையில், இன்று சற்று குறைந்துள்ளது.
இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி தமிழகத்தில் ஒரேநாளில் 21 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 34,899 ஆக அதிகரித்துள்ளது. இதில் அரசு மருத்துவமனையில் 14 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 7 பேரும் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கரோனா சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 17,085 ஆக உள்ளது. இன்று ஒரே நாளில் 1,739 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 25,61,376 பேர் மொத்தமாகக் குணமடைந்துள்ளனர். இணை நோய்கள் ஏதும் இல்லாத 4 பேர் இன்று உயிரிழந்துள்ளனர். கோவை-188, ஈரோடு-129, திருவள்ளூர்-63, தஞ்சை-78, நாமக்கல்-48, சேலம்-54, திருச்சி-65, திருப்பூர்-73 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு தமிழகத்தில் வரும் செப்.15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் ஞாயிற்றுக் கிழமைகளில் கடற்கரை பகுதிகளுக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சிக்காக பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்கவும், ஊர்வலம் நடத்தவும் தடை என அறிவிக்கப்பட்டுள்ளது. கரோனா தொற்று எண்ணிக்கை குறைந்துள்ள நிலையில், செப். 1ஆம் தேதி முதல் 9,10,11,12 வகுப்புகளுக்குப் பள்ளிகளைத் திறக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துவந்த நிலையில், தற்பொழுது பள்ளி திறப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கல்லூரி மாணவர்களுக்கான அரசு விடுதிகள், தனியார் விடுதிகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சமய விழாக்களை முன்னிட்டு மதம் சார்பான ஊர்வலங்கள், திருவிழாக்களுக்குத் தடை தொடர்கிறது. குறிப்பாக விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் சிலைகள் வைத்து விழா கொண்டாட அரசு தடை விதித்துள்ளது. விநாயகர் சிலைகளை இல்லங்களிலேயே வைத்துக் கொண்டாட தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. அதேபோல் விநாயகர் சிலைகளை தனி நபர்களாக சென்று நீர்நிலைகளில் கரைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் மரிய அன்னை பிறந்தநாள் திருவிழாவிற்கு பொது இடங்களில் மக்கள் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட விழாக்களில் அரசின் கட்டுப்பாடுகளை மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். விழாவிற்கான பொருட்களை வாங்கும் மக்கள் முக கவசம் அணிந்து தனிநபர் இடைவெளியுடன் பொருட்களை வாங்க வேண்டும். வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மத வழிபாட்டுத் தலங்களில் பொதுமக்களுக்கு அனுமதி ரத்து என்ற உத்தரவு தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.