"காவல்துறை என்றாலே கட்டுப்பாடானது என்பார்கள். அந்த கட்டுப்பாடு என்பது எங்களுக்கு மட்டும் தானா.? உயரதிகாரிகளுக்கு கிடையாதா..?" என கேள்விக்கேட்டதோடு மட்டுமல்லாமல், அந்த கட்டுப்பாடான காவல்துறையில் விரும்பி பணியில் சேர்ந்து, வெறுத்து வெளியேற விரும்பும் கடைநிலை அடிமை ஊழியன்" என தனது முகநூலில் பதிவிட்டு துறையின் மாண்பையே கேள்விக்குறியாக்கியுள்ளார் எஸ்.ஐ. ஒருவர்.
தமிழக காவல்துறை தான் இந்தியாவிலேயே மிகப்பெரிய ஐந்தாவது காவல்துறை என்றாலும், "ஸ்காட்லாந்து போலீசுக்கு நிகரானது தமிழக போலீஸ்" எனும் ஒற்றை சொல்லே போதும். தமிழக காவல்துறையினரின் திறமையை புகழ் பாட..!. சட்டம் மற்றும் ஒழுங்கு பிரிவு, ஆயுதம் அல்லது தமிழ்நாடு சிறப்புப் படை, பொதுமக்கள் பாதுகாப்பு, பொதுமக்கள் வழங்கல் மற்றும் உளவுத்துறை , கடலோர காவல் துறை, குற்றப் புலனாய்வு மற்றும் உளவுத்துறை, பொருளாதார சிறப்புப் பிரிவு உள்ளிட்ட பல பிரிவுகளை உள்ளடக்கிய தமிழக காவல்துறையில் ஏறக்குறைய 1,21,215 நபர்கள் பணியாற்றுகின்றனர். இத்தகைய பெருமைமிக்க காவல்துறையினை விட்டு, காரணம் கூறாமலேயே மன அழுத்தத்தால் பலர் வெளியேறிய நிலையில்,
தலையிலும் முகத்திலும் இருக்கும் முடியை கூட நம் இஷ்டப்படி வைத்து கொள்ளமுடியாத பணி.
சொந்த பந்தங்களின் வீட்டு நல்லது கெட்டதில் கலந்து கொள்ள இயலாத பணி.
பண்டிகைகளையோ நம் குடும்ப விழாக்களையோ நமது மனைவி மக்களோடு அனுபவிக்க முடியாத பணி.
காலவரையற்ற பணி.
வாராந்திர ஓய்வில்லா பணி.
அரசு விடுமுறைகள் எதையும் அனுபவிக்க முடியாத பணி.
இம்மாதம் யாருக்கும் விடுப்பு வழங்கக்கூடாது என உயர் அதிகாரிகளால் மாதம் தோறும் அறிக்கை அனுப்பபடும் ஒரே பணி.
அனுமதிக்கப்பட்ட 12 நாள் விடுமுறையைகூட நம் தேவைக்கு அனுபவிக்க முடியாத பணி.
அமைச்சு பணியாளர்களின் வேலையையும் நம்மீது சுமத்தி நாம் செய்ய தவறினாலோ மறுத்தாலோ நமக்கு விளக்கம் கேட்டு குறிப்பாணைகளை வழங்கும் பணி.
மொத்தத்தில் இவற்றையெல்லாம் வெளியே சொல்லகூட முடியாத படி கருத்து சுதந்திரம் பறிக்கப்பட்ட ஒரே பணி.
இதுபோன்ற மன அழுத்தத்தின் காரணமாக செய்யும் தவறுகளினால் மக்கள் மத்தியில் மதிப்பை இழந்து வெறுப்பை சம்பாதிக்கும் பணி.
இவற்றையெல்லாம் கேட்பதற்கு சங்கங்கள் அமைப்பதற்கு கூட அனுமதி மறுக்கப்பட்ட ஒரே பணி.
நாடு சுதந்திரம் பெற்று முக்கால் நூற்றாண்டுகள் ஆகியும் சுதந்திரம் கிடைக்காத ஒரே பணி.
சீருடை பணியாளர் எனும் காவல் பணி.
இத்தனைக்கும் முன்வைக்கும் ஒரே சொல் "கட்டுப்பாடான துறை"
ஏன் உயர் அதிகாரிகளுக்கு அந்த கட்டுப்பாடு பொருந்தாதா?
இப்படிக்கு:
விரும்பி பணியில் சேர்ந்து, வெறுத்து வெளியேற விரும்பும் கடைநிலை அடிமை ஊழியன்...
இதுவரை ஆதரவு வழங்கிய அதிகாரிகளுக்கு நன்றி.
அதிகாரம் செலுத்த நினைத்தவர்களுக்கு வாழ்த்துகள்.. என தந்து முகநூல் பக்கத்தில் பதிவிட்டு தான் காவல்துறையின் பணியினை விட்டு வெளியேற காரணம் கூறியிருக்கின்றார் தூத்துக்குடி மாவட்ட தருவைக்குளம் காவல் நிலைய எஸ்.ஐ.யான ராஜா குமார்.
முகநூல் பக்கத்தில் கருத்திட்ட 2011ம் ஆண்டு பேட்ஜை சேர்ந்த போலீஸ் எஸ்.ஐ ராஜாகுமார் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தாலுகா மாங்குடி எனும் கிராமத்தினை சேர்ந்தவர். மொத்தம் 1050 போலீஸ் எஸ்.ஐ.க்களை உள்ளடக்கிய 2011 பேட்ஜில் தற்பொழுது 750 போலீஸ் எஸ்.ஐ-க்கள் சட்டம் ஒழுங்கு பிரிவிலும், மீதமுள்ள 300 நபர்கள் பட்டாலியன், ஆயுதப்படை மற்றும் சிறப்பு யூனிட்களிலும் பணியாற்றி வருகின்றனர். முதற்கட்ட எஸ்.ஐ.பயிற்சியை கிருஷ்ணகிரியில் எடுத்த தருவைக்குளம் எஸ்.ஐ.ராஜாகுமார், கன்னியாகுமரி, தூத்துக்குடி, சென்னை என பல்வேறு மாவட்டங்களிலும், ஆயுதப்படையிலும் பணிபுரிந்திருக்கின்றார். நேர்மையாளரான இவர் சென்னை அமைந்தகரையில் இந்தியன் வங்கி மேலாளருடன் மோதியது வீடியோவாக வாட்ஸ் அப்பில் வைரலாக பரவியது தனிக்கதை.
இது இப்படியிருக்க கடந்த வாரத்தில் தனது காவல் நிலையத்திற்குட்பட்ட தனிப்பிரிவு காவலரை அழைத்து, " எனக்கு சம்பளம் வரவில்லை.! சம்பளம் வந்தால் தான் கடனை அடைத்துப் பணியாற்ற முடியும்.. கடன் நெருக்கடியில் சிக்கிக்கொண்ட எனக்கு சம்பளம் தந்தால் இங்கு வேலைப் பார்க்கின்றேன். இல்லையெனில் கூலி வேலைப் பார்த்து சம்பளத்தை அடைத்துவிட்டு மீண்டும் போலீசில் பணியாற்ற வருகின்றேன்." என்று கூறிவிட்டு முறையாக அறிவிப்பு செய்யாமல் வெளியேறியிருக்கின்றார் எஸ்.ஐ.ராஜாகுமார்.
தூத்துக்குடி மாவட்ட காவல்துறையோ, " தற்பொழுது தான் தருவைக்குளத்தில் பணியில் சேர்ந்திருக்கின்றார். எஸ்.பி.அலுவலகத்திலுள்ள செக்சன் அலுவலக கண்காணிப்பாளரிடம் இவர் கொடுத்த ஜாயினிங்க் ஆர்டரில் இறுதியாக பணியாற்றிய இடத்தை குறிப்பிடவில்லை. அது ஏன் குறிப்பிடவில்லை..? எனக்கேட்டு மெமோ கொடுத்ததற்கு தான் இந்த பதிவுகளே.. அரசுப்பணியிலுள்ள ஒருவர் எதனையும் மறைக்கக் கூடாது அவருக்கு தெரியாதா என்ன..?" என எதிர்க்கேள்வி எழுப்புகின்றனர் அவர்கள்.
" என் மீது குற்றம் சுமத்தி, முக நூலிலிருந்து பதிவை நீக்க சொல்கிறார்களே தவிர என்னுடைய குறையை காதுக்கொடுத்து கேட்கவில்லை... அத்தனைக்கும் ஆதாரம் இருக்கு..! இப்பவும் வேலை தேடி அலைஞ்சுக்கிட்டுத்தான் இருக்கின்றேன். வேலை கிடைத்தால் கடனை அடைச்சுட்டு நிம்மதியாய் இருப்பேன்." என்கிறார் எஸ்.ஐ.ராஜாகுமார்.
செவிமடுக்குமா காவல்துறை..?