Skip to main content

அமெரிக்க அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய கம்யூனிஸ்ட் கட்சியினர்!(படங்கள்)

Published on 29/07/2021 | Edited on 29/07/2021

 

இன்று (29.07.2021) சென்னையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அமெரிக்க ஏகாதிபத்திய அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய கே. பாலகிருஷ்ணன் பேசியதாவது, “அமெரிக்க ஏகாதிபத்தியம் கியூபா நாட்டின் மீது 69 ஆண்டுகளாக தொடர்ந்து நடத்திவருகிற பொருளாதார தடையினை வாபஸ் பெற வேண்டும். மேலும், அங்குள்ள மக்களைச் சுதந்திரமாக வாழ அனுமதிக்க வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி இன்றைய தினம் சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவற்றின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

 

அமெரிக்காவின் மூக்கிற்கு கீழே 60 கிலோமீட்டர் தொலைவிலே இருக்கக்கூடிய கியூபா நாட்டை, அந்நாடு சுதந்திர நாடாக தன்னை பிரகடனப்படுத்திக்கொண்டிருந்த காலத்திலிருந்து ஃபிடல் காஸ்ட்ரோ தலைமையிலான அந்த ஆட்சியைக் கவிழ்த்து சதி செய்வதற்கு ஒரு பொருளாதார தடையை அமெரிக்க ஏகாதிபத்தியம் விடுத்திருக்கிறது. கியூபாவோடு எந்த நாடும் பொருளாதார உறவுகொள்ளக்கூடாது. மேலும், வர்த்தக உறவு வைக்கக்கூடாது என்ற அடக்குமுறையைப் பிரயோகித்து அந்த நாட்டு மக்களை வதைத்துக்கொண்டிருக்கிறது. இந்தக் கரோனா காலத்தில் அந்த நாட்டு மக்களுக்குத் தேவையான உணவு மற்றும் தடுப்பூசிகளை அனுப்பக் கூடாது என சித்திரவதை செய்துகொண்டிருக்கிறது. சுதந்திரமாக இருக்க வேண்டிய ஒரு நாட்டை அடக்குமுறையின் மூலம் நிர்மூலமாக்குகிற அமெரிக்காவை எதிர்த்து பல நாடுகளும் கண்டன குரலை எழுப்பி வருகிறது.

 

ஐக்கிய நாடுகள் சபையில் 184 நாடுகள் இந்தத் தடையை வாபஸ் வாங்க வேண்டும் என கோரிக்கை வைத்தும் கூட இன்றைக்கு அமெரிக்கா அடிபணியாமல் அதிகாரத்தைப் பயன்படுத்திவருகிறது. எனவே அராஜகத்தைக் கண்டித்தும், பொருளாதார முறையில் மக்களைக் கண்டிக்கும் இந்தப் போக்கை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றுவருகிறது” என கூறினார். 

 

 

சார்ந்த செய்திகள்