Skip to main content

ஜிஎஸ்டி சான்றிதழ் வழங்க லஞ்சம்; கையும் களவுமாகச் சிக்கிய வணிகவரி அலுவலர்

Published on 05/07/2023 | Edited on 05/07/2023

 

Commercial tax officer arrested for demanding bribe to issue GST certificate

 

திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் புத்தாநத்தத்தைச் சேர்ந்தவர் செபஸ்தியன் மகன் சேசு. இவர் மணப்பாறையில் சேசு நகைப் பட்டறை என்ற பெயரில் கடை வைத்து நகைத் தொழில் செய்து வருகிறார். இவரால் செய்யப்படும் தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை பதிக்க வேண்டி உள்ளது. அதற்காகத் தனது கடையின் பெயரில் ஜிஎஸ்டி சான்றிதழ் வேண்டி மணப்பாறையில் உள்ள வணிகவரி அலுவலகத்திற்குக் கடந்த 25 ஆம் தேதியன்று ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்ளார். வணிகவரித் துறையில் இருந்து ஜிஎஸ்டி சான்றிதழ் வழங்குவதற்கு அரசு கட்டணம் எதுவும் பெறப்படுவது கிடையாது.  

 

சேசுவின் விண்ணப்பத்தின் பேரில் நேற்று(4.7.2023) வணிகவரித்துறை அலுவலகத்தில் இருந்து வந்து சேசுவின் கடையை ஆய்வு செய்துவிட்டு அலுவலகத்திற்கு நேரில் வருமாறு கூறியுள்ளனர். அன்று மாலையே சேசு மணப்பாறையில் உள்ள வணிகவரித்துறை அலுவலகத்திற்குச் சென்று அங்கிருந்த வணிகவரி அலுவலர் கோவிந்தசாமி என்பவரை சந்தித்து தனது கடைக்கு ஜிஎஸ்டி சான்றிதழ் வழங்குமாறு கூறியுள்ளார். 

 

வணிகவரி அலுவலர் கோவிந்தசாமி சேசுவிடம் 2000 ரூபாய் கொடுத்தால் ஜிஎஸ்டி சான்றிதழ் உங்களது கடைக்கு வழங்குவோம் என்று கட்டாயமாகக் கூறியுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத சேசு, திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறையில் இன்று காலை அளித்த புகாரின் பேரில் டிஎஸ்பி மணிகண்டன் தலைமையில் ஆய்வாளர்கள் சக்திவேல், பிரசன்ன வெங்கடேஷ், பாலமுருகன் மற்றும் திருமதி சேவியர் ராணி ஆகியோர் கொண்ட குழுவினர், இன்று மதியம் ஒரு மணி அளவில் சேசுவிடமிருந்து வணிகவரி அலுவலர் கோவிந்தசாமி 2000 லஞ்சமாகப் பெற்றபோது லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கையும் களவுமாகப் பிடிபட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்