Skip to main content

ஆசிரியையின் காலில் விழுந்து ஆசி பெற்ற கலெக்டர் ரோகிணி; கேக் ஊட்டினார்... மாணவிகளும் ஊட்டினர்!

Published on 05/09/2018 | Edited on 06/09/2018

 

 

ஆசிரியர் தினத்தையொட்டி சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி, கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றதோடு, அனைத்து ஆசிரியர்களுக்கும் ரோஜா பூச்செண்டு கொடுத்தும், சால்வை அணிவித்தும் கவுரவித்தார்.


ஆசிரியர்கள் தினத்தையொட்டி சேலம் கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் இன்று (செப்டம்பர் 5, 2018) ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. மாவட்ட ஆட்சியர் ரோகிணி, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அனைத்து ஆசிரியர், ஆசிரியைகளையும் கவுரவிக்கும் வகையில் அனைவருக்கும் ஆட்சியர் ரோகிணி சால்வை அணிவித்தார். அத்துடன் ரோஜா பூச்செண்டையும் வழங்கினார். மேலும், நற்சான்றிதழ் வழங்கியும் கவுரவித்தார்.முன்னதாக, யாரும் எதிர்பார்க்காத வகையில் சட்டென்று பள்ளித் தலைமை ஆசிரியையின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றார் ரோகிணி. அப்போது மாணவிகள் உற்சாகமாக கரவொலிகளை எழுப்பி, ஆரவாரம் செய்தனர்.


இதையடுத்து, கேக் கொண்டு வரப்பட்டது. மூத்த ஆசிரியைகள், பள்ளி மாணவிகள் சிலரையும் மேடைக்கு அழைத்தார். அவர்களுடன் தானும் சேர்ந்து கொண்டு ஒரே கத்தியால் கேக் வெட்டினார். முதல் கேக் துண்டை, மூத்த ஆசிரியைகளுக்கு அவர் தன் கையாலேயே ஊட்டிவிட்டார். பிறகு, மற்றொரு கேக் துண்டை எடுத்து அருகில் இருந்த மாணவிகளுக்கும் ஊட்டிவிட்டார்.பதிலுக்கு மாணவிகளும் போட்டிக்கொண்டு ஆர்வத்துடன் கலெக்டருக்கு கேக் ஊட்டினர். இதைப்பார்த்த ஆசிரியைகளும் ஆளுக்கு ஒரு துண்டு கேக் எடுத்து கலெக்டருக்கு ஊட்டிவிட்டனர். யாரிடமும் மறுப்போ முகச்சுழிப்போ காட்டாமல் அனைவரிடமும் வாஞ்சையுடன் சிறிதளவு கேக்கை பெற்றுச் சாப்பிட்டார்.

 

 


விழாவில் ஆட்சியர் ரோகிணி பேசுகையில், ''இன்று நீங்கள் (மாணவிகள்) இந்த வளாகத்தில் இருக்கின்றீர்கள். நாளை பெரிய உயரத்திற்குச் செல்வீர்கள். எல்லோருக்கும் அம்மாதான் முதல் ஆசிரியர். ஆனாலும் நல்லொழுக்கங்களைக் கற்றுத்தருவது பள்ளிக்கூடமும், பள்ளி ஆசிரியர்களும்தான். ஆசிரியர்களும், பெற்றோர்களும் உங்கள் மீது வைத்திருக்கும் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முழு முயற்சிகளும் எடுக்க வேண்டும்,'' என்று அறிவுரை வழங்கினார்.


விழா முடிந்து அவர் மேடையை விட்டு கீழே இறங்கியதும் மாணவிகள் அவரை சூழ்ந்து கொண்டு ஆசையுடன் போட்டிப்போட்டுக் கொண்டு கைகுலுக்க முயன்றனர். அவரும் சளைக்காமல் கைகுலுக்கினார். ஒருக்கட்டத்தில், அதிகளவிலான மாணவிகள் அவரை நெருங்கியதால் அவரால் அங்கிருந்து நகரவே இயலாத சூழல் நிலவியது. பின்னர் ஆசிரியர்கள், அதிகாரிகள் அவரை பாதுகாப்பாக அழைத்துச்சென்று காரில் ஏற்றி வைத்தனர்.
சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கணேஷ்ராஜ் உள்ளிட்ட கல்வித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

சார்ந்த செய்திகள்