Skip to main content

'கோவை தோல்வி வருத்தமளிக்கிறது' - வானதி ஸ்ரீனிவாசன் பேட்டி

Published on 07/06/2024 | Edited on 07/06/2024
'Coimbatore defeat is sad'-Vanathy Srinivasan interview

ஏழு கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியானது. அதில் 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றுள்ளது. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பா.ஜ.க தனித்து 240 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியிருந்தது.

ஆட்சி அமைக்க தனிப்பெம்ருபான்மை இல்லாத பா.ஜ.கவுக்கு, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த சந்திரபாபு நாயுடுவும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த நிதிஷ்குமாரும் ஆதரவு தருவதாக உறுதி அளித்தனர். இதனையடுத்து தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைமையில் பிரதமர் மோடி மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கவுள்ளார்.

இந்த நிலையில் சென்னை விமானநிலையம் வந்த பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ''மூன்றாவது முறையாக ஒரு வரலாற்று சாதனையாக இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்க இருக்கிறார். தொடர்ச்சியாக ஆட்சி செய்வது என்பது மிகப் பெரிய ஜனநாயக நாட்டில் சவாலான விஷயம். அந்தச் சாதனையைப் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி இன்று நிகழ்த்திக் காட்டி இருக்கிறது. நாளை பாராளுமன்ற மைய மண்டபத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சியினுடைய நடந்து முடிந்த  தேர்தலில் வெற்றிபெற்ற எம்பிக்கள், ராஜ்யசபா எம்பிக்கள், பாஜக தேசிய நிர்வாகிகளுக்கான கூட்டம் நாளை காலை 11 மணிக்கு நடைபெற இருக்கிறது. அதில் நாடு முழுவதும் இருந்து தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கட்சித் தலைவர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்'' என்றார்.

அப்பொழுது செய்தியாளர்கள் 'கோவையின் தேர்தல் முடிவு குறித்து சொல்லுங்கள்' எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு, ''கோவை முடிவு என்பது எங்களுக்கு வருத்தத்தை தந்திருக்கக் கூடிய முடிவுதான். ஆனாலும் கூட மக்களுடைய தீர்ப்பை மதித்து அந்தத் தீர்ப்பை ஏற்றுக்கொண்டு மகிழ்ச்சியாக மக்கள் பணி செய்வதற்கு பாஜக எங்களுக்கு பயிற்றுவித்திருக்கிறது. எப்பொழுதும் மக்களுக்கான பணிகளைத் தொடர்ந்து செய்து கெண்டே இருப்போம். மத்தியில் பாஜக தலைமையிலான அரசு மீண்டும் அமைகின்ற பொழுது கோவை பகுதிக்கு என்னவெல்லாம் திட்டங்கள் சொல்லி இருக்கிறோமோ அதை எல்லாம் நிச்சயமாக நிறைவேற்றுவோம். ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரத்தில் கூட பல்வேறு பொய்களை முன் வைத்தார். பாஜக வந்தால் அரசியல் சட்டத்தை மாற்றிவிடுவார்கள்; இட ஒதுக்கீட்டை ரத்து செய்வார்கள் எனப் பலவிதமான பொய் பிரச்சாரங்களை காங்கிரஸ் தலைவர்கள் மேற்கொண்டனர். ஆனால் இவற்றையெல்லாம் மீறி தான் மீண்டும் மூன்றாவது முறையாக நாங்கள் ஆட்சி அமைக்கிறோம்'' என்றார்.

சார்ந்த செய்திகள்

 

Next Story

'இந்திரா காந்தி சிலையின் சர்ச்சைகளும் சென்டிமென்ட்களும்'- கேள்விகளை அடுக்கிய கராத்தே தியாகராஜன்  

Published on 25/06/2024 | Edited on 25/06/2024
 'Indira Gandhi Statue Controversies and Sentiments' - Karate Thiagarajan Asks Questions

சென்னையில் இந்திரா காந்திக்கு சிலையை அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் சுவாமிநாதன் அறிவித்திருக்கும் நிலையில், இந்திரா காந்தி சிலை அமைப்பதில் சர்ச்சைகள் மற்றும் சென்டிமென்ட்கள் இருப்பதாக பாஜக நிர்வாகியான கராத்தே தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழக சட்டமன்றத்தில் 24 ஆம் தேதி செய்தித்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்துக்கு பதிலளித்து பேசிய அமைச்சர் சுவாமிநாதன் சென்னையில் 50 லட்சம் ரூபாய் செலவில் இந்திரா காந்திக்கு சிலை அமைக்கப்படும் என்று ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டார். இதனை தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை வரவேற்பதாக தெரிவித்திருக்கிறார். காங்கிரஸ் கட்சியும் இதில் மகிழ்ந்திருப்பதாக தெரிகிறது. ஆனால் இந்தியாவில் எமர்ஜென்சியை இந்திரா காந்தி பிரகடனப்படுத்திய நாள் ஜூன் 25. அந்த நெருக்கடி நிலை காலத்தில் தமிழகத்தில் அதிகம் பாதிக்கப்பட்டது திமுக தான். அப்படி இருக்கும் நிலையில் இந்திரா காந்திக்கு திமுக அரசின் சார்பில் சிலையா/ என்று திமுகவினர் மனதில் எதிரொலிக்கிறது.

அதேபோல் இந்திராவின் எமர்ஜென்சியை நினைவுபடுத்துவதற்காகத் தான் அவருக்கு சிலை அமைக்கும் அறிவிப்பை ஜூன் 24ஆம் தேதி திமுக அரசு அறிவித்திருக்கிறதா என்று உணர்வுள்ள காங்கிரஸ்காரர்கள் கேள்வி எழுப்புகின்றனர். இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் இந்திரா காந்தி சிலையை சுற்றி சர்ச்சைகளும், சென்டிமெண்டுகளும் சூழ்ந்து இருப்பது திமுக தலைமைக்கு தெரியுமா? தெரியாதா? என்பது தெரியவில்லை.

அகில இந்திய அமிதாப்பச்சன் ரசிகர் மன்ற தலைவராக இருந்த வழக்கறிஞர் ஏசைய்யா என்பவர் இந்திரா காந்திக்கு சென்னையில் சிலை வைக்க சென்னை மாநகராட்சி நிர்வாகத்திடம் 1986 ஆம் ஆண்டு அனுமதி கோரி இருந்தார். ஆனால் அவருக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. இதனை எதிர்த்து அமிதாப்பச்சன் ரசிகர் மன்றத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு போட்டு இந்திரா காந்திக்கு சிலை அமைக்க அனுமதி பெறுகிறார் ஏசைய்யா. அமிதாப்பச்சன் ரசிகர் மன்றத்திற்கு சிலை வைக்க அனுமதி கிடைக்கிறது. சிலை அமைக்கும் முயற்சிகள் தொடங்குகின்றன. இந்திரா காந்திக்கு சிலை அமைக்கும் முயற்சிகள் எப்போது தொடங்கியதோ அப்போதிலிருந்தே தேசிய அரசியலில் ஏறுமுகமாக இருந்த அமிதாப்பின் அரசியல் வாழ்க்கை இறங்கு முகமானது. தொடர் சரிவுகளை சந்தித்தார். ஹிந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் படிப்படியாக அரசியலில் இருந்து விலகவும் நேர்ந்தது. சிலை அமைக்கும் முயற்சிகளும் முறிந்தது.

இதன் பிறகு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்த வாழப்பாடி ராமமூர்த்தி சந்தித்து இந்திரா காந்திக்கு சிலை அமைப்பது குறித்து விசாரித்தார் ஏசைய்யா. அப்போது அமிதாப்பச்சன் ரசிகர் மன்றத்தின் சார்பில் பெறப்பட்ட அனுமதியை தமிழக காங்கிரஸ் கமிட்டி பெயருக்கு மாற்றி உத்தரவினை உயர்நீதிமன்றத்தில் பெற்றுக் கொடு என்று ஏசைய்யாவிடம் தெரிவித்தார் வாழப்பாடி ராமமூர்த்தி. அதன்படி அனுமதி மாற்றி பெறப்பட்டு அதனை வாழப்பாடியிடம் கொடுத்தார் ஏசைய்யா. சிலை அமைக்கும் முயற்சியை வாழப்பாடி எடுத்த மூன்றாவது நாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவி அவருக்கு பறிபோனது. இருந்தாலும் அன்றைய தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் கவனத்துக்கு இந்திரா சிலை குறித்த விஷயத்தை வாழப்பாடி ராமமூர்த்தி கொண்டு சென்ற போது இந்திராவுக்கு சிலை வேண்டாம் ராஜீவ் காந்திக்கு சிலை வைக்கலாம் என்று புதிய யோசனை சொன்னார் ஜெயலலிதா.

அதாவது 1991-ல் தேர்தலுக்கு முன்பு ராஜீவ் காந்தி கடைசியாக மாலை அணிவித்தது ஸ்ரீபெரும்புதூரில் இருக்கும் இந்திரா காந்தி சிலைக்கு தான். சென்டிமெண்டாக இது சரியில்லை என ஜெயலலிதாவுக்கு அப்போது சொல்லப்பட்டிருப்பதால் அதை மனதில் வைத்துக் கொண்டுதான் இந்திராவுக்கு சிலை வேண்டாம் என வாழப்பாடியிடம் ஜெயலலிதா சொன்னதன் ரகசியம்.

இதையடுத்து இந்திரா காந்தியை கைவிட்டு விட்டு சென்னையில் சைதாப்பேட்டை சின்னமலை பகுதியில் ராஜீவ் காந்திக்கு சிலை அமைக்கப்பட்டது. வாழப்பாடி ராமமூர்த்தி தலைமையில் ஜெயலலிதாவின் முன்னிலையில் ராஜீவ் காந்தி சிலையை திறந்து வைத்தார் பிரதமர் நரசிம்மராவ். இந்நிலையில் திமுக -தமாகா கூட்டணி 1996-ல் அமோக வெற்றி பெற்றது. தாமாக தலைவர் மூப்பனாரை சந்தித்து இந்திரா காந்தி சிலை அமைக்கப்படாமல் இருப்பதை சுட்டிக்காட்டி பேசினார் ஏசைய்யா. இந்திரா மீது பற்றுதல் கொண்ட மூப்பனார் சிலை அமைக்கவும் அதற்கான செலவுகளையும் ஏற்றுக் கொண்டார். உடனே சென்னை அண்ணா சாலை ஸ்பென்சர் சந்திப்பில் சிலையும் அமையும் இடத்தை பார்வையிட்டார்/மேலும் புகழ்பெற்ற சிற்பி மணிநாகப்பாவிடம் சிலை வடிவமைக்கும் பணிகளை துவக்குமாறு அறிவுறுத்தியதுடன் முன்பணமாக மூன்று லட்சம் கொடுத்தார் மூப்பனார்.

சிலை அமைக்கும் பணி துவங்கியதுமே மூப்பனார் பிரச்சனைகளை சந்தித்தார். மறைந்தும் போனார். இந்திராவுக்கு சிலை அமைக்கும் பணி துவக்கத்திலேயே முற்றுப்பெற்றது ஏசைய்யாவும் இறந்து போனார். ஆக இந்திரா காந்திக்கு சிலை அமைக்கும் எந்த முயற்சியும் வெற்றி பெறவில்லை. இப்படி இந்திராவுக்கு சிலை எடுக்க முயற்சித்த அரசியல் தலைவர்களின் செல்வாக்கு சரிந்து போனதாக சிலையை சுற்றி சர்ச்சைகளும் செண்டிமெண்டுகளும் அப்போதே உலா வந்தன. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நீண்ட கால மூத்த அரசியல் தலைவர்கள் பலருக்கும் இந்த செண்டிமெண்ட் விவகாரம் தெரியும்.

இந்த விவகாரம் எல்லாம் தெரிந்து தான் பெரியாரின் பேரன் என்று வர்ணிக்கப்படுகின்ற ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் உட்பட காங்கிரஸ் தலைவர் யாரும் இந்திராவுக்கு சிலை அமைக்க முயற்சி எடுத்ததே இல்லை. இப்படிப்பட்ட சூழலில் தற்போது இந்திராவுக்கு சிலை அமைக்கப்படும் என்று திமுக அரசு சட்டமன்றத்தில் அறிவித்துள்ளது. அதனை காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை வரவேற்கிறார்.

புரட்சி பாரதம், புதிய தமிழகம், விடுதலை சிறுத்தைகள், பகுஜன் சமாஜ் கட்சி என பல்வேறு கட்சிகளுக்கு சென்று விட்டு காங்கிரஸ் கட்சியில் தஞ்சமடைந்து தலைவராக வந்துவிட்ட செல்ல பெருந்தகைக்கு இந்த வரலாறு தெரியாமல் இருக்கலாம். அல்லது தெரியாமல் போகலாம். தெரிந்திருக்கவும் நியாயம் இல்லை. ஆனால் தமிழகம் பெரியார் மண் எனச் சொல்லும் திராவிட இயக்கத்தினருக்கும், பெரியாரின் பேரன் என சொல்லிக் கொள்ளும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கும், காங்கிரசின் மூத்த தலைவர்களுக்கும் இந்த சர்ச்சைகளும், சென்டிமென்ட்டும் நன்றாகவே தெரியும்.

அப்படி இருக்கும் பட்சத்தில் இந்திராகாந்தி சிலை அறிவிப்பை எப்படி திமுக அரசு அறிவித்தது என்று தெரியவில்லை. இந்த சென்டிமென்ட் விவகாரத்தை அறிவித்துள்ள திமுகவுக்கு நெருக்கமான காங்கிரசைச் சேர்ந்த பீட்டர் அல்போன்ஸ்,, கோபண்ணா போன்றோர் இதை திமுக தலைமையின் கவனத்திற்கு கொண்டு செல்வார்களா? இதுவரை தமிழக காங்கிரஸ் தலைவர்களாக இருந்த யாரும் சத்தியமூர்த்தி பவனில் குறைந்தபட்சம் ஒரு மார்பளவில் கூட இந்திராவிற்கு சிலையை ஏன் அமைக்கவில்லை? மேலும் அமைச்சர் சாமிநாதனும் செல்லப்பெருந்தவையும் சிலை அமையும் அண்ணா சாலை பென்சில் பகுதி பார்வையிட்டு அதன் புகைப்படத்தை வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்' என தெரிவித்துள்ளார்.

Next Story

சாராய வேட்டையில் சிக்கிய வெளிமாநில மது பாட்டில்கள்

Published on 25/06/2024 | Edited on 25/06/2024
nn

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 5 பெண்கள் உட்பட 59 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். இதனால் இறப்புகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதே சமயம் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு கள்ளக்குறிச்சி, சேலம் மற்றும் விழுப்புரம் அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதோடு கள்ளச்சாராய உயிரிழப்பு தொடர்புடைய சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்தது.

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போலீசார் தீவிர சட்டவிரோத மது விற்பனை மற்றும் கள்ளச்சாராய வேட்டையில் ஈடுபட்டனர். இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் கடந்த இரண்டு நாட்களில் 1,382 மாநில மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. பொள்ளாச்சி பெண்ணாபுரம் பிரிவு பகுதியில் கடந்த 22ஆம் தேதி மதுவிலக்கு போலீசார ஆய்வு செய்த பொழுது சரக்கு வாகனத்தில் வெளி மாநிலம் மதுபாட்டில்கள் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். அதேபோல் ராம் நகர் பகுதியில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்ட நிலையில் 500க்கும் மேற்பட்ட மது பாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்ததோடு அது தொடர்பாக 9 பேரையும் போலீசார் கைது செய்தனர். இப்படியாக பொள்ளாச்சியில் கடந்த இரண்டு நாட்களில் 1,382 வெளிமாநில மது பாட்டில்களும் அவற்றை விற்க முயன்றவர்களும் கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.