Skip to main content

'மத்தியில் கூட்டணி ஆட்சி'-என்.டி.ஏ மற்றும் இந்தியா கூட்டணி தலைவர்கள் ஆலோசனை

Published on 05/06/2024 | Edited on 05/06/2024
'Coalition rule in the middle'- NDA and India alliance leaders consult

18வது மக்களவைத் தேர்தல் இந்தியா முழுவதும் ஒவ்வொரு மாநிலமாக 7 கட்டங்களாக நடைபெற்ற நிலையில் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகின. தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் தனிப் பெரும்பான்மை என்ற நிலையை இழந்து கூட்டணி ஆட்சியையே மத்தியில் பாஜக அமைக்க உள்ளது. மொத்தம் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 291 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 291 இடங்களில் பாஜக மட்டும் தனித்து 239 இடங்களை கைப்பற்றியுள்ளது. ஆட்சி அமைக்கத் தேவையான 272 தொகுதிகளை எந்த கட்சியும் தனித்து பெறாததால் கூட்டணி ஆட்சி அமையும் சூழ்நிலை நிலவுகிறது.

2014, 2019 ஆம் ஆண்டை விட தொடர்ந்து 2024-லும் பாஜக மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க உள்ளது. எதிர்க்கட்சியான இந்தியா கூட்டணி நாடு முழுவதும் 234 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் 99 இடங்களிலும், சமாஜ்வாதி 39 இடங்களிலும், திரிணமுல் 29 இடங்களிலும், திமுக 21 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. கடந்த மக்களவைத் தேர்தலை ஒப்பிடுகையில் பாஜக மட்டும் 303 இடங்களில் வெற்றிபெற்ற நிலையில், தற்பொழுது இந்த தேர்தலில் 239 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. அதேபோல கடந்த தேர்தலை விட காங்கிரஸ் இரட்டிப்பான வெற்றி பெற்றுள்ளது. கடந்த தேர்தலில் 52 தொகுதிகளில் வெற்றி பெற்ற காங்கிரஸ் இந்த தேர்தலில் 99 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில் டெல்லியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தில் சந்திரபாபுவின் தெலுங்கு தேசம், நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளம் ஆகிய கட்சிகளும் பங்கேற்க இருக்கிறது. மதச்சார்பற்ற ஜனதா தளம், ஜன சேனா, லோக் ஜன சக்தி, அப்னா தளம் உள்ளிட்ட கட்சிகளும் பங்கேற்கின்றன. அதேபோல இந்த கூட்டத்தில் தமிழகத்திலிருந்து பாமக, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் பங்கேற்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

அதே நேரம் மறுபுறம் இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்களின் கூட்டமும் இன்று நடைபெறுகிறது. காங்கிரஸ் தலைவர் கார்கே தலைமையில் நடக்கும் இந்த கூட்டத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் உள்ளிட்டோரும் இக்கூட்டத்தில் பங்கேற்க இருக்கின்றனர். இந்தியா கூட்டணி கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கவும், வியூகம் அமைக்கவும் திட்டம் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

சார்ந்த செய்திகள்