Skip to main content

 “ரஜினியின் அறிவுரையை ஏற்றுக் கொள்கிறேன்” - முதல்வர் மு.க.ஸ்டாலின்

Published on 24/08/2024 | Edited on 24/08/2024
CM Stalin he accept Rajini's advice

தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியுடனான தனது நினைவுகளை 'கலைஞர் எனும் தாய்' எனும் பெயரில் அமைச்சர் எ.வ.வேலு புத்தகமாக எழுதியுள்ளார்.

தமிழ்நாட்டின் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞருடனான தனது நினைவுகளை ‘கலைஞர் எனும் தாய்’ எனும் பெயரில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு புத்தகமாக எழுதியுள்ளார். இந்த புத்தகத்தின் வெளியீட்டு விழா இன்று (24-08-24) சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. இந்த விழாவில், தமிழக அமைச்சர்கள், எம்.பி, எம்.எல்.ஏக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும், ‘கலைஞர் எனும் தாய்’ என்ற புத்தகத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட, இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட நடிகர் ரஜினிகாந்த் பெற்றுக்கொண்டார். இந்த விழாவில் பேசிய ரஜினிகாந்த், “அறிவாந்தோர் சபையில் பேசாமல் இருப்பது அறிவாளித்தனம். உலகில் எந்தவொரு அரசியல் தலைவருக்கும் இப்படி ஒரு நூற்றாண்டு விழா கொண்டாடியதில்லை. இன்றைய சூழலில் அரசியல் பேசினால் மிகவும் ஜாக்கிரதையாக பேச வேண்டும். முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் பெற்ற வெற்றியே அவரது ஆளுமையை சொல்லும். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கிடைத்திருக்கும் வெற்றி அவரது அரசியலை பறைசாற்றும். வெற்றிக்காக பலர் போராடிக் கொண்டிருக்கும் நிலையில் அதை சர்வ சாதாரணமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் செய்திருக்கிறார். திமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பாக கையாள்கிறார். 

கலைஞர் மீது மிகுந்த பற்றும், மரியாதையும் கொண்டவர் முதல்வர் மு.க.ஸ்டாலின். தமிழ்நாடு முழுவதும் கலைஞர் நூற்றாண்டு விழாவை மிகச்சிறப்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நடத்தியுள்ளார். கலைஞர் என்றால் சினிமா, அரசியல், இலக்கியம் தான். கலைஞர் எனும் தாய் புத்தகத்திற்கு அருமையான தலைப்பை அமைச்சர் எ.வ.வேலு வைத்திருக்கிறார். கலைஞர் நினைவு மண்டபத்தை தாஜ்மஹால் போல் கட்டியுள்ளனர். கலைஞரை ராஜ்நாத் சிங் அரைமணி நேரம் பாராட்டி பேசியுள்ளார். கலைஞரை பற்றி ராஜ்நாத் சிங் பாராட்டி பேசியிருக்கிறார் என்றால் அவருக்கு மேலிடத்தில் இருந்து சொல்லியிருப்பார்கள். கலைஞரைப் போல் சோதனைகள வேறு யாராவது எதிர்கொண்டிருந்தால் காணாமல் போயிருப்பார்கள். கலைஞரின் புகழ் மேலும் மேலும் வளர்ந்துகொண்டே இருக்கிறது” எனப் பேசினார். 

அதனை தொடர்ந்து, பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அரசியலில் ஜாக்கிரதையாக பேச வேண்டும் என்று ரஜினி பேசியிருந்த நிலையில் பதில் அளித்துள்ளார். அவர் பேசியதாவது, “ரஜினியின் அறிவுரையை ஏற்று கொள்கிறேன். என்னை விட ஒரு வயது பெரியவரான ரஜினியின் அறிவுரையை ஏற்று கொள்கிறேன். நடிகர் ரஜினிகாந்த் கவலைப்பட வேண்டாம். அனைத்திலும் நான் உஷாராகவே இருப்பேன். அனைவரையும் அரவணைத்தவர் கலைஞர். முதல்வர் அனைத்து துறைகளைச் சேர்ந்தவர்களையும் அரவணைத்து சென்றவர் கலைஞர். கலைஞர், எழுதினால் தமிழ் கொட்டும் என்பதுபோல் கலைஞரை பற்றி எழுதினாலும் தமிழ் கொட்டும். உயிரினும் மேலாக உடன்பிறப்புகளை மதித்தவர் கலைஞர். இவரின் புகழை அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்ல வேண்டும்” எனத் தெரிவித்தார். 

சார்ந்த செய்திகள்