பள்ளியில் மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல், சக மாணவர் பிளேடால் கிழித்ததில் மாணவர் ஒருவர் வெட்டு காயத்துடன் மருத்துமனையில் அனுமதி.
வேலூர் மாவட்டம் அரியூர் அடுத்த ஊசூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12 ம் வகுப்பு தமிழ் மற்றும் ஆங்கில பிரில் படிக்கும் இரு மாணவர்களிடையே பள்ளி வளாகத்தில் ஏற்பட்ட தகராறில் (திலீப் குமார்) என்ற மாணவனை சக மாணவன் பிளேடால் சரமாரியாக கிழித்துள்ளார். இதில் மாணவனுக்கு (திலீப் குமார்) தலை, முதுகு மற்றும் மார்பு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
பள்ளி வளாகத்தில் மாணவன் ரத்த காயங்களோடு இருந்ததைப் பார்த்த அவ்வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு ஊசூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் மேல் சிகிச்சைக்காக அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர் அங்கு அவர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவன் கூறுகையில், நான் தாக்கப்பட்ட போது பள்ளியில் எந்த ஆசிரியரும் என்னை வந்து பார்க்கவில்லை. மருத்துவமனைக்கு சென்று தையல் போட்டு முடிக்கும் போது தான் வந்தார்கள். ஏண்டா சண்டை போட்டீங்க இத பெரிது படுத்த வேண்டாம் என சொன்னார்கள். என்னுடைய நண்பன் ஒருவனை மற்ற மாணவர்கள் முட்டி போட வைத்தார்கள் அதை ஏன் என கேட்டேன். ஆனால் நான் தான் முட்டி போட வைத்தேன் என தவறாக எண்ணி என்னை நேற்று அடித்து விட்டார்கள். அதனை தொடர்ந்து இன்றைக்கு என் மீது தாக்குதல் நடத்தி விட்டார்கள் எனக் கூறினார்.
படுகாயம் அடைந்த மாணவனின் உறவினர்கள் அளித்த பேட்டியில், பள்ளியில் ஏற்கனவே மாணவர்கள் மத்தியில் சண்டை இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் ஆசிரியர்கள் யாரும் இது குறித்து எங்களுக்கு தெரிவிக்கவில்லை. ஒருவேளை தெரிவித்து இருந்தால் நாங்கள் சென்று பேசி இருப்போம். இன்றைக்கு ரத்த காயம் ஏற்பட்ட போது கூட எங்களுக்கு ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. வழியில் சென்றவர்கள் பார்த்து சொன்னதால் பதறிப் போய் எங்கள் பிள்ளையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளோம். இதுவரை எந்த ஆசிரியரும் வந்து பார்க்கவில்லை. கத்தியை கொண்டு எனது பிள்ளையை கிழித்து இருக்கிறார்கள். அரசு பள்ளியை பார்த்தாலே பயமாக இருக்கிறது. எந்த ஒரு பாதுகாப்பும் இல்லை. வரும் காலங்களில் எனது பிள்ளையை எப்படி அரசுப் பள்ளியில் சேர்க்க முடியும். மிக மோசமான நிலையில் அரசு பள்ளி உள்ளது. பாதிக்கப்பட்ட மாணவனின் தந்தை எல்லை பாதுகாப்பு படையில் பணி செய்து நாட்டை பாதுகாத்து வருகிறார். ஆனால் அவரது மகனுக்கு இங்கு பாதுகாப்பு இல்லை என நினைக்கும் போது வருத்தமாக உள்ளது. ஆகவே இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனக் கூறினர்.