Skip to main content

“வேளாண் பொருட்கள் உற்பத்தியைப் பெருக்க உடனடி முயற்சிகள் தேவை” - ஆட்சியர்களுக்கு முதல்வர் உத்தரவு

Published on 26/08/2023 | Edited on 26/08/2023

 

CM orders to Collector Immediate efforts are needed to increase crop production

 

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ‘கள ஆய்வில் முதலமைச்சர்’ திட்டத்தின் கீழ், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களின் ஆட்சியர்கள், காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகளுடன் மாவட்ட வளர்ச்சி  தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (26. 8.2023) நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் அன்பில் மகேஷ், கே.என். நேரு உள்ளிட்ட பல அமைச்சர்களும் கலந்துகொண்டனர். 

 

இந்த கூட்டத்தில் பேசிய முதல்வர், “தென்னை மரங்களின் பரப்பை அதிகரிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வேளாண் பொருட்கள் உற்பத்தியைப் பெருக்க உடனடி முயற்சிகள் தேவை. அதனால் ஊட்டச்சத்தை உறுதி செய்யும் திட்டத்தை  மார்ச் 16 ஆம் தேதி முதல் அமல்படுத்தி வருகிறோம். ஆனால் இந்த மாவட்டங்களில் இருக்கும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு இருப்பதாகப் புள்ளி விவரங்கள் சொல்கிறது. அதனால் இந்த திட்டத்தை தாயுள்ளத்தோடு அனைவரும் செயல்படுத்த வேண்டும். நகர்ப்புற சாலை மேம்பாட்டுத் திட்டங்களில் திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் முன்னேற்றம் இல்லை என்று அறிக்கைகள் சொல்கிறது.

 

பள்ளிக் கல்வித்துறை தேர்ச்சியில் மயிலாடுதுறை மாவட்டம் கடைசி இடத்தில் உள்ளது. இது மிகவும் கவலைக்குரிய ஒன்று. அடுத்தாண்டிற்கு மாற்றியாக வேண்டும்.  இந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழை தொடங்குவதற்கு முன்னால் நிலுவையில் இருக்கும் சாலைப் பணிகளை உடனடியாக முடிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'பாஜகவின் செயலை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து 

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 'Our people are watching the work of the BJP' - Chief Minister M. K. Stalin's opinion

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் 'நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது' என பாஜக அரசு தமிழகத்தை வஞ்சிப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் 'மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளப் பாதிப்புகளுக்கான நிவாரணமாகத் தமிழ்நாடு கோரியது 37,907 கோடி ரூபாய். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணமாகவும், உட்கட்டமைப்புகளை மறுசீரமைக்கவும் தமிழ்நாடு அரசு மாநிலப் பேரிடர் நிதியில் இருந்து இதுவரை செலவு செய்துள்ளது 2,477 கோடி ரூபாய்.

ஆனால், ஒன்றிய பா.ஜ.க அரசு தற்போது அறிவித்திருப்பதோ வெறும் 276 கோடி ரூபாய். இதுவும் நாம் உச்சநீதிமன்றத்தை நாடிய பிறகே அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசின் ஒவ்வொரு செயலையும் நம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்!' எனத் தெரிவித்துள்ளார்.

 

Next Story

ஆஜரான மாவட்ட ஆட்சியர்கள்; விசாரணை இடத்தை மாற்றிய அமலாக்கத்துறை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Collectors present ed changed the place of investigation

தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்வதாகவும், மணல் ஒப்பந்த குவாரிகள் மூலம் வரும் வருமானத்தை சட்ட விரோதமாக பணப்பரிமாற்றம் செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர் மற்றும் வேலூர் ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்களுக்கு மணல் குவாரிகளுக்கு வழங்கப்பட்ட உரிமங்கள் தொடர்பான ஆவணங்களுடன் நேரில் அமலாக்கத்துறை முன்பு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பிலும், மாவட்ட ஆட்சியர்கள் சார்பிலும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கு கடந்த 2 ஆம் தேதி (02.04.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் வாதிடுகையில், “நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடவடிக்கை பாதிக்கும் என்பதால் மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக கால அவகாசம் வழங்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், “அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தால் கண்டிப்பாக ஆஜராக வேண்டும். மணல் கொள்ளை வழக்கில் அமலாக்கத்துறை முன்பு மாவட்ட ஆட்சியர்கள் ஏப்ரல் 25 ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும். மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக வழங்கப்பட்ட சம்மனுக்கு தடை எதுவும் வழங்க முடியாது” எனத் தெரிவித்திருந்தனர். மேலும் இந்த வழக்கு விசாரணையை மே 6 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்திருந்தனர்.

இந்நிலையில் மணல் முறைகேடு வழக்கு தொடர்பாக சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் வேலூர் ஆட்சியர் சுப்புலட்சுமி, அரியலூர் ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ணா, கரூர் ஆட்சியர் தங்கவேல், திருச்சி ஆட்சியர் பிரதீப்குமார் மற்றும் தஞ்சை ஆட்சியர் தீபக் ஜேக்கப் ஆகியோர் இன்று (25.04.2024) காலை 10.30 மணியளவில் விசாரணைக்கு ஆஜராகினர். அப்போது மாவட்ட ஆட்சியர்களிடம் நுங்கம்பாக்கத்தில் மற்றொரு இடத்தில் உள்ள மண்டல கிளை அலுவலகத்திற்கு செல்லுமாறு அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். முன்னதாக மணல் குவாரி ஒப்பந்ததாரர்கள் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி இருந்ததும், இந்த முறைகேட்டில் மாவட்ட ஆட்சியர்களுக்கும் தொடர்பு உள்ளது என அமலாக்கத்துறை குற்றம் சாட்டி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.