Skip to main content

“தமிழகத்தைக் காக்கும் லட்சியவாதிகளாக நீங்கள் இருக்கப் போகிறீர்கள்” - முதல்வர் மு.க. ஸ்டாலின் 

Published on 13/01/2023 | Edited on 13/01/2023

 

CM M.K.Stalin addressed the prize giving ceremony to the students who won the art festival

 

“நாளைய தமிழகத்தைக் காக்கும் லட்சியவாதிகளாக நீங்கள் இருக்கப் போகிறீர்கள்” என பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடத்தப்பட்ட கலைத் திருவிழாவில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்குப் பரிசளிக்கும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

 

தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை சார்பில் மாநில அளவில் அனைத்து மாவட்டங்களிலும் பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்பட்ட கலைத் திருவிழாவில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்குப் பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இவ்விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டார். வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்கி மாணவர்களை வாழ்த்தினார்.

 

இதன்பின் விழாவில் பேசிய முதல்வர், “பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடத்தப்பட்ட போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு வாழ்த்துகள். நீங்கள் பெற்ற வெற்றி என்பது சாதாரண வெற்றி அல்ல. பல்லாயிரக்கணக்கானவர்களோடு போட்டிப் போட்டு வெற்றி பெற்றுள்ளீர்கள். இவ்வெற்றிக்கு உங்கள் துணிச்சலும், அறிவாற்றலும், தன்னம்பிக்கையும் காரணம். இதை வாழ்நாள் முழுமையும் நீங்கள் பயன்படுத்த வேண்டும். குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பாவின் வார்த்தைகளுக்கேற்ப நாளைய தமிழகத்தைக் காக்கும் லட்சியவாதிகளாக நீங்கள் இருக்கப் போகிறீர்கள். அதற்காக நீங்கள் அடைந்திருக்கும் இந்த வெற்றியை முதல்கட்ட வெற்றியாகக் கருத வேண்டும்.

 

மாணவர்களுக்காக ஏராளமான திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. ஒரு போட்டியில் கலந்து கொண்டோம்; வெற்றி பெற்றோம்; பரிசு பெற்றோம் என்று இல்லாமல் தொடர்ச்சியாக மாணவர்கள் போட்டிகளில் பங்கேற்க வேண்டும். படிப்பு முடிந்ததும் வேலைக்குப் போய்விட்டோம். திருமணம் நடந்தது. கை நிறைய சம்பாதிக்கிறோம் என்பதில் நிறைவடைந்து விடாமல் கலைத் தொண்டையும் சேர்த்து அனைவரும் தொடர வேண்டும். மாணவர்கள் அறிவு கலை அறிவாக கல்வி அறிவாக பகுத்தறிவாக வளர வேண்டும்” எனக் கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்