Skip to main content

போட்டித் தேர்வர்களுக்கு மகிழ்ச்சி செய்தி சொன்ன முதல்வர்!

Published on 25/06/2024 | Edited on 25/06/2024
CM gave good news to the competitive candidates!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப் பேரவையில், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு தொடர்பாக விதி 110 இன் கீழ், 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசுப் பணியிடங்கள் வரும் 2026 அம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் நிரப்பப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “இளைஞர் நலனை, இளைஞர் எதிர்காலத்தை, இளைஞர்களின் மேன்மையை எப்போதும் மனதில் வைத்து திட்டங்களைத் தீட்டி வருவது திராவிட மாடல் ஆட்சியின் தனித்தன்மை. இளைய சக்தியை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்திக்கொள்ளும் வகையில், வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் மிக மிகக் கவனமாகச் செயல்பட்டு வருகிறோம். அதனை அடிப்படையாகக் கொண்ட அறிவிப்பைத்தான் இப்போது வெளியிட விரும்புகிறேன். 

CM gave good news to the competitive candidates!

வளமான அரசாக, அமைதியான அரசாக தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது. தொழில் வளம் நிறைந்த தமிழ்நாட்டை உருவாக்கிடவும், அதன்மூலம் நமது இளைஞர்கள் வேலை வாய்ப்புகளைப் பெற்றிடவும் பல்வேறு திட்டங்களைத் தீட்டி வருகிறோம். நமது மாணவச் செல்வங்களுக்குத் தரமான பள்ளிக் கல்வியையும் உயர்கல்வியையும் அளிக்கின்றோம். அத்துடன் அவர்களது வேலைவாய்ப்புகளைப் பெருக்கிடும் வகையில் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன. கல்வியின் மூலமாக ஒரு அறிவுசார் பொருளாதாரத்தை நாம் உருவாக்கி வருகிறோம்.

நம் இளைஞர்கள்தான் நம் பலம். அவர்கள்தான் நமது எதிர்கால வளத்திற்கு அடிப்படையானவர்கள். இதனை உணர்ந்த காரணத்தினால், தமிழ்நாடு அரசு இந்த முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. எனவே அரசுப் பணியினை எதிர்நோக்கி இருக்கும் ஆயிரக்கணக்கான தமிழ்நாட்டு இளைஞர்களுக்குத் தற்போது ஒரு மகிழ்ச்சியான செய்தியினை பேரவையில் தெரிவித்துக் கொள்கின்றேன். 

CM gave good news to the competitive candidates!

வரும் ஜனவரி 2026-க்குள், அதாவது இன்னும் 18 மாதங்களுக்குள் பல்வேறு அரசுப் பணியிடங்களுக்காக, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக 17 ஆயிரத்து 595 பணியிடங்களும், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக 19 ஆயிரத்து 260 ஆசிரியப் பணியிடங்களும், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக 3 ஆயிரத்து 041 பணியிடங்களும், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக 6 ஆயிரத்து 688 பணியிடங்களும் நிரப்பப்படும்.

அதாவது வரும் 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துக்குள் மொத்தம் 46 ஆயிரத்து 584 பணியிடங்கள் நிரப்பப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது தவிர, சமூக நலத்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை உள்ளிட்ட முக்கிய துறைகளில் காலியாக இருக்கக்கூடிய 30 ஆயிரத்து 219 பணியிடங்களும் நிரப்பப்படும். இவற்றை மொத்தமாக சேர்த்துப் பார்க்கையில், 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசுப் பணியிடங்கள் வரும் 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் நிரப்பப்படும் என்பதைத் தங்கள் வாயிலாக மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்தார். 

சார்ந்த செய்திகள்