Skip to main content

வெளிநாட்டில் சோழர் கால சிலை கண்டுபிடிப்பு; போலீசார் தீவிர விசாரணை

Published on 05/09/2023 | Edited on 05/09/2023

 

Chola period statue discovered abroad Police are actively investigating

 

தமிழ்நாட்டுக்கு சொந்தமான சோழர் காலத்தை சேர்ந்த கலிய மர்த்தன கிருஷ்ணர் உலோக சிலையை சுபாஷ் கபூரிடம் இருந்து கடந்த 2005 ஆம் ஆண்டு ரூ.5.2 கோடி மதிப்பில் அமெரிக்காவை சேர்ந்த டக்ளஸ் லாட்ச்ஃபோர்டு என்பவர் வாங்கியது அம்பலமாகியுள்ளது. மேலும் தமிழ்நாட்டில் எந்த கோயிலில் இருந்து கிருஷ்ணர் சிலை திருடப்பட்டது என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

இது குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலிசார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “சென்னை சிலை திருட்டு தடுப்புப் பிரிவு கூடுதல் காவல்துறை இயக்குநர் சைலேஷ் குமார் யாதவ், வெளிநாட்டு அருங்காட்சியகங்கள் மற்றும் கலைக்கூடங்களில் வைக்கப்பட்டுள்ள தமிழக கோயில்களுக்கு சொந்தமான சிலைகளை தனிப்படை அமைத்து வெளிநாட்டு இணையதளங்களை ஆய்வு செய்து கண்டுபிடிக்க உத்தரவிட்டார். அதன்படி சென்னை சிலைதிருட்டு தடுப்புப்பிரிவு காவல்துறை தலைவர் இரா. தினகரன் தலைமையில், சிலைதிருட்டு தடுப்புப்பிரிவு காவல் கண்காணிப்பாளர் இரா. சிவக்குமார் மேற்பார்வையில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திருச்சி பாலமுருகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் மேற்கொண்ட தொடர் முயற்சியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிற்காலச் சோழர் காலத்தைச் சேர்ந்த கலிய கல்கி என்ற கலிய மர்த்தன கிருஷ்ணர் (பாம்பின் மேல் நடனம் செய்யும் கிருஷ்ணர்) உலோக சிலை வெளிநாட்டில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 

இத்தனிப்படையினர் வெளிநாட்டில் தனியார் கலைப்பொருட்கள் சேகரிப்பாளர்களால் நடத்தப்படும் அருங்காட்சியகங்கள், கலைக்கூடங்கள் மற்றும் அருங்காட்சியகங்களின் இணையதளங்களில் விசாரணை மேற்கொண்டபோது 2008 ஆம் வருடம் நவம்பர் மாதம் லூயிஸ் நிக்கல்சன் என்பவரால் பதிவேற்றம் செய்யப்பட்ட கோல்டு ஆப் தீ காட்ஸ் (Gold of the Gods) என்ற ஒரு கட்டுரையைக் கண்டறிந்தனர். அதில் கலிய கல்கி என்ற கலிய மர்த்தன கிருஷ்ணர் (குழந்தை கிருஷ்ணர் காளிங்கன் எனப்படும் பாம்பின் மேல் நடனமாடும் நிலையில் உள்ள உலோக சிலையின் புகைப்படத்தை அந்த வலைதளத்தில் கண்டறிந்தனர். பின்னர் பல்வேறு இணையதளங்களில் இச்சிலை குறித்த தகவல்களை தனிப்படையினர் மேலும் சேகரிக்கத் தொடங்கினர். அப்போது இது குறித்த கட்டுரை ஒன்று 27.09.2019 அன்று இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருத்ததைக் கண்டுபிடித்தனர்.

 

அக்கட்டுரையில் டக்ளஸ் லாட்சிஃபோர்டு என்பவர் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்தவர் என்பதும் அவர் கம்போடியா, இந்தியா, தென் கிழக்கு ஆசியா மற்றும் இதர நாடுகளில் உள்ள தொன்மை வாய்ந்த கலைப்பொருட்கள் மற்றும் சிலைகளை சேகரிக்கும் பழக்கம் உள்ளவர் என்பதும் அத்துடன் பன்னாட்டு கள்ளச்சந்தையில் விற்பது மற்றும் வாங்குவது போன்ற செயல்களை செய்யக்கூடியவர் என்பதும் தெரிய வந்தது. தொடர்ந்து விசாரணை செய்தபோது, கலிய கல்கி என்ற கலிய மர்த்தன கிருஷ்ணரின் உலோக சிலை தற்சமயம் அமெரிக்காவில் உள்ள எச்.எஸ்.ஐ. என்ற அமைப்பின் வசம் இருப்பதையும் தனிப்படையினர் கண்டறிந்தனர். மேலும் தனிப்படையினரின் விசாரணையில் டக்ளஸ் லாட்ச்ஃபோர்டு (2020 ஆம் ஆண்டு இறந்து விட்டார்) இச்சிலையை சுபாஷ் சந்திர கபூரிடமிருந்து 2005 ஆம் ஆண்டு 6.50,000 அமெரிக்க டாலருக்கு (இந்திய மதிப்பு ரூபாய் 52 கோடி) வாங்கியதும் இதற்கு நான்சி வைனர் என்ற சிலை மதிப்பீட்டாளர் சுபாஷ் சந்திர ஈடிருக்கு இச்சிலை சம்பந்தமான போலி ஆவணங்கள் தயாரிப்பதற்கு உதவியதும் தெரிய வந்தது.

 

Chola period statue discovered abroad Police are actively investigating

 

தொடர் விசாரணையில், இந்த உலோக சிலையானது பிற்காலச் சோழர் காலமான 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்பதும் தமிழ்நாட்டைச் சேர்ந்தது என்பதும் தெரிய வந்துள்ளது. இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது, இந்த கலிய கல்கி என்ற கலிய மர்த்தன கிருஷ்ணரின் சிலை 2005 ஆம் ஆண்டுக்கு முன்னர் சுபாஷ் சந்திர கபூர் மற்றும் அவரது கூட்டாளிகளால் தமிழ்நாட்டிலிருந்து ஏதேனும் ஒரு கோயிலில் இருந்து திருடப்பட்டு விற்கப்பட்டிருக்கலாம் என்பது உறுதியாகிறது.

 

எந்த கோவிலிலிருந்து இந்த சிலை திருடப்பட்டது என்பதை அறிய தீவிர புலன் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக காவல் ஆய்வாளர் காவேரியம்மாள் கொடுத்த அறிக்கையின் பேரில் சிலை திருட்டு தடுப்பு பிரிவு தலைமையகத்தில் குற்ற எண்.11/2023 ச.பி. 380(2), 411(2), 465, 471 மற்றும் 120(8) இத.சன் படி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. மேல் விசாரணை மத்திய மண்டல கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோபாலமுருகன் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தனிப்படையினரின் இச்சிறப்பான முயற்சியினை சிலை திருட்டு தடுப்புப் பிரிவு, கூடுதல் காவல்துறை இயக்குநர் சைலேஷ் குமார் யாதவ் வெகுவாகப் பாராட்டினார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்