புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், கரோனா காலத்தில் முடக்கப்பட்ட அனைத்து சலுகைகளையும் திரும்ப வழங்க வேண்டும், சிறப்பு காலமுறை ஊதியம், தொகுப்பூதியம், ஒப்பந்தம், தினக்கூலி ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.ரயில்வே, பாதுகாப்புத்துறை, காப்பீடு, பி.எஸ்.என்.எல்.,போன்ற பொதுத்துறைகளை தனியாருக்கு விற்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் நவம்பர் 26- ஆம் தேதி பொது வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு ஊழியர்கள் சங்கத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர். இதில் தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஊழியர் சங்கங்கள் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் அனைத்து துறைச் செயலாளர்களுக்கும், அனைத்து துறைத் தலைவர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், 'நவம்பர் 26- ஆம் தேதி அனைத்து அரசு ஊழியர்களும் பணிக்கு வர வேண்டும். நவம்பர் 26- ஆம் தேதி பணிக்கு வராத அரசு ஊழியர்களுக்கு அன்றைய தினத்திற்கான ஊதியம் வழங்கப்படாது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.