Skip to main content

கல்லணையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆய்வு!!

Published on 11/06/2021 | Edited on 11/06/2021

 

Chief Minister MK Stalin's inspection at the Kallanai

 

திருச்சி, தஞ்சை, சேலம் ஆகிய மாவட்டங்களில் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் கரோனா தடுப்புப் பணிகள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ள இருக்கும் நிலையில், ''திருச்சி, தஞ்சை, சேலம் மாவட்டங்களில் நான் மேற்கொள்ள இருப்பவை முழுவதும் அரசு சார்ந்த பணிகள். என்னை நேரில் சந்திக்க ஆர்வம் காட்ட வேண்டாம்'' என நேற்று (10.06.2021) தெரிவித்திருந்தார்.

 

இந்நிலையில், இன்று காலை தஞ்சை வந்த மு.க.ஸ்டாலின், கல்லணையில் நடந்துவரும் மராமத்துப் பணிகளை நேரில் ஆய்வுசெய்தார். அவருடன் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

 

காவிரி டெல்டா மாவட்டங்களான திருச்சி, கரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகை, அரியலூர் ஆகிய மாவட்டங்களில் சுமார் 65 கோடியே 10 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் 647 இடங்களில் தூர்வாரும் பணிகள் நடைபெற்றுவருகிறது. குறிப்பாக 4,960 கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்தப் பணிகள் நடந்துவருகிறது. நாளை மு.க.ஸ்டாலின், டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையைத் திறந்துவைக்க உள்ளார்.

 

அந்தத் தண்ணீரானது அடுத்த மூன்று நாட்களில் திருச்சிக்கும் அதற்கடுத்த நாளில் தஞ்சைக்கும் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால்  டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி தொடரும். தற்போது டெல்டா மாவட்டங்களில், தஞ்சாவூரில் ஒரு லட்சத்து 5 ஆயிரம் ஏக்கரும், திருவாரூரில் 87,700 ஏக்கரும், நாகையில் 4,500 ஏக்கரும், மயிலாடுதுறையில் 96,800 ஏக்கரும், திருச்சியில் 10,600 ஏக்கரும், அரியலூரில் 4,900 ஏக்கரும், கடலூரில் 40,500 ஏக்கருக்கு என மொத்தம் 3 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் குறுவை சாகுபடி செய்வதாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்