Skip to main content

அரசு பங்களாவுக்கு மாறுகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்! 

Published on 13/05/2021 | Edited on 13/05/2021

 

Chief Minister MK Stalin shifts to government bungalow!

 

சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள சித்தரஞ்சன் சாலை பங்களாவில் வசித்துவருகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்! அங்கிருந்து அரசு பங்களாவுக்கு அவர் இடமாறவிருக்கிறார் என்கிறது அறிவாலய வட்டாரம்!

 

சென்னை பசுமைவழிச் சாலை பகுதிகளில் தமிழக அமைச்சர்களுக்கான அரசு பங்களாக்கள் இருக்கின்றன. இந்த அரசு பங்களாக்களில்தான் முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வராக  இருந்த ஓ. பன்னீர்செல்வமும் வசித்தனர். கலைஞர், ஜெயலலிதா இருவரும் முதல்வராக இருந்தபோது, அவரவர்களின் சொந்த வீட்டில் இருந்தபடியே ஆட்சியை நடத்திவந்தனர். அரசு பங்களாக்களில் இவர்கள் குடியேறவில்லை. அவர்களின் பங்களாக்களே முதல்வரின் கேம்ப் அலுவலகமாகவும் இயங்கி வந்திருக்கின்றன.

 

இந்த நிலையில், சித்தரஞ்சன் சாலை பங்களாவிலிருந்து அரசு பங்களாவுக்கு இடமாறலாமா? என்று ஆலோசித்துவருகிறார் மு.க. ஸ்டாலின். இதுகுறித்து நம்மிடம் பேசிய கோட்டை அதிகாரிகள், ’’ஒருநாளைக்கு சராசரியாக 20 மணி நேரம் உழைத்துவருகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின். அமைச்சர்களுடன் ஆலோசனை, உயரதிகாரிகளுடன் ஆலோசனை, காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை என்று ஏகப்பட்ட ஆலோசனைகள் நடத்திவருகிறார். இத்தகைய ஆலோசனைகளுக்காக அரசு பங்களாவில் குடியேறத் திட்டமிட்டிருக்கிறார் ஸ்டாலின். அரசின் நிர்வாகத்தைக் கவனிக்கவும், அமைச்சர்களை அவசர ஆலோசனைகளுக்காக அழைத்து விவாதிக்கவும் என பல்வேறு சூழல்களுக்கு அரசு பங்களாதான் வசதியாக இருக்கும் என்று அவர் கருதுகிறார். அதனால் விரைவில் அரசு பங்களாவுக்கு மாறுகிறார். 

 

கலைஞர் தலைமையிலான 2006 - 2011 ஆண்டு வரையிலான ஆட்சி காலத்தில் துணை முதல்வராகவும், உள்ளாட்சித் துறை அமைச்சராகவும் இருந்த ஸ்டாலின், அரசு பங்களாவான குறிஞ்சி இல்லத்தில்தான் தங்கியிருந்தார். அதே குறிஞ்சி இல்லத்தில் தங்கி அரசு பணிகளைக் கவனிக்கத் திட்டமிடுகிறார் ஸ்டாலின்.

 

கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில், இந்தக் குறிஞ்சி இல்லம், சபாநாயகராக இருந்த தனபாலுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. தற்போதுவரை அந்த இல்லத்தில்தான் இருக்கிறார் தனபால். அந்தப் பங்களாவைக் காலிசெய்து கொடுக்குமாறு அரசு தரப்பிலிருந்து தனபாலுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பங்களா காலியானதும் அதனைப் புனரமைக்கும் பணிகளைப் பொதுப்பணித்துறையினர் கவனிக்கவிருக்கிறார்கள்‘’ என்கின்றனர் அதிகாரிகள்.

 

குறிஞ்சி இல்லம் முதல்வரின் விருப்பத்திற்கேற்ப மாற்றியமைக்கப்பட்டப் பிறகு, அந்த இல்லத்திற்கு முதல்வர் இடம் மாறுவார். இந்த அரசு பங்களா, முதல்வரின் முகாம் அலுவலகமாக மட்டுமே செயல்படும் என்று சொல்லப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்