Skip to main content

எச்.ராஜா நேரில் ஆஜராகும்படி தமிழக தலைமை வழக்கறிஞர் சம்மன்...

Published on 18/09/2018 | Edited on 18/09/2018

 

hraja

 

நீதிமன்றத்தை பற்றி அவதூறாக பேசியது குறித்து நேரில் ஆஜராகி விளக்கமளிக்க எச்.ராஜாவுக்கு தமிழக தலைமை வழக்கறிஞர் விஜய நாராயண் சம்மன் அனுப்பியுள்ளார். 

 

புதுக்கோட்டை மாவட்டம் மெய்யபுரம் அருகே உள்ள பள்ளிவாசல் பகுதியில் விநாயகர் சிலை ஊர்வலத்திற்காக மேடை அமைக்க பாஜகவினர் அனுமதி கேட்டுள்ளனர்.  மசூதி இருக்கும் இடம் என்பதால், உயர்நீதிமன்ற அறிவுறுத்தலின்படி பாஜகவிற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 

இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்த பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா அங்கு மேடை அமைக்கப்படாமல் இருந்ததை கண்டு ஆவேசமாகி,  அங்கிருந்த போலீசுடன் வாக்குவாதம் செய்துள்ளார்.   இந்த சம்பவம் குறித்த வீடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் பரவியது.

 

போலீசையும், நீதிமன்றத்தையும் மதிக்காமல் ராஜா பேசப்பேச, அவரை போலீசார் சமாதானம் செய்வதாக உள்ளது அந்த வீடியோ  பதிவு.   நீதித்துறையையும், காவல்துறையையும் அவதூறாக பேசிய இந்த வீடியோ பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில்,  எச்.ராஜாவை சிறையில் அடைக்க வேண்டும் பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர்.  

 

புதுக்கோட்டை திருமயம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. திருமயம் போலீசார் ராஜா மீது  சட்டவிரோதமாக கூடுதல்,  அரசு ஊழியரின் கடமையை செய்ய விடாமல் தடுத்தல்,  அரசு ஊழியரின் உத்தரவை மதிக்காமல் பேசுதல்,  பிற மதத்தினரை புண்படுத்தும் விதமாக பேசுதல், ஆபாசமாக பேசுதல் (143 ,188 ,153 (A),290, 294 (b) 353 ,505 (1 )(b )(c ),506 (I)IPC) உள்ளிட்ட  8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து எச். ராஜாவை பிடிக்க 2 காவல் ஆய்வாளர்கள் தலைமையில் 10 பேர் கொண்ட இரண்டு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நீதிமன்றத்தை பற்றி அவதூறாக பேசியது குறித்து அக்டோபர் 3 அன்று மாலை  4.30 மணிக்கு நேரில் ஆஜராகி விளக்கமளிக்க எச்.ராஜாவுக்கு தமிழக தலைமை வழக்கறிஞர் விஜய நாராயண் சம்மன் அனுப்பியுள்ளார். 

சார்ந்த செய்திகள்